பெருங்களூர் கோவிலுக்கு வருபவர்கள் தங்குவதற்காகவே பிரத்யேகமாக பெருங்களூர் உருமநாதர் ட்ரஸ்ட் நடத்தும் விடுதி ஒன்று இருக்கிறது. மிகவும் நேர்த்தியான இடம் இது. இங்கு தங்க விஸ்தாரமான அறைகளும், குளித்துக் கிளம்ப பாத்ரூம் வசதிகளும் இருக்கின்றன. முன்கூட்டியே பதிவு செய்தால், அங்கேயே உணவு சமைத்து பரிமாறுகிறார்கள். காஃபி, டீ கூடக் கிடைக்கிறது . மிகவும் அருமையான ஏற்பாடு இது. தரமான உணவு, தூய்மையான இடம், நியாயமான கட்டணம். அதன் இன்சார்ஜ் திருமையம் சுரேஷ் என்பவர், அவரது செல் நம்பர் +919884815204.
நேராக நாங்கள் சென்றது அந்த விடுதிக்குத் தான். அங்கு காஃபி குடிப்பவர்கள் குடித்து அங்கேயே குளிப்பவர்கள் குளித்து ரெடியாக அங்கிருந்து சிவன் கோவில் குளத்தை நோக்கி வேனில் புறப்பட்டோம் நாங்கள்.
சிவன் கோவில் குளத்திலிருந்து தொடங்குகிறது நமது குலதெய்வ வழிப்பாடு. வன்னி மரத்தடிப் பிள்ளையாருக்கு அருகிலிருக்கும் அந்தக் குளத்தில் நீராடிய பின் ஈரத்துணியுடன் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும்.
நாங்கள் கொண்டு சென்றிருந்த வஸ்திரத்தை பிள்ளையாருக்கு சாற்றி, பூமாலை அணிவித்து, தீப, தூபம் ஏற்றி விநாயகனைத் தொழுது, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நிவேதனம் செய்தோம். வினை தீர்க்கும் விநாயகனுக்கு சதுர் தேங்காய் போட்டு நல்ல படியாக குல தெய்வ வழிபாடுகள் விக்னமின்றி நிறைவேற வேண்டிக்கொண்டோம்.
ஸ்ரீ வம்சோதாரக நாதர்:
கொண்டு சென்றிருந்த நெல் மூட்டையுடன் வம்சோதாரகரை தரிசிக்க சிவன் கோவிலுக்குள் சென்றோம்.
எங்கள் வழக்கப்படி கம்பீரமாக வீற்றிருக்கும் வம்சோதாரகர் சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் மேடையில் நெல் போட்டு பிராத்தனையைத் தோடங்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் சில்லறை வைத்துக் கொண்டு மூட்டையிலிருந்து கை நிறைய நெல் எடுத்து மேடையில் இட வேண்டும். இது போல் மூன்று முறை செய்ய வேண்டும். சிறியவர்களிடமிருந்து ஆரம்பித்து முதலில் சாரதாவில் ஆரம்பித்து பெரியவர் வரை பெரிய அண்ணா ராதாகிருஷ்ணன் வரை ஒவ்வொரு தம்பதியாய் அனைவரும் வம்சோதாரகர் சன்னதியில் இம்மாதிரி மூன்று முறை கை நிறைய நெல் இட்டு பிரார்த்தனை செய்து கொண்டோம்.
ஸ்ரீ மங்களாம்பிகா:
அடுத்து அம்பாள் மங்களாம்பிகா சன்னதி. கருணையே உருவமாய் எங்கள் மங்களாம்பிகை காட்சி அளித்தார். அங்கும் வம்சோதாரகர் சன்னதியில் செய்தது போலவே அம்மனுக்கு முன் ஒவ்வொருவராக நெல் இட்டு வேண்டிக்கொண்டோம்.
அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகத்திற்கு கொண்டு சென்ற சாமான்களை பூசாரியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேனில் மலையாமருங்கர் கோவிலை நோக்கிச் சென்றோம்.
ஸ்ரீ பூர்ண. புஷ்கலா சமேத ஸ்ரீ மலையாமருங்கர்:
மலையாமருங்கர் யானை மீது பூர்ண புஷ்கலா சமேதராக மிக அழகாக அமர்ந்திருக்க அவருக்கு முன்னால் உள்ள மேடையில் சிவன் கோவிலில் செய்தது போலவே சாரதாவில் ஆரம்பித்து பெரிய அண்ணா வரை ஒவ்வொரு தம்பதியாய் அனைவரும் மூன்று முறை சில்லறையுடன் கை நிறைய நெல் இட்டு பிரார்த்தனை செய்து கொண்டோம்.
