Thursday, July 25, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 - காசியில் தம்பதி பூஜை:

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 -  காசியில் தம்பதி பூஜை:

கயா ஸ்ரார்த்தத்தை சிரத்தையாக  முடித்துவிட்டு கயாவிலிருந்து காசிக்கு 2.6.24 அன்று காலை 3 மணிக்கு  வநது சேர்ந்ததைப் பற்றி   'குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா'வில் பார்த்தோம்.

2.6.24 ஆம் ஆண்டு காலை நாங்கள் எழுந்திருக்க  மணி ஏழு ஆகிவிட்டது.  எழுந்ததுமே கங்கையில் குளிக்கப் போகலாம் என்று முடிவு செய்து எல்லாரும் சிவாலா காட் சென்றோம். எல்லா பித்ரு காரியங்களும் சிறப்பாக முடித்துவிட்டதால் மிகவும் நிதானமாக கங்கையில் குளிக்க முடிந்தது.  நீர்  தூய்மையாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் கங்கையல்லவா? புண்ணிய நதியில் குடும்பத்துடன் நீராடியது மனதிற்கு இதமாக இருந்தது,



குளித்து சந்தியா வந்தனம் செய்ததும் ரூமுக்குப் போய் உடை மாற்றி 9 கஜம் கட்டிக் கொண்டு ஈர உடைகளை உலர்த்தி விட்டு எல்லாரும் 10.30 மணிக்கு தம்பதி சமேதராக கேதார் வாத்தியாரின் மகன் கௌஷிக் அகத்திற்குச் சென்றோம். 

தம்பதி பூஜை:

கௌஷிக் அவர்கள் தம்பதி பூஜை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். தம்பதிகளுக்கு புடவை, வேஷ்டி,  மெட்டி, திருமாங்கல்யம் போன்றவற்றிர்க்கு நாங்கள் பணமாகக் கொடுத்துவிட்டோம். 


சுந்தர் மாமாவும் விஜயா அக்காவும் கேதார் வாத்தியாருக்கும் அவரது மனைவிக்கும் தம்பதியாக பூஜை செய்ய,  சகோதரர்கள் நால்வரும் இன்னொரு ஜோடிக்கு தம்பதி சமேதராக பூஜை செய்து மரியாதை செய்தோம்.





தம்பதிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, பூ கொடுத்து புஜை செய்து நமல்கரித்தோம். அவர்கள் அக்ஷதை தூவி ஆசிர்வதிக்க தம்பதி பூஜை இனிதே நடந்து முடிந்தது.  10.30 மணிக்கெல்லாம் தம்பதி பூஜை முடிந்துவிட்டது. 

பூஜை முடிந்து நாங்கள் கேதார் வாத்தியாருக்கும் கௌஷிக் வாத்தியாருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, சுந்தர் மாமாவும் கேதார் வாத்தியாரும் சேர்ந்து வேத மந்திரங்கள் சொல்ல கேட்கவே இனிமையாக இருந்தது. எல்லாரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.


எங்களது குடும்பத்துடன் காசி யாத்திரைப் பயணம் தம்பதி பூஜையுடன் சிறப்பாக இனிதே நடந்தேறியது.   மணி 12.30 ஆகி இருந்தது. 1.30 மணிக்கு சாப்பிடலாம் என்று கூறி இருந்தார்கள்.  

எங்களில் பலருக்கு சிம்பிளாக ஒரு உப்புமா சாப்பிட்டால் போதும் என்று ஆகிவிட்டது. எனவே நான், சாரதா, கௌரி மூவரும் கௌஷிக் அவர்கள் அகத்தில் அவர்களது அனுமதியுடன் கோதுமை ரவை உப்புமா செய்வது என்று முடிவு செய்தோம். மற்றவர்கள் ரூமிற்கு சென்று விட்டார்கள். சாராதா அவர்களுடன் சென்று  என் கணவர் வாங்கிக் கொடுத்த கோதுமை ரவை, தக்காளி, பச்சை மிளகாய்,  கேரட், குடைமிளகாய் எல்லாவற்றையும்  கொண்டு வர அவர்களுடன் சென்றாள். அதுவரை நானும் கௌரியும் கேதார் வாத்தியாரின் பேத்தி சிவபிரியாவுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.



