குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 - கயா
வாரணாசியிலிருந்து கயா நோக்கி:
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 - வாரணாசி என்னும் காசி யின் தொடர்ச்சி இந்தப் பகுதி. சென்ற பகுதியில் காசியில் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களை முடித்துவிட்டு 31.5.2024 மாலை 6 மணிக்கு கயாவிற்குக் கிளம்பியதைப் பற்றி பார்த்தோம். எங்களைக் கூட்டிச் செல்ல நாங்கள் புக் செய்திருந்த 'அர்பேனியா' வேன் வந்திருந்தது. கௌஷிக் அவர்கள் ஏற்பாடு செய்தபடி எங்களுடன் 'அவினாஷ்' என்பவர் கயாவிற்கு வந்தார்.
உத்திரப்பிரதேச மாவட்டத்தில் உள்ள காசியிலிருந்து பீகார் மாவட்டத்தில் உள்ள கயை கிட்டத்தட்ட 250 கி.மீ தொலைவில் உள்ளது. எனவே ஒரு 5.30 மணி நேரத்தில் சென்று விடலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்களில் சிலருக்கு உடம்பு முடியவில்லை. வாந்தி, 'டீ ஹைட்ரேஷன்' என்று படுத்தவே வழியில் ஒரு இடத்தில் வேனை நிறுத்தி ரெஸ்ட் எடுத்துக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்தோம். அங்கு ஒரு ஏசி ரூம் கிடைக்க வேறு யாருமே இல்லை சிறிது நேரம் அங்கிருந்த பெஞ்சில் பெரியவர்களை சிறுது நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொன்னோம். வேண்டும் என்பவர்களுக்குத் தேவையான டீ, காஃபி, மோர் என்று குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும் போது சிறுது நேரம் ஆகிவிட்டது. ஆனால் இது மிகத் தேவையான ப்ரேக் தான். உத்திரப்பிரதேசத்திலிருந்து பிஹார் செல்லும் வழியையும் கங்கை மீது அமைந்துள்ள பாலத்தையும் ரசித்து படம் பிடித்தபடி போகும் போதே இருட்ட ஆரம்பித்துவிட்டது. எங்களில் பலருக்கு தூக்கம் வந்துவிட்டது. முன் சீட்டில் அமர்ந்திருந்த அவினாஷும் தூங்க ஆரம்பித்துவிட்டார். சிறிது நேரத்தில் ட்ரைவரும் தூக்கக் கலக்கத்தில் ஓட்ட கௌரியும் சாரதாவும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தவில்லையாம். இது ஒரு பயமானா அனுபவமாகத்தான் இருந்திருக்கிறது. கௌரி தொடர்ந்து பேசிக் கொண்டு வந்ததில் நிலைமையை சமாளிக்க முடிந்தது.



கயா:
நாங்கள் கயாவை அடைந்த போது இரவு 10.30 மணி ஆகிவிட்டது. எங்களுக்கு பித்ரு காரியங்கள் செய்வதற்கு 'பிரசாத் பவன்' என்னும் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார் கௌஷிக் வாத்தியார். 'விஷ்ணு வ்யூ' என்னும் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அங்கு 4 ஏசி ரூம்கள். மிகவும் அருமையாக இருந்தது. நான், சாரதா, கௌரி ஒரு ரூமிலும், கிரிஜா மன்னி, விஜயா அக்கா ஒரு ரூமிலும் தங்கினோம். அது போலவே அண்ணாவும் சுந்தர் மாமாவும் ஒரு ரூமிலும் ஜெயராமன், சீதாராமன், ரகுராமன் ஒரு ரூமிலும் தங்கினார்கள். இங்கு பிரிவினை பிரச்சனை எதுவும் இல்லை. பீஹாரில் இப்படி ஒரு வசதியான ஹோட்டலை நாங்கள் எதிர் பார்க்கவில்லை என்பது நிஜம். எல்லாம் ஒழுங்காக வேலை செய்தது.
நாங்கள் லக்கேஜ்களை வைத்து விட்டு இரவு உணவு சாப்பிட பிரசாத் பவனுக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு சப்பாத்தி சப்ஜி செய்திருந்தார்கள். சாப்பிட்டு விட்டு ஹோட்டலுக்கு வந்து நங்கு தூங்கி விட்டோம்.
1.6.2014 காலை 5 மணிக்கு எழுந்தோம். ரூமிலேயே கெட்டில் டெ பால் மற்றும் காஃபி பேக்கெட்ஸ் இருந்ததால் நான் ப்ளேக் டீயும் கௌர் காஃபி யும் குடித்தோம். பிறகு ஒவ்வொருவராக குளித்து ரெடியானோம். 3 பேருக்கு ஒரு பாத்ரூம். எத்தனை ஆடம்பரமான வசதி? மடிசாருடன் நாங்கள் ரெடியாக ஆண்கள் பஞ்ச கசத்துடன் ரெடியானார்கள்.