அங்கும் அபிஷேக சாமான்கள், மலையாமருங்கருக்கு வேஷ்டி, பூர்ணா, புஷ்கலா மற்றும் ஸ்ப்தகன்னிகளுக்கு பாவாடை எல்லாவற்றையும் பூசாரியிடம் கொடுத்தோம்.
கோவிலிலிருந்து 2 குடங்கள் வாங்கிக்கொண்டு கோவில் குளத்தை நோக்கிச் சென்றோம். இந்தக் குளக்கரையில் தான் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செய்யும் வழக்கம்.
ஆடவர்கள் குளத்தில் இறங்கி குடத்தில் நீர் கொண்டு வந்து தர முதலில் குடும்பத்தில் சிறிய தம்பதியை அங்கிருக்கும் மேடையில் உட்கார வைத்து வீட்டுக்கு மூத்தவர் கையில் வீபூதி எடுத்துக் கொண்டு முகத்தில் மூன்று முறை தண்ணீர் அடித்து பின் தலையில் குடம் நீரை ஊற்றினார். இவ்வாறு ஒவ்வொரு தம்பதியாக இந்த முறையில் ஸ்நானம் செய்ததும், பெரிய தம்பதிக்கு அவருக்கு அடுத்த தம்பி இதே போல முகத்தில் நீர் தெளித்து தலைக்கு நீர் ஊற்றினார். குளத்தடி விநாயகரை நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.
ஸ்ரீ உருமநாதர் ஆலயம்:
குளத்தின் அருகிலேயே இருந்தது உருமநாதர் ஆலையம்.

உருமநாதர் ஆலையத்திற்குள் செல்ல முன்பெல்லாம் பெண்களுக்கு அனுமதி இல்லாமலிருந்தது. இப்போழுது உள்ளே ஓர் எல்லை வரை அனுமதிக்கிறார்கள். அங்கிருந்து உருமநாதரை நன்றாக தரிசிக்க முடிகிறது.
தீபாராதனை முடிந்து வேண்டிக்கொண்டு, ஸ்ரீ மலையாமருங்கர் அய்யனார் கோவிலுக்குச் சென்றோம்.
மீண்டும் ஸ்ரீ மலையாமருங்கர்:
ஈரத்துடன் ஸ்ரீ மலையாமருங்கர் கோவிலுக்குள் நுழைந்ததும், நுழைவாயிலில் மீண்டும் ஒரு முறை ஒவ்வொருவர் முகத்திலும் மூன்று முறை வீபூதியுடன் நீர் அடித்தார் பெரிய அண்ணா. தீயசக்திகள் அண்டாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்வது ஐதீகம்.
கோவில் உள்ளே மலையாமருங்கருக்கு அபிஷேகம் செய்வதைப் பார்க்கச் சென்றோம். இதுவரை இத்தனை அருகாமையில் ஸ்வாமியைப் பார்த்ததே இல்லை. அருமையான தரிசனம்.
அபிஷேகம் முடிந்து தீபாரதனை முடிந்ததும் குடும்பமாக நாங்கள் எல்லாரும் ஐயப்ப பாடல்களையும் குருவாயூரப்பன் ஸ்தோத்திரம் எல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்து வழிபட்டது மனதிற்கு இதமாக இருந்தது. சப்த கன்னிகளும் புத்தாடையில் மிளிர இந்த முறை தான் அவர்களை மிக அருகில் கண் குளிரப் பார்க்கமுடிந்தது. மலையாமருங்கரை நமஸ்கரித்து அங்கிருந்து வேனில் புறப்பட்டு மீண்டும் சிவன் கோவிலுக்கு வந்தோம்.
மாவிளக்கு:
வம்சோதாரகருக்கும் அம்பாளுக்கும் பூசாரி அபிஷேகம் செய்து புத்தாடை உடுத்தி பூஜை செய்ய, நாங்கள் பஞ்சகச்சம், 9 கஜம் புடவையுடன் தாயார் மங்களாம்பிகா சந்நிதியில் மாவிளக்கு போட ஏற்பாடுகள் செய்து கொண்டோம்.