சாரதா வந்ததும் நான் உப்புமா செய்யப் போக கௌரியும் சாரதாவும் தயிர் சாதம் மற்றும் சில காய்கறிகளை பேக் செய்யச் சென்றார்கள்.  கேதார் அகத்திலிருந்த சமையல் வேலை செய்பவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். தேவையான பாத்திரம் கரண்டி எண்ணெய் எல்லாம் எடுத்துக் கொடுத்தோடு பேக் செய்யத் தேவையான தூக்கு இலை எல்லாம் கொடுத்தது சௌகர்யமாக இருந்தது. முக்கால் கிலோ உப்புமா செய்தேன். அதை கிளரவும் அவர் உதவியாக இருந்தார். 

பாவம் அவர் எங்கள் எல்லாருக்கும் சாம்பார், ரசம், உருளைக் கிழங்கு கறி எல்லா காயும் போட்டு கூட்டு எல்லாம் செய்திருந்தார்.  எனவே நான் சாரதா, கௌரி அவர் சமைத்த சமையலை சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுக்கு உப்புமா தயிர் சாதம் எடுத்துச் செல்வதாக முடிவு செய்தோம். 


நாங்கள் அவர் சமைத்ததை சாப்பிட்டோம்.  அதிர்ஷ்டவசமாக எங்கள் மூவருக்கும் அந்த சமையலால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு நாள் கயாவில் மட்டும் கௌரிக்கு கொஞ்சம் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. மற்றபடி நாங்கள் ஓகே தான். எனவே நாங்கள் ஜாலியாக பேசிய படி சாப்பிட்டோம். கௌரி பேப்பட் பேளேட், தயிர் சாதம் எடுத்துக் கொண்டு முன்னால் சென்றுவிட்டாள்.  நானும்  சாரதாவும் உப்புமா  கூட்டு ஊறுகாயுடன் கேதார் அகத்தில் எல்லாருக்கும்  'பை' சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். 

வரும் வழியில் நானும்  சாரதாவும் பால் மற்றும் தயிர் வாங்க ஒரு கடையில்  நுழைந்தோம். அங்கு லஸ்ஸி, பால், தயிர் இருந்தது. நாங்கள் உப்பு, சர்க்கரை, தயிர் மற்றும் பால் வாங்கிக் கொண்டோம். தயிர் மிகவும் கட்டியாக இருந்ததால் அந்தப் பாத்திரத்திலேயே நீர் ஊற்றி, உப்பு, ஐஸ் போட்டு நீர் மோராகக் கொடுக்கச் சொல்லிக் கேட்டோம். கொஞ்சமாக நீர் ஊற்றினார் கடைக்காரர். நாங்கள் இன்னும் ஊற்றச் சொல்ல, இதில் இன்னும் நீர் ஊற்றுவதா? அந்தக் கடைக்காரரால் அதை ஜீரணிக்கவே  முடியவில்லை.  கெட்டித் தயிர் எங்களுக்கு ஜீரணமாகவில்லை என்ன செய்வது? ஒரு வழியாய் அவர் மனமின்றி நீர் ஊற்றி ஜிலு ஜிலு என்று நீர் மோர் கொடுக்க  மனம் குளிரப் பருகி விட்டு மனதார அவரை வாழ்த்திவிட்டு வந்தோம். 

வாளி நிறைய சுடச் சுட மணக்க, மணக்க வெஜிடபிள் உப்புமா. எல்லாருக்கும் 'பேப்பர் ப்ளேட்' டில் போட்டுக் கொடுத்தோம். தொட்டுக் கொள்ள சர்க்கரை, கூட்டு பரிமாற எல்லாரும் ரசித்துச் சாப்பிட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் தயிர் சாதம் ஊறுகாய் சாப்பிட்டதும் மீதமிருந்த உப்புமா தயிர் சாதத்தை இரவு உணவிற்காக டப்பாவில் பேக் செய்து கொண்டோம். 

பின் சாரதாவும் நானும் குழந்தைகளுக்குப் பொருட்கள் வாங்கப் புறப்பட்டோம்.  ஆண் குழந்தைகளுக்கு குர்தாவும், பெண் குழந்தைகளுக்கு அழகான கைப்பையும் வாங்கினோம்.  எங்களுக்கும் கௌரிக்கும் ஒரே மாதிரி உடை வாங்க முயற்சி செய்தோம்.  சரியாக அமையவில்லை. கடையிலிருந்து திரும்பியதும், பெட்டிபளைப்  பேக் செய்ய ஆரம்பித்தோம். 

மாடியிலிருந்து உடைகளை எடுத்து  மடித்து வைத்து, ரூமிலிர்ந்த எல்லா சாமான்களையும் பேக் செய்யத் தொடங்கினோம்.

இண்டக்ஷனை பெட்டிக்குள் வைக்குமுன் வாங்கி வந்த பாலில் டீ, காஃபி,  போட ஆரம்பித்தோம். நான் காஃபி, டீ, ப்ளாக் டீ, சர்க்கரை சேர்த்து, சேர்க்காமல் என்று அவரவர்கள் கேட்டதைக்   கலந்து கொடுத்தேன், ஒவ்வொரு முறை காஃபி கொடுக்கும் போதும்  சூடு இல்லை. பில்டர் காஃபியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், சர்க்கரையை குறைத்திருக்கலாம் என்று  ரகுவுக்கு எப்பொழுதும் ஒரு சிறிய அதிருப்தி இருந்து கொண்டே இருந்தது.  அதை நிவர்த்தி செய்யாமல் காசியை விட்டு வருவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன் நான், எனவே இந்த முறை ஃபில்டரில் சுடச் சுட டிகாக்ஷன் இறக்கி, பால் காய்ச்சி ஃபில்டர் காஃபி போட்டு மிகச் சரியாக சர்க்கரை சேர்த்து ரகு எங்கும் நகரும் முன் கையில் கொடுத்து குடித்து விட்டு .'திருப்தி, திருப்தி, பரம திருப்தி' என்று  சொல்லும் வரை நாங்கள் விடவில்லை. எல்லாம் மனதிற்கு நிறைவாகச் செய்த பின் திருப்தியை மனதாரச் சொல்ல வேண்டாமா? ரகுவும் சம்த்தாகக் குடித்து விட்டு ரொம்பத் திருப்தி என்று  சொல்ல காசி பயணம் திருப்தியாக முடிந்துவிட்டது. 

கொண்டு சென்ற இண்டக்ஷன், ஃபில்டர், சர்க்கரை டப்பா ஊறுகாய் டப்பா, பாத்திரங்கள், டம்ப்ளர், டபரா, ஸ்பூன் இப்படி எல்லாவற்றையும் பெட்டியில் வைத்து பேக் செய்தோம். 

அனந்தன் அண்ணாவும் ரகுவும் சென்று கங்கை நீரை சொம்பில் அடைத்துக் கொண்டு காசிக் கயிறும் வாங்கி வந்தார்கள். அதனுடன் இராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டிய நீரையும் பத்திரமாக பேக் செய்து பெட்டியில் வைத்தோம். ஹோட்டலுக்கு பணம் செட்டில் செய்தோம்.

ரூமை விட்டுக் கிளம்புமுன் எல்லா பெண்களும் கூலாக கூலிங்க் க்ளாஸ் போட்டுக் கொண்டு கலக்கலாக போடடோ எடுத்துக் கொள்ள முடிவு செய்தோம். சுந்தர் மாமா, "விஜயா நன்னா தானே இருந்தா? இப்ப என்னாச்சு? கறுப்புக் கண்ணாடி போட்டுனுட்டாளே' ன்னு எல்லாரும் பரிதாபப் படப் போறா என்று கிண்டல் செய்ய 'அந்த பிராமணன் சொல்றத விடு என்ன ஃபோட்டோ எடு என்று அம்சமாகப் போஸ் கொடுக்க அதை கௌரி அழகாக படம் பிடிக்க குதூகலமாய் இருந்தது. நாங்கள் ஐவரும் மாற்றி மாற்றி கூலர்ஸ் அணிந்து கொள்ள ரகு பொறுமையாய் படம் பிடிக்க மிக மிக ஜாலியாக எஞ்சாய் செய்தோம் நாங்கள்.

இரவு 9.20 க்கு  வாரணாசியிலிருந்து சென்னை திரும்புவதற்கு இண்டிகோ விமானத்தில் எங்களுக்கு புக் செய்திருந்தோம். ஆறு நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணமாக காசி யாத்திரையை கிரமமாக முடித்துக் கொண்டு நாங்கள் புக் செய்திருந்த அர்பேனியா வேனில் வாரணாசி ஏர்ப்போர்ட் நோக்கி எங்கள் பயணம். 

ஏர்ப்போர்ட்டில் பெட்டிகளை செக்கிங் செய்து விட்டு உள்ளே சென்றதும்  கொண்டு சென்றிருந்த உணவை எல்லாருக்கும் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிட்டோம். 

போர்டிங்க் ஆரம்பித்துவிட்டது.   விமானத்தில் என் கணவர் கம்ப்யூட்டரில் வேலை செய்தபடி வர நான் இந்த ப்ளாக் எழுத சில குறிப்புகளை மொபைலில் நோட்ஸ் எடுத்தபடி வந்தேன்.  11.30 க்கு  சரியாக சென்னைக்கு வந்தது விமானம்.  வானம் நீர்த்தூவி எங்களை வரவேற்கத் தொடங்கியது. 

பின் இடியுடன் கூடிய பெருமழை கொட்டத் துவங்க,  வானம் பொத்துக்கிகொண்டு ஊற்ற தரை இறங்க சிரமப் பட்ட எங்கள் விமானத்தை இன்டர் நேஷனல் டெர்மினல் அருகில் பாதுகாப்பாய் தரை இறக்க வேண்டியதாகிவிட்டது.  கன மழை பெய்ததால் விமானக் கதவுகளைத் திறக்கவில்லை.  யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. சிலர் பொறுமை இழந்து  காணப்பட மழையினால் தரை இறங்க முடியாத இன்னொரு விமானம் பெங்களூரில் தரை இறங்கத் திரும்பியதாகத் தெரிவித்தார்கள். மழையின் வேகம் குறையும் வரை பொறுமையுடன் பொறுத்திருக்கும்படி பைலட் அறிவித்தார். அரை மணி நேரங்களுக்கு மேல் விமானத்தினுள்ளேயே உட்கார்ந்திருந்தோம்.  ஆசை தீர மேகம் கொட்டித் தீர்த்தது ஓய்ந்ததும் ஒவ்வொருவாய் வேளியில் வந்து ஏர்போர்ட் பஸ்ஸில்  ஏர்போர்ட் வந்து வெளியில் வந்தோம்.

லேசாகத் தூற ஆரம்பித்தது. சென்னையிலிருந்து மகாதானபுரம் செல்ல இரண்டு வேன்கள் புக் செய்திருந்தோம்.  சென்னையிலிருந்து எங்களுடன் சுந்தர் மாமா, விஜயா அக்காவின் பேத்தியும் சில லக்கேஜ்களுடன் மகாதானபுரம் வருவதாக ஏற்பாடு. மழையினால் அவர்கள் வந்து நாங்கள் அவர்களை சந்திக்க மணி 12.15 ஆகிவிட்டது. எல்லா லக்கேஜ்களையும் வண்டியில் ஏற்றி ஒரு வழியாக எங்கள் பயணம் தொடங்கியது. வந்த இரண்டு வேன்களில் ஒரு டிரைவர் லக்கேஜ் ஏற்றுவதிலிருந்தே ரொம்பவும் படுத்தி விட்டார். அவர் வழியிலும் மரியாதை குறைவாகப் பேசியதும் பொறுத்துக் கொள்ளும்படி இல்லை.  நாங்கள் சொன்ன வழியில் செல்லவும் இல்லை. சுற்றிக் கொண்டு தான் செல்வேன் என்று  எடுத்தெறிந்து  பேசியதும் சரியில்லை. வேனுக்கு பணம் செட்டில் பண்ணும் போது அந்த வேன் டிரைவர் மீது புகார் சொல்லி விட்டுத் தான் பணம் செட்டில் பண்ணினோம். மற்றொரு டிரைவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. 

இரவு முழுவதும் பயணம் செய்து நாங்கள் மகாதானபுரம் வந்து சேரும் போது மணி 6.30 ஆகி விட்டது. எங்களது வெற்றிகரமான காசி யாத்திரை 28 ஆம் தேதி மகாதானபுரத்தில் ஆரம்பித்து 3 ஆம் தேதி மகாதானபுரத்தில் அற்புதமாக முடிவடைந்தது. கொண்டு வந்திருக்கும்  கங்கா ஜலத்தை இராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்த பின் தான் காசி யாத்திரை முடிவு பெறும்.  இராமேஸ்வரத்தில் அபிஷேகம் மற்றும்  வேண்டுதல் நிறைவேற்றச் சென்ற கோவில்கள், குலதெய்வம் கோவில் மற்றும் சமாராதனை பற்றி அடுத்த பகுதியான 'குடும்பத்துடன் காசி யாத்திரை நிறைவுப் பகுதி 6 -  சமாராதனை' பகுதியில் காணலாம். 

காசி தம்பதி பூஜைக்கான செலவு:


வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள்

1

காசி தம்பதி பூஜை சாமான்

680.00

2

காசிக் கயிறு 

  75.00

3

தட்சணை

2500.00

4

 காசி சொம்பு

1800.00

5

 ஷ்யாம் கைட்

1500.00

6

காசி சாப்பாடு

3880.00

 

மொத்த செலவு

10435.00


எங்களது காசி யாத்திரை ஒரு அலசல்:

ஓர் குடும்பத்திலிருந்து 45 வயதிலிருந்து 75 வயது வரை உள்ள 10 பேர்  ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாய் சென்று வந்த  வெற்றிகரமான பயணம் எங்களது காசி யாத்திரை. 

நாங்கள் சென்றது மே மாதக் கடைசியில் உக்கிரமான கோடைக்காலத்தில் அதுவும் 6 நாட்களுக்கு மட்டுமே.  போன பகுதியில் கூறியது போல் காசிக்குச் செல்வதானால் நவம்பரிலிருந்து ஃபிப்ரவரி வரை உள்ள மாதங்களில் செல்வது நல்லது. அதுவும் குறைந்தது 10 நாட்கள் செல்வது உசிதம். 


இண்டக்ஷன் ஸ்டௌ, பாத்திரங்கள் 3, ஸ்பூன், டம்ப்ளர், டபரா, கெட்டில், டீ பேக்கெட்ஸ், பால் பௌடர், ஃபில்டர், காஃபி பொடி, கஞ்சி மாவு, சகிதம் சென்றது உபயோகமாக இருந்தது.

கூடவே ORS,  க்ளுகோஸ் பாக்கெட்டுகள்,  எலெக்ட்ரால் போன்றவையும் எடுத்துச் செல்வது பயன் தரும்.

மெடிகல் கிட்டில் வலி நிவாரணிகள், ஜெலூசில், பேராசிட்டமால், வாந்தி வராமலிருக்க மருந்துகள் என்று தேவையான மருந்துகளை எடுத்துச் செல்வது அவசியம்.

நாங்கள் 5 பெண்களுக்கும் தினமும் மடிசாரு என்பதனால் ஒருவருக்கு 3 வீதம் 15 புடவைகளை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டோம். (எங்கள் பெரிய நாத்தனார் உபயம். அவர் தினமும் மடிசாரு கட்டுபவர் என்பதால் எங்கள் எல்லாருக்கும் 9 கஜப்புடவை சப்ளை இவர் தான் என்பது எங்கள் எல்லாருக்கும் ஒரு வரம்).

நேரமும் இடமும் கிடைக்கும் போதெல்லாம் துணி அலசி, காய வைத்து மடித்து வைத்துக் கொண்டோம்.  எந்த சிக்கலும் இல்லாமல் மிக நேர்த்தியாக சமாளிக்க முடிந்தது.

ஒரு ரூமில் 5 பேர் இருந்தாலும் 3 பேர் இருந்தாலும் நேரத்திற்கு குளித்து மடியாகக் கிளம்ப முடிந்தது எங்களால் என்பது எங்களது ஒற்றுமைக்குச் சான்று.

எங்களில் சிலருக்கு வாந்தி, உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் மிக அழகாகச் சமாளித்து எல்லா பித்ரு காரியங்களையும் சிரத்தையாகச் செய்ய முடிந்தது கடவுளின் அனுக்க்ரஹம் தான் என்பதில் துளியும் ஐயமில்லை.

மொத்தத்தில் இது ஒரு வெற்றிப் பயணம். 


ப்ளூபர்ஸ்:

இந்த பயணத்தில் நாங்கள் தொலைந்தவர்களைத் தேடிக் கண்டு பிடித்தது, தூங்கியபடி வண்டி ஓட்டிய ட்ரைவரையும், மரியாதை குறைவாகப் பேசிய ட்ரைவரையும்  எப்படியோ சமாளித்து ஊர் வந்து சேர்ந்தது, பையை வைத்துவிட்டு வந்ததனால் புத்த கயா பார்க்க முடிந்தது என்று பல ப்ளுப்பர்ஸ் பற்றி மேற் சொன்ன பகுதிகளில் பார்த்தோம். அதில் விட்டுப்போனது இதோ இங்கே:

காசியில் வந்து இறங்கிய முதல் நாள் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா ஹோட்டலில் 2 ரூம்கள் எடுத்துக் கொண்டதைப் பற்றி முன்பே பார்த்தோம். அதிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூம் நன்றாக இல்லை என்றும் கிரிஜா மன்னி சரியாகத் தூங்கவில்லை என்றும்  சொன்னேன். விடியற்காலை 3 மணிக்கு மன்னி உட்கார்ந்திருந்ததைப் பார்த்த நான் எழுந்து சென்று மன்னியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கௌரியும் எழுந்து வந்தாள். 

இருட்டில் மற்றவர்களை எழுப்பாமல்  தட்டுத் தடுமாறி, மன்னிக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கலாம் என்று  கெட்டிலை எடுத்தோம்.  கெட்டிலை வந்த உடன் உபயோகித்திருந்ததால் மேஜை மேலேயே இருந்தது. அதனை ஆட்டிப் பார்த்த கௌரி தண்ணீர் இருக்கிறது என்று கூறி ஆன் செய்தாள். 

சிறுது நேரத்தில் ரூம் முழுக்க புகை கிளம்ப அவசர அவசரமாய் கெட்டிலை ஆஃப் செய்துவிட்டு மொபைல் வெளிச்சத்தில் பார்த்தால் கெட்டில் உள்ளே யாரோ சர்க்கரை டப்பாவை வைத்திருக்கிறார்கள். ஆட்டிப் பார்த்ததில் அதை தண்ணீர் என்று நினைத்து ஆன் செய்து விட்டோம். நல்ல வேளை ஃபயர் அலார்ம் இருந்திருந்தால் ஹோட்டலே அதிர்ந்திருக்கும். சமயத்தில் நிலமையை சமாளித்தாலும் அந்தக் கெட்டிலை க்ளீன் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.        https://mathangiyinmanam.blogspot.com/2024/06/1_36.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 -  வாரணாசி என்னும் காசி: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 6 -  சமாராதனை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.


No comments:

Post a Comment

எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...