எங்கள் லக்ஸுரி ஹோட்டல் ஸ்டே ஒரே இரவு தான். அந்த ரூமில் ஒரு ஃபோட்டோ க்ளிக் பண்ணிக்கொண்டு பேக் செய்த ல்க்கேஜுடன் பிரசாத் பவனுக்குக் கிளம்பினோம்.
.png)
பிரசாத் பவனில் எங்களுக்கு 2 ரூம்கள் கொடுத்திருந்தார்கள். லக்கேஜ்களை ஒரு ரூமில் வைத்தோம். 5 தம்பதிகளுக்கும் பிண்டம் பிடிப்பதற்கு 5 பாத்திரங்களில் அன்னம் கொடுத்தார்கள். அதனை எடுத்துக் கொண்டு 'பல்குனி' என்னும் புனித நதியினை நோக்கிப் பயணித்தோம்.
பல்குனி நதி:
பல்குனி நதியில் நீர் அதிகம் இல்லை. இருக்கும் நீரும் இறங்கி குளிக்கும் நிலையில் இல்லை. அங்கு கரையிலேயே 'அடிபம்ப்' இருக்கிறது. அதை அடித்து வரும் நீரினை தலையில் ப்ரோக்ஷணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். பல்குனி நதிக்கரையிலேயே ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கு எங்களுக்கு பித்ரு காரியங்கள் செய்து வைத்தவர் கணபதி ஆச்சாரியார்.
நான், சாரதா, கௌரி, கிரிஜா மன்னி மற்றும் விஜயா அக்கா 5 பேரும் கொண்டு சென்ற அன்னத்தில் முதலில் 17 பிண்டங்கள் பிடித்தோம். கணபதி ஆச்சாரியாரின் வழிகாட்டுதலில் அந்த 17 பிண்டங்களை வைத்து எங்கள் கணவர்கள் முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி பிரார்த்தனை செய்து பிண்டப் பிரதானம் செய்தார்கள். இது பல்குனி நதியில் செய்யும் பிண்டப்பிரதானம்.
மீதமிருக்கும் அன்னத்தில் இரண்டு 64 பிண்டங்கள் அதாவது மொத்தம் 128 பிண்டங்களும் நிவேதனம் செய்வதற்கு ஒரு பெரிய காக்காய் பிண்டமும் பிடிக்கச் சொன்னார் ஆச்சாரியார். அதன் படி நாங்கள் பெண்கள் பிடிக்க ஆரம்பித்தோம்.
எங்களுக்கு அருகில் இன்னொரு குடும்பமும் எங்களைப் போலவே பிண்டம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசியதில் அவர்கள் குடும்பத்திலும் பலருக்கு வாந்தி, டீஹைட்ரேஷன் என்று படுத்தியதாகவும், சிலர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் பட்டு ட்ரிப்ஸ் ஏற்றி வந்ததாகவும் கூறினார்கள். அவர்கள் பாட்டிலில் எலெக்ட்ரால் கரைத்து கையில் வைத்திருந்தார்கள். அத்தனை வெய்யில். தண்ணீர், சாப்பாடு எல்லாமே நமக்கு ஒத்துக்கொள்வது கஷ்ட்டமாகத்தான் இருக்கிறது. எனவே எலெக்ட்ரால். க்ளுக்கோஸ் இப்படி எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்.
அந்த 'எலெக்ட்ரால்' நீரை அவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டது அவர்களது பெருந்தன்மை. அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அதனை நாங்கள் அண்ணா, மாமா எல்லாருக்கும் கொடுத்தோம். அது மிகவும் உதவியாக இருந்தது.
விஷ்ணு பாதம்:
பல்குனி நதிக்கரையில் தான் 'விஷ்ணு பாதம்' என்னும் இடம் இருக்கிறது. விஷ்ணு பாதத்தில் செய்யப்படும் பிண்டப் பிரதானத்தினையும் அந்த மண்டபத்திலேயே . செய்து வைக்கிறார்கள். நாங்கள் பிடித்திருந்த முதல் 64 பிண்டங்களை எடுத்துக் கொண்டு எங்களையும் பூஜையில் கலந்து கொள்ளச் சொன்னார் கணபதி அவர்கள்.
ஒரு சிலிர்ப்பான அனுபவம் இது. இதனை வார்த்தையில் வடிப்பது எளிதல்ல. என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன். நம் நம்பிக்கையின் படி நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் கயாவில் வந்து தன் குடும்பத்தினர் வருகைக் காகக் காத்திருக்குமாம். சித்தப்பா, அத்தை, மாமா, அத்திம்பேர், உற்றார், உறவினர் இப்படி கணவன் மனைவியின் குடுபத்தினர் மட்டுமில்லாமல், ஆசிரியை, ஆசிரியர்கள், நெருங்கிய நண்பர்கள், நாய், பூனை, செடி, கொடி, மரம் என்று நம்மை விட்டுப் பிரிந்த எல்லா ஆன்மாக்களின் பெயர்களையும் எழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி பிண்டம் வைக்கும் போது நம் கண்கள் கலங்கி நெஞ்சம் நெகிழ்வதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
இதில் அம்மாவிற்காக பிண்டம் போடும் போது 'அம்மா' 'அம்மா' என்று கதறி அழாதவர்களைப் பார்ப்பதே அரிது. அம்மாவின் அருமை பெருமைகளை ஸ்லோகமாகச் சொல்லி அதன் அர்த்தத்தை தமிழில் சொல்கிறார் கணபதி ஆச்சாரியார். கருவில் நாம் இருக்கும் போது எத்தனை கஷ்டங்களை அனுபவித்து என்னை வளர்த்தாய் அம்மா. உன்னை வயிற்றில் உதைத்த போதும் நான் கொடுத்த உபாதைகளைப் பொறுத்துக் கொண்டு சிரித்து என்னைப் பேணிக்காத்தாயே அம்மா. உட்காரவும் நடக்கவும் நிற்கவும் உண்ணவும் உறங்கவும் 10 மாதங்கள் கஷ்ட்டப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது என்னைத் தாங்கிச் சுமந்தாயே அம்மா. என்னை சீரும் சிறப்புமாகப் பெற்றெடுத்து பள்ளிக்கு அனுப்பி, உணவு ஊட்டி, தேவையானதை செய்து, அப்பாவிடம் சிபாரிசு செய்து வேண்டியதை வாங்கிக் கொடுத்து என்னை ஆளாக்கினாயே அம்மா உனக்குப் இந்தப் பிண்டம் என்று சொல்லிச் சொல்லி பிண்டம் போடும் போது தாய்மையின் புனிதமும் தாய்க்கு நிகர் வேறில்லை என்பதும் நிதர்சனமாகப் புரிகிறது. கலங்காத நெஞ்சமும் கலங்கிடும் அனுபவம் இது. கடைசிப் பிண்டம் எல்லா ஆன்மாக்களும் 'அவன் தாள்' அடையப் பிரார்த்தித்து இடப்படும் பிண்டமாகும்.
அங்கிருந்து பல்குனி நதிக்கரையில் இருக்கும் விஷ்ணு பாதம் என்னும் கோவிலுக்குச் சென்றோம்.


கயாசுரன் என்னும் அசுரனை விஷ்ணு தன் காலால் மிதித்து சம்ஹாரம் செய்த இடம் இது. அங்கு 40 செமீ நீளத்தில் பாதம் ஒன்றைக் காணலாம். அசுரனை அழித்ததும் தன் காலால் அவனை பூமிக்குக் கீழே அழுத்தியதால் பாறையில் ஏற்பட்ட விஷ்ணுவின் பாத அச்சு அது என்கிறது வரலாறு. அந்த விஷ்ணு பாதத்தில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தீபு என்பவர் ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி எங்களைத் திருப்பிச் சொல்லச் சொன்னார் நாங்கள் எல்லாரும் சொன்னதும் கோவிலில் பூஜை செய்து எங்கள் எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்தார். நாங்கள் விஷ்ணுபாதத்தை தொட்டு வணங்கி வேண்டிக் கொண்டு நாங்கள் பிடித்திருந்த இன்னொரு 64 பிண்டம் மற்றும் ஒரு பெரிய காக்காய் பிண்டத்தையும் எடுத்துக் கொண்டு பிரசாத் பவன் நோக்கிப் புறப்பட்டோம்.
பிரசாத் பவனில் ஹோமம்:
பிரசாத் பவனுக்கு வந்ததும் சுந்தர் மாமாவே எங்களுக்கு ஹோமம் வளர்த்து பூஜை செய்து வைத்தார். அவரும் நாங்களும் கிரமமாக, திருப்தியாக செய்தோம்

பூஜை முடிந்ததும் சுந்தர் மாமா 6 பிராமணர்களுக்கும், நாங்கள் 4 சகோதரர்களும் ஒரு தம்பதி 2 பிராமணர்கள் வீதம் 8 பிராமணர்களுக்கும் சாப்பாடு போட்டு மரியாதை செய்தோம். இங்கும் பிராமணர்கள் விரும்பி சாப்பிட்டது மாம்பழ பச்சடி, பூரி, கூட்டு வடை தான். அன்னம் அவர்களது விருப்ப உணவாக இல்லை. பிறகு மாமா 6 பிராமணர்களுக்கும், நாங்கள் 4 சகோதரர்களும் 8 பிராமணர்களுக்கும் சம்பாவனை செய்து வஸ்திரம், வைத்துக் கொடுத்து மரியாதை செய்தோம்.

அதன் பின் நாங்கள் எங்கள் ரூமிற்கு சென்று அக்ஷய வடம் என்னும் மரத்தடியில் செய்ய வேண்டியவை பற்றியும் விட வேண்டிய காய் கறிகள் பற்றியும் விவாதித்து, மறுத்து, 10 பேரும் முழு மனதுடன் ஒப்புக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தோம். பிறகு பிராசாத் பவனிலிருந்து பூரி, வடை, அப்பம், முன்பே நாங்கள் பிடித்து வைத்திருந்த 64 பிண்டம், ஒரு பெரிய காக்காய் பிண்டம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு 'அக்ஷய வடம்' என்னும் புகழ் பெற்ற இடத்திற்குச் சென்றோம்.
அக்ஷய வடம்:
அக்ஷய வடம் என்பது பல யுகங்களாக நிலைத்து தழைத்து ஓங்கி நிற்கும் பெரிய புனித ஆலமரம். சீதா தேவி இந்த ஆலமரத்தடியில் பித்ருக்களுக்கு போஜனம் செய்வித்ததாகவும் ஆலிலைக் கிருஷ்ணர் துயிலும் இலை இந்த ஆல மரத்தின் இலை தான் என்பது நம்பிக்கை. இந்த ஆல மரத்தின் வேர் பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்திலும் நடு பாகம் காசி என்னும் வாரணாசியிலும் உடல் பாகம் கயாவிலும் இருப்பதாக ஐதீகம்.

உடல் பாகம் இருக்கும் இந்த அக்ஷய வடத்தின் அடியில் கணபதி ஆச்சாரியார் வழிகாட்டுதலில், நாங்கள் கொண்டு சென்றிருந்த 64 பிண்டங்களை பித்ருக்களுக்குப் படைத்தோம். விஷ்ணு பாதத்தில் செய்தது போலவே நமைப் பிரிந்து சென்ற தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, உற்றார், உறவினர், ஆசிரியர்கள், நண்பர்கள், பிராணிகள் என்று எல்லாருக்கும் பிண்டம் படைத்து மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டோம். இரண்டு இடங்களிலும் என் சித்தப்பா மற்றும் அத்தை பையன் கணேசன் பெயரைச் சொன்ன போது கூடுதலாக மனம் நெகிழ்ந்து உருகியது உண்மை. என்னுடைய சித்தப்பா சுந்தர் மாமாவின் நெருங்கிய நண்பர். அவரும் என் சித்தப்பாவிற்காக பிண்டம் வைத்தது மனதைத் தொட்டது. கொண்டு சென்றிருந்த காக்காய் பிண்டம், பூரி, வடை மற்றும் அப்பத்தை நிவேதனம் செய்து வேண்டிக்கொண்டோம்.



அப்பொழுது அங்கு ஒரு பிராமணரை அழைத்து வந்து வாரணாசி, காசி மற்றும் கயாவில் நாங்கள் செய்த பித்ரு காரியங்கள் நன்றாக முடிந்ததா? திருப்தியாக நடந்ததா? என்று அவரிடம் கேட்கச் சொல்கிறார் கணபதி ஆச்காரியார். அவர் 'திருப்தி' என்று சொன்னதும் தான் நாம் செய்த எல்லா பித்ரு காரியங்களும் திருப்தியாக நிறைவடைந்ததாக அர்த்தம். அவரிடம் கேட்டு அவர் திருப்தி என்று சொன்னதுமே நமக்குள் பெரிய பொறுப்பை, கடமையை நிறைவாகச் செய்த மனத் திருப்தி ஏற்படுகிறது.
பிரயாகையில் முண்டம் (முடி எடுத்தல்) காசியில் தண்டம் (தண்டபாணி பைரவர் கையிலுள்ள தண்டத்தால் நமை ரக்ஷிசித்தல்). கயாவில் பிண்டம் என்று முன்பே நாம் பார்த்திருந்தோம். நம் உற்றார் உறவினர் மற்றும் எல்லா ஆன்மாக்களுக்கும் கயாவில் பிண்டம் இட்டால் அந்த ஆன்மாக்கள் கடவுள் அடி சேரும் என்பது நம்பிக்கை என்பதால் தான் கயாவில் பிண்டம் என்கிறோம்.
இந்த அக்ஷய வடத்தில் கீழ் அமர்ந்து பித்ரு காரியங்களை சிரத்தையாக நிறைவேற்றியதும் நாம் எல்லாரும் நமக்குப் பிடித்த ஒரு காய், ஒரு பழம் மற்றும் ஒரு இலையை விட்டு விட வேண்டும். அது சிரார்தத்திற்கு சமைக்கும் காயாக இருக்கவேண்டும். 'விட்டு விட வேண்டும்' என்றால் நம் வாழ் நாளில் அந்த காய், கனியை சாப்பிடவே கூடாது. விட்ட இலையில் பதார்த்தங்களை வைத்து உண்ணக் கூடாது. ஆல மரத்தடியில் நாங்கள் விட்ட இலை ஆல இலை. என்ன காய்? என்ன பழம்? நாங்கள் விட்டது? நாம் சற்றே பின்னோக்கிச் சென்று வரும் வரை யோசியுங்கள்.
நாங்கள் 5 தம்பதிகளுமே முன்பே என்ன காய் என்ன பழத்தை விடுவது என்று பிரசாத் பவன் ரூமிலேயே பேசி வைத்துக் கொண்டோம்.
அங்கு எங்களிடையே நடந்த உரையாடல் இங்கே:
என்ன காய் வேணா விடலாமா?
வெங்காயம், உருளைக்கிழங்கு, நூல்கோல் இப்படியெல்லாம் விடக் கூடாது. சிரார்த்த காயா இருக்கணும்.
எல்லாரும் அதையே தான் விடணுமா?
நம்மளே பத்து பேர் இருக்கோம். ஆளுக்கு ஒரு காய்னு பத்து காய்களை விட்டுட்டா சிரார்தத்துல பிராமணாளுக்கு வெறும் அன்னத்தையா போடறது?
சரி, கொத்தவரங்காய விட்டுடலாமா?
நோ, நோ,நோ, நோ கொத்தவரங்காய்ல ஃபைபர், பொட்டசியம், இரும்புச் சத்துன்னு அவ்வளவு சத்து நிறைஞ்சு இருக்கு, அதப் போய் விட்டுட்டா வயசான காலத்துல எத தான் சாப்பிடறது?
சரி, சரி, பாகற்காய விட்டா என்ன?
டாக்டர்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லாத ஒரே காய் பாகற்காய் தான். அதையும் விட்டுட்டா? அதுவும் உடம்புக்கு ரொம்ப நல்லது. எல்லா சத்தும் இருக்கு, பாகற்காய விட வேண்டாம்.
கோவக்காய், அவரைக்காய் எல்லாம் தப்பித்துவிட (இல்லை இல்லை எங்கள் உணவில் மாட்டிக்கொள்ள) மாட்டியது (இல்லை இல்லை எங்கள் வாயிலிருந்து தப்பித்தது என்று சொல்ல வேண்டுமோ) புடலங்காய் தான்.
9 வோட்டுகளைப் பெற்ற புடலங்காய் சாரதாவின் வோட்டைப் பெற மிகவும் போராட வேண்டி இருந்தது. அது அவளுக்கு பிடித்த காய் என்றில்லை. அவள் வேலைக்குச் செல்லும் முன் வெகு வேகமாக 'கட்' செய்துவிட்டு ஓடிவிடலாம் நேரம் அதிகமாகாது என்பது அவளது வாதம். அது எடுபடாமல் போய்விட வேறு வழி இல்லாமல் அவளும் தன் வோட்டைப் பதிக்க புடலங்காய் எங்கள் வாழ்விலிருந்து வெளியேறத் தயாரானது.
அடுத்து பழங்கள். முக்கனிகளான மா, பலா. வாழையை விடக்கூடாது என்றார்கள். (அப்பாடா!!! இது எல்லாருடைய மைண்ட் வாய்ஸாக இருந்தது). ஸ்ட்ரா பெர்ரி, ப்ளேக் பெர்ரி எல்லாம் சொல்லக் கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள். ஏக மனதாக எலந்தப் பழம் என்று முடிவு பண்ணினோம்.
வாழை இலையை விடக்கூடாது. இலை ஆல் இலை என்பதை கௌஷிக் வாத்தியாரே சொல்லிவிட்டார்.
உண்மையில் எனக்குப் பிடித்த காய் புடலங்காய். இலந்த பழத்தை விட இலந்தவடை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே பிடித்ததை விட முடிவெடுத்ததில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் சந்தோஷம். எல்லாருக்கும் அதுவே.
இவை எல்லாம் உணவின் மீது நமக்கு இருக்கும் ஆசையை கட்டுப்பாட்டில் வைக்கவும் நம் மன உறுதியை அதிகரிக்கவும் மிகவும் உதவிடும் பழக்கங்களாகும்.
பிரசாத் பவன் ரூம் உரையாடலிலிருந்து மீண்டும் அக்ஷய வடத்திற்கு வருவோம்.
கணபதி அவர்கள் எங்களிடம் நீங்கள் வாழ்நாளில் விட நினைக்கும் காயின் பெயரைச் சொல்லுங்கள். இனி வாழ்நாளில் இனி அதை சாப்பிடக் கூடாது என்று சொல்ல நாங்கள் நான்கு தம்பதிகளும் சுந்தர் மாமா விஜயா அக்கா தம்பதியும் ஒரு சேர புடலங்காயைச் சொன்னோம். அதே போல் இலந்தப் பழம் மற்றும் ஆல இலையின் பெயரையும் சொல்லி அக்ஷய மரத்தடியில் அந்த மரத்தையே சாட்சியாக வைத்து இனி வாழ்வில் இவற்றை உபயோகிப்பதில்லை என்று விட்டு விட்டோம். எனவே எங்களை உங்கள் வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டால் ஆல இலையில் இலந்தபழம், இலந்தவடை, புடலங்காய் பரிமாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்துடன் காசியாத்திரையில் எல்லா பித்ரு காரியங்களும் இந்த அக்ஷய வடத்தில் மனதுக்குத் திருப்தியாய் நிறைவடைந்தது. வாத்தியார் சம்பாவனைகளைக் கொடுத்து விட்டு பிரசாத் பவன் நோக்கிப் புறப்பட்டோம்.
பிரசாத் பவனில் நாங்கள் சாப்பிடச் சென்றபோது மதியம் 3 மணிக்கு மேல் ஆகிவிட்டது. எங்களில் பலருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர்களுக்கு தயிர் சாதம் நார்த்தங்காய் ஊறுகாயுடன் கொடுத்துவிட்டு, முடிந்தவர்கள் மட்டும் அங்கு சாப்பிட்டோம். (அங்கிருந்த மாமியிடம் உப்பு நார்த்தங்காய் இருந்தது எங்களது அதிர்ஷ்டம்). கொஞ்சம் பூரி மற்றும் ஸ்ரார்த்த பட்சணங்களை வழியில் சாப்பிட எடுத்துக் கொண்டோம்.
எல்லாரும் உடை மாற்றிக் கொண்டு ரூமில் ரெஸ்ட் எடுக்கும் போதே மணி 4.30 ஆகிவிட்டது. இப்பொழுது கிளம்பினாலே காசிக்குப் போய்ச் சேர நடுராத்திரி ஆகிவிடும் என்பதனால் அவசர அவசரமாக லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து 'வேனில்' புறப்பட்டுவிட்டோம். வழியில் புத்த காயாவிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு குறிப்பாக எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக போக முடியுமா என்று ஆலோசித்தபடி வேனில் சென்று கொண்டிருந்தோம்.
பாதி தூரம் சென்றதும் பிரசாத் பவனிலிருந்து ஃபோன் வந்தது. ஒரு லக்கேஜ் இங்கேயே இருக்கிறது என்று லக்கேஜ் ஃபோட்டோ எடுத்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி இருந்தார்கள். அது என் கணவருடைய கம்ப்யூட்டர் பேக். அது அவரது வலது கை மாதிரி. கடைசியாக ஏறும்போது பேண்ட் டீ ஷர்ட் மாற்றிகொண்டு பின் வேனில் ஏற்றி கொள்ளலாம் என்று நினைத்து பக்கத்து ரூமில் சற்று கண் அசந்தவர் அதை மறந்துவிட்டார். ஆடையையும் மாற்றவில்லை. 'கம்ப்யூட்டர் பேக்'கையும் எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்குக் கொடுத்திருந்த இரண்டு ரூம்களில் அவர் படுத்திருந்த ரூமை மட்டும் செக் செய்து விட்டு அடுத்த ரூமை செக் செய்யாமலேயே வேன் ஏறிவிட்டோம்.
நல்லவேளையாக ஃபோன் வந்தது மட்டுமில்லாமல் புத்த கயாவில் காத்திருக்குமாறும் அங்கு பைக்கில் அவர்களே வந்து பையைக் கொடுத்துவிடுவதாகவும் கூறியது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. முக்கியமான பையும் கையில் கிடைத்துவிடும் புகழ் பெற்ற புத்த கயாவைப் பார்க்கும் பாக்கியமும் கிடைத்துவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். வேறென்ன வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டேன் நான்.
புத்த கயா:
வேன் புத்த கயாவிற்கு அருகில் செல்ல முடியாது. வேன் நிற்கும் இடத்திலிருந்து புத்த கயா நடக்கும் தூரமும் இல்லை. நடந்து சென்று வர நேரமும் இல்லை. எனவே நான், கௌரி, சாரதா, கிரிஜா மன்னி, ரகு, சுந்தர் மாமா, சீதாராமன் ஏழு பேரும் இரண்டு ஆட்டோ வைத்துக் கொண்டு புத்த கயாவை நோக்கிப் பயணித்தோம். என் கணவர் பைக்காக காத்திருந்ததால் வரவில்லை. அனந்த அண்ணாவும் விஜயா அக்காவும் உடம்பு சரியில்லாததால் வரவில்லை.
புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தினைப் பாதுகாத்து மிக அழகான கோவில் ஒன்றை நிறுவியுள்ளார்கள். புத்த கயா, பௌத்த கயா, போத்கயா என்றும் இப்போது 'மஹா போதி' கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் யுனஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (UNESCO World Heritage Site). அதாவது உலக அளவில் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பு.
ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ஆட்டோ இங்கு நிற்கமுடியாது நான் தள்ளி நிறுத்திக் கொள்கிறேன் என் நம்பர் குறித்துக் கொண்டு ஏதாவது கடையிலிருந்து ஃபோன் செய்யுங்கள் என்று கூறினார் ஆட்டோ ஓட்டுனர்.
புத்த கயாவில் காலணிகளை வைக்க ஃப்ரீ சர்விஸ் செய்கிறார்கள். அங்கு எங்கள் காலணிகளை விட்டுவிட்டு மஹா போதி கோவிலை நோக்கிச் சென்றோம்.
மிகவும் அழகாக பரமாரித்து வருகிறார்கள் இந்தக் கோவிலை. கூட்டம் அதிகம் இருந்தாலும் அந்த இடம் நம் மனதிற்கு கொடுக்கும் அமைதியை உணர முடிகிறது. உள்ளே தியானமே உருவமான புத்தர் சிலையும் புத்தம் சரணம் கச்சாமி என்ற மெல்லிய ஒலியும் நமை ஆட்கொள்கின்றன. அவரது பாதப் பதிவுகளை சிலைக்கு முன் வைத்திருக்கிறார்கள். அதையும் வணங்கிவிட்டு கோவிலைச் சுற்றி வந்தோம்.
புத்தர் தனது ஏழாவது வாரத்தில் ஞானம் பெற்ற போதி மரத்தின் வழித்தோன்றலில் வந்த போதி மரத்தினை பாதுகாத்து வருகிறார்கள். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தோம். எழுந்து வரவே மனமில்லை எனக்கு. (இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் எனக்கும் ஞானம் வந்திருக்கும். ஆனால் கடமை அழைத்ததால் கண் திறக்க வேண்டியதாயிற்று). பல பயணிகள் பல நாடுகளிலிருந்து இங்கு வந்து தரிசித்து தியானம் செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்த மரத்தின் விதைகளை பிரசாதம் போல் பலர் எடுத்துச் செல்கிறார்கள். போதி மரம் என்பது அரச மரமாகும்.
திரும்பி வரும் போது அங்கிருந்த ஃபோட்டோகிராஃபரிடம் ஒரு ஃபோட்டோ க்ளிக் செய்யச் சொல்லி ப்ரிண்ட் போட்டுக் கொண்டு வர சிறிது நேரமானாலும் அதில்லாமல் வர எங்களுக்கு மனமில்லை.
கௌரியும் மன்னியும் ஃபோட்டோ ப்ரிண்ட் பண்ணி வாங்கிக் கொள்ளச் செல்ல, நாங்கள் காலணிகளைப் பெற்றுக் கொண்டு, 100 ரூ டொனேஷன் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஆட்டோகாரருக்கு ஃபோன் செய்தோம். அவர் இருக்குமிடம் அறிந்து கொள்ளவும் ஃபோட்டோவுடன் கௌரியும் மன்னியும் வரவும் சரியாக இருந்தது.
நாங்கள் வேனை நெருங்கிய போது என் கணவர், விஜயா அக்கா மற்றும் அனந்த அண்ணா வேனுக்கு வெளியில் நின்றிருந்தார்கள். நாங்கள் வர நேரமானதால் கோபத்துடன் நிற்கார்களோ? உடம்பு சரியில்லாத நிலையில் அக்காவும் அண்ணாவும் ஏன் வெளியில் நிற்கிறார்கள் என்று சற்று பயந்த படி நாங்கள் அவர்களை நெருங்க அருகில் இருந்த 'கொடுக்காப்புளி' மரத்தில் எப்படி ஏறிக் காய் பறிப்பது என்று யோசித்து பழைய கதை பேசியபடி நின்றிருந்தார்கள். சிறு வயதில் அவர்கள் செய்த குறும்புகளை அசை போட்டபடி நின்றதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சர்யம். போகும் போது இருவரும் எழுந்திருக்கவே இல்லை வரும் போது மரமேறுகிறேன் என்கிறார்களே இது என்ன ஆச்சர்யம்? பை கிடைத்தும். என் கணவர் கடைக்குச் சென்று வாழைப்பழமும் இருவருக்கும் 'ஃப்ரஷ் ஜூஸ்' வாங்கிக் கொண்டு வந்த்து கொடுத்திருக்கிறார். அது குடித்ததும் என்ன மாயமோ என்ன மந்திரமோ இருவரும் மரமேறும் அளவுக்கு தெம்பாகிவிட்டார்கள். மணி ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இனி நேராக காசி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியது தான்.
நான் வண்டியில் ஏறியதுமே நன்கு தூங்கிவிட்டேன். நான் தூங்கினால் பரவாயில்லை. டிரைவர் தூங்கலாமோ? அவருக்கு கயா போகும் போதே ஓரே தூக்கம் என்று முன்பே சொன்னேன். கயாவில் அவருக்கு வேலையே இல்லை. நாங்கள் பித்ரு காரியம் செய்தோம். இவர் ரெஸ்ட் எடுக்கவேண்டியது தானே? மீண்டும் கௌரி சமாளிக்க முயன்று முடியாமல் என் கனவர் ஜெயராமனிடம் சொல்ல, அவர் முன் சீட்டுக்குச் சென்று அவரிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்துள்ளார். டிரைவர் தூக்கத்தில் வேனை தாறுமாறாக ஓட்ட ஆரம்பிக்க அவரை கட்டாயபடுத்தி வேனை ஒரு ஓரமாக நிறுத்த வைத்து தூங்கச் சொல்லியிருக்கிறார். சிலர் இரவு உணவாக ஸ்ரார்த்த பட்சணம் சாப்பிட்டிருக்கிறார்கள். முக்கால் மணி நேரம் கழித்து ட்ரைவர் முழித்ததும் மீண்டும் எங்கள் பயணம் காசியை நோக்கித் தொடங்கியது. அதன் பிறகு டிரைவர் நிதானமாக வேனை ஓட்ட நாங்கள் காசியை அடைந்த போது விடியற்காலை 3 மணி. பிரயாக் ராஜ், வாரணாசி மற்றும் கயாவில் செய்யவேண்டிய பித்ரு காரியங்கள் எல்லாம் மனதுக்குத் திருப்த்தியாக செய்து முடித்துவிட்ட சந்தோஷத்தில் உறங்கிப் போனோம் நாங்கள்.
இன்னும் காசியில் நாங்கள் செய்ய இருப்பது தம்பதி பூஜை. அதன் விவரங்களை 'குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 - காசியில் தம்பதி பூஜை' என்னும் அடுத்த பகுதியில் காணலாம்.
கயாவில் ஆன செலவுகள்:
|
எண்
|
விளக்கங்கள்
|
செலவுகள்
|
|
|
|
|
|
|
|
|
|
1
|
கயா செல்லும் வழியில் ஹோட்டலுக்கு ஆன செலவு
|
750.00
|
|
2
|
கயாவில் ஹோட்டலில் 3 ரூம்கள் எடுத்து ஒரு இரவு தங்கியதற்கு
|
8000.00
|
|
3
|
வாட்டர் பாட்டில்கள்
(ஒன்று 20ரூ )
|
1000.00
|
|
4
|
ஆட்டோ பல்குனி நதி போய் வர
|
220.00
|
|
5
|
விஷ்ணு பாதத்தில் பூஜை மற்றும் பிரசாதம்
|
2200.00
|
|
6
|
வாத்யார் சம்பாவனை
|
1000.00
|
|
7
|
அக்ஷய வடம் போக ஆட்டோ
|
300.00
|
|
8
|
பிராமணாள் பிரசாதம்
|
1000.00
|
|
9
|
ஆட்டோ அக்ஷய வடம்
|
400.00
|
|
10
|
சாப்பாடு
|
1000.00
|
|
11
|
புத்த கயா ஆட்டோ
|
350.00
|
|
12
|
புத்தகயாவில் காலணிகளை வைக்க ஃப்ரீ சர்விஸ் என்றாலும் எங்கள் டொனேஷன்
|
100.00
|
|
13
|
புத்த கயா ப்ரொஃபஷ்னல் ஃபோட்டோ
|
100.00
|
|
|
கயாவில் ஆன மொத்த செலவு
|
16420.00
|
கயா என் பார்வையில்:
கயா பீகார் மாநிலத்தில் உள்ளது. இங்கு நாங்கள் தங்கியிருந்த 'விஷ்ணு வ்யூ' ஹோட்டல் நான் எதிர் பார்த்ததைவிட மிக நன்றாக இருந்தது. ஆனால் அங்கு நாங்கள் 7 மணி நேரம் கூட இருக்கவில்லை என்பது தான் சிறிது குறை,
எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பிரசாத் பவனில் எல்லா ஏற்பாடுகளும் கச்சிதமாகச் செய்திருந்தார்கள். அங்கு இருந்த ஒரு அம்மா எங்களுக்கு உப்பு நார்த்தங்காய் கொடுத்து உதவியது நேரத்தில் செய்த உதவியாகும்
கயாவில் துளசிச் செடி வளராது என்கிறார்கள். அதே போல் பல்குனி என்னும் புனித நதி பொலிவிழந்து தூய்மை இழந்து இருப்பதைப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. பல்குனி நதி வற்றிய நதியாய் காட்சியளிப்பதற்கும் இங்கு துளசிச் செடி வளராமல் இருப்பதற்கும், பொறுமையே உருவான சீதாதேவிக்கு சாட்சி சொல்லாததனால் தேவியின் சாபம் தான் காரணம் என்பது நம்பிக்கை.
பல்குனி நதியில் வெள்ளம் வராமல் இருக்க சீதாதேவியின் சாபம் காரணமாக இருக்கலாம். ஆனால் அதன் அசுத்தத்திற்கும், மாசுத் தன்மைக்கும் நாம் தான் காரணம்.
அக்ஷய வடம் என்னும் ஆலமரம் சீதாதேவிக்கு சரியான நேரத்தில் சாட்சி சொன்னதால், சீதாதேவியின் வரம் பெற்று பல யுகங்களாக தழைத்தோங்கி நிற்பதாக நம்பிக்கை. இந்த மரத்தடியில் பிண்டம் இட்ட பிறகு தான் கயா ஸ்ரார்த்தம் பூர்த்தி பெறுகிறது.
கயாவில் கோடைக் காலத்தில் 50 டிகிரி வரை வெய்யில் கொளுத்துகிறது. இங்கு செல்லவதற்கு உகந்த மாதம் அக்டோபரில் இருந்து மார்ச் வரை.
புத்த கயா கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். குறைந்தது 2 மணி நேரங்களாவது அங்கு செல்ல வைத்துக் கொள்ள வேண்டும்.
பயணங்கள் தொடரும்.
மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு
மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –
பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்:
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 - வாரணாசி என்னும் காசி:
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 - தம்பதி பூஜை:
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://mathangiyinmanam.blogspot.com/2024/07/5_25.html
குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 6 - சமாராதனை:
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
பயணங்கள் தொடரும்.
மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.
So well written! Absolutely love it❤️
ReplyDeleteIt was So good mamiji! I felt like we gone to that place once again. It is like reading over and over again. Thank you mamiji
ReplyDeleteGreat read! Sounds like a wonderful trip!
ReplyDeleteWell-crafted piece, Mathangi. You have made it so comprehensive with visuals and information still one looks forward to more. Thanks for the details on Akshaya Vatam.
ReplyDelete