தாம்பாளத்தில் அரிசி மாவு, நாட்டுச் சர்க்கரை கலந்த மாவினை இட்டு, சந்தனம் குங்குமம் இட்டு, இரண்டு குழிகள் செய்து, நெய் ஊற்றி, நெய்யில் ஊற வைத்த பஞ்சுத்திரி அதில் வைத்து, பூக்களால் அலங்கரித்தோம். பிறகு பெரிய மன்னியிலிருந்து ஆரம்பித்து கையில் திரி எடுத்துக் கொண்டு மங்களாம்பிகை சந்நதியில் உள்ள தீபத்திலிருந்து அந்தத் திரியை ஏற்றி அத்திரியை கவனமாகக் கொண்டு வந்து மாவிளக்கு ஏற்றினோம். இவ்வாறு பெண்கள் எல்லாரும் ஒவ்வொருவராக ஏற்ற தீப மங்கள ஜோதியாக ஒளிர்ந்தது மாவிளக்கு. பார்ப்பதற்கே தெய்வீகமாக, திவ்யமாக இருந்தது. தேங்காய் உடைத்து இரு பக்கமும் மூடிகளை வைத்து, தூபம் ஏற்றி வைத்து, அம்மன் பாடல்களை நாங்கள் பாட நின்று ஒளிர்ந்தது எங்கள் மாவிளக்கு.

மாவிளக்கிற்கு நைவேத்தியம் செய்து, தீப ஆராதனை காட்டி வேண்டிக் கொண்டு, விளக்கு நன்கு எரியும் போதே, தேங்காய் மூடியில் இருக்கும் குடுமியை இரு கையிலும் பிடித்துக் கொண்டு எரியும் திரியை எடுத்து கவனமாக வெற்றிலை மீது வைத்தோம். கோவிலுக்கு நிறைய பேர் வர ஆரம்பித்திருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுத்தோம். மிகவும் சந்தோஷத்துடன் அவர்கள் வாங்கிச் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.
மாவிளக்கு மாவை நங்கு பிசைந்து உருட்டி எல்லாருக்கும் பிரசாதமாகக் கொடுத்தோம். எங்கள் பிரார்த்தனையும் குலதெய்வ வழிபாடும் இனிதே நிறைவேறியது.
அங்கிருந்து விடுதி ரூமிற்கு வந்ததும் எங்கள் குல தெயவ படங்களை வாங்கிக் கொண்டோம். அந்த விடுதியில் இருந்த பூஜா ரூமில் இருந்த பூரணா புஷ்கலாவுடன் காட்சி தந்த மலையாமருங்கர் விக்ரகத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டேன் நான்.
ரூமில் உடை மாற்றிக் கொண்டு அவர்கள் பரிமாறிய அருமையான உணவை உண்டோம். அங்கேயே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு 3.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டோம். வன்னி மரப் பிள்ளையாரில் தொடங்கி வம்சோதாரகர், மங்களாம்பிகை, உருமநாதர், புர்ண, புஷ்கலா சமேத மலையாமருங்கர் இவர்களின் பூரண ஆசியுடன் குலதெய்வ வழிபாடு நிறைவாய் அமைந்தது.
பெருங்களூர் சென்று வழிபாடு முடித்துவர ஆன செலவுகள்:
எண் | செயல் | செலவு |
1 | மகாதானபுரத்திலிருந்து பெருங்களூர் போய் வர வேனுக்கு | 8000.00 |
2 | சாப்பாடு மற்றும் காஃபிக்கு (ஆளுக்கு ரூ 250 வீதம்) | 3000.00 |
3 | கோவிலில் தட்சணை | 3000.00 |
4 | ஸ்வாமிக்கு புடவை வேஷ்டி பாவடை | 2000.00 |
5 | அபிஷேக சாமான்கள் | 1500.00 |
| மொத்தம் | 17500.00 |
குலதெய்வ வழிபாடு என் பார்வையில்:குலதெய்வ வழிபாடு என்னைப் பொருத்தவரை ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். வம்ச வம்சமாக நமது மூதாதையர்கள் வழிபட்ட இடத்தில் நாம் வழிபாடு செய்யும் போது அவர்களின் ஆசியும் கடவுளின் பரி பூர்ண அனுக்கிரஹமும் கிடைப்பதை உணரமுடிகிறது.
கோவில்களைப் புணர்ப்பித்து, கோவிலுக்கு செல்லும் பாதைகளை எளிதில் அணுகும வண்ணம் சீரமைத்திருப்பது சிறப்பு. கோவில் ட்ரஸ்ட் பக்தர்களுக்காக விடுதி அமைத்து தங்க வசதி மற்றும் சுவையான உணவு நியாயமான விலையில் கிடைக்குமாறு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
மொத்தத்தில் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு கடவுள் அனுக்ரஹம்.
இப்பகுதி நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment