Sunday, June 9, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 - இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் 

என் மாமனார் மாமியார் இருவரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வில் வாழ்ந்து காட்டியவர்கள். 9 குழந்தைகளைப் பெற்று நன் மக்களாய் ஆளாக்கியதோடு மருமகன், மருமகள்களையும் தன் குழந்தைகளாய் பாவித்தவர்கள்.  மாமனாரின் மறைவிற்குப் பிறகு அவரைப்  போலவே   என் மாமியார் எங்கள் எல்லாரையும் அரவணைத்து,  எங்கள் எல்லோருடைய குடும்ப  ஒற்றுமையையும் பேணிக் காத்து, பித்ரு காரியங்களை சரிவர செய்ய வைத்து குடும்ப க்ஷேமத்திற்கு வழிவகுத்தவர்.  96 வயது வரை வாழ்ந்து எங்கள் எல்லார் மனதிலும் நிலையான இடம் பிடித்தவர். 2023 ல் அவர் இறைவனடி எய்தினார்.  அவரது வருஷாப்தீக காரியங்களை 2024 மே மாதம்    எங்கள் அத்திம்பேர் சுந்தர சாஸ்திரிகள் அவர்களின் வழிகாட்டுதலில் நாங்கள் எல்லாரும் சேர்ந்து சிரத்தையாகச் செய்தோம்.  25.5.2024 கிரேக்கியம் சிறப்பாக முடிந்தது.




கிரேக்கியம் முடிந்த கையோடு,  சாயங்காலம் 5 மணி வாக்கில் விஜயா அக்கா, சுந்தர் அத்திம்பேர் (நாங்கள் இவரை மாமா என்றே அழைக்கிறோம்),  ரேவதி அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர், அனந்த கிருஷ்ணன் அண்ணா, கிரிஜா மன்னி,  'மாதங்கி' யாகிய நான், என் கணவர் ஜெயராமன்,  அவரின் தம்பி சீதாராமன், அவர் மனைவி கௌரி,  கடைசி தம்பி ரகுராமன், அவர் மனைவி சாராதா சகிதம்  இராமேஸ்வரத்தை நோக்கி வேனில் பயணம் மேற்கொண்டோம். 




எனது  பெரிய நாத்தனார் சியாமளா அக்கா எங்களுக்கு பட்டு பட்டாக தோசையும் தக்காளி  தொக்கும் செய்து கொடுத்தார். கிரேக்கியத்திற்கு சமையல் செய்தவர் ரவா உப்புமா செய்து கொடுத்திருந்தார். அதனை வழியில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு இரவு 11.30 மணிக்கு தமிழக அரசால்  பராமரிக்கப்படும் 'ஆலயம்' எனும் யாத்ரிகள் குடும்பத்துடன் தங்குமிடத்தினை அடைந்தோம். 

இராமேஸ்வரத்தில் பித்ரு காரியங்கள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாத்தியார் ஸ்ரீராம் வாத்தியார். அவர் இந்த இடத்தினை எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார்.  மிகப் பெரிய இடம். மிக நன்றாக பராமரித்து வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக பல மாநிலங்களிலிருந்தும் வரும் யாத்ரிகர்கள் பாத்திரம் அடுப்பு சகிதம் அங்கேயே தங்கி வெளிப்புறத்தில் சமைத்துச் சாப்பிடுகிறார்கள் .  அங்கு எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழிவதால் முன் கூட்டியே 'புக்' செய்வது அவசியம்.  ஏசி ரூம்கள் ரெஸ்ட் ரூம் வசதியுடன் விசாலமாக இருக்கின்றன.  ஒரு ரூமில் 4 பேர் வரை தங்க முடிகிறது. எக்ஸ்ட்ரா பெட் தலையணை கொடுக்கிறார்கள்.  சுந்தர் மாமாவும் விஜயா அக்காவும் ஸ்ரீராம் அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டார்கள். நாங்கள் பத்து பேர் மூன்று ரூம்கள் எடுத்துக் கொண்டு  தங்கி  நன்கு தூங்கினோம்.

இராமேஸ்வரத்தில் முதல் நாள்:

26 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு எல்லாரும் குளித்து மடிசார், பஞ்சகசம் சகிதம் வேனில் 'தனுஷ்கோடி' நோக்கி பயணப்பட்டோம்.  


தனுஷ்கோடி:

தனுஷ்கோடியில் வங்காள விரிகுடா விற்கு 'மஹோததி' என்று பெயர்.

 

மஹோததி மணலில் தம்பதியர்கள்  ஒரு வட்டம் வரைந்து அதனுள் வில் அம்பு வரைந்து  அந்த அம்பின் மேல் மற்றும் அடி முனையில் மஞ்சள் குங்குமம் வைத்து பூ போட்டு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து காசி யாத்திரை நல்ல படி தொடங்கி சிறப்பாக முடியவும் பாப விமோசனம் கிடைக்கவும் இராம இலக்குமண பரத சத்ருக்ண ஹனுமான் சமேதருக்கு வேண்டுதல் முடித்து,  சேது மாதவரை பிரார்த்தனை செய்து சங்கல்ப பூஜை செய்தோம். 


அந்த வில் அம்பு வரைந்த மண்ணுடன் பூ பழம் சகிதம் கையில் எடுத்துக் கொண்டு கடல் அரக்கியான 'பிபலாயி' க்கு அர்பணித்து, அவள் பசி போக்கி விகல்பமில்லாமல் யாத்திரை நடைபெற வேண்டிக்கொண்டோம். தம்பதிகளின் புடவை மற்றும்  வேஷ்டி முனையை முடிந்து கொண்டு, குடும்ப க்ஷேமத்திற்காக  மஹோததி கடலில் 36  முறை முங்கி அமிழ்ந்து  வேண்டிக் கொண்டோம்.  

வாத்தியார் சொன்ன சம்பிரதாயப்படி கடலிலிருந்து மண் எடுத்து வந்தோம். அந்த கடல் மண்ணால் மூன்று சிவலிங்கம் பிடித்து அதனை சேது மாதவர் (இராமேஸ்வரம்), வேணி மாதவர் (அலகாபாத்) மற்றும்  பிந்து மாதவர் (காசி) என பாவித்து பூஜை செய்தோம். வேணி மாதவர் மற்றும் பிந்து மாதவராக பாவித்த மண்ணினை இராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு,  இராமேஸ்வரத்தின்  சேது மாதவராக பாவித்து பூஜை செய்த மண்ணை காசிக்கு எடுத்துச் செல்ல பேக் செய்து கொண்டோம்.  முதல் நாள் தொடக்கம் இனிதே முடிந்தது.




அங்கிருந்து 'அரிச்சல் முனை' க்குச் சென்றோம்.  

அரிச்சல் முனை:

வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் இணையும்  இந்த 'அரிச்சல் முனை' இராமேஸ்வரம் முடிவடையும் இடம்.   இந்த இடத்திலிருந்து இலங்கை 15 கிமீ தூரம் மட்டுமே. இங்கிருந்து  பைனாகுலரால் பார்த்தால் இலங்கை தெரியும்.  கடலில் ஆட்டம் போட்டோம்.



அங்கிருந்து கிளம்பி கோதண்டராமர் கோவிலுக்குச் சென்றோம்.  

கோதண்டராமர் கோவில்:

இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் இராமர், சீதை இருவரும் தங்கி இருந்த இடம் இது  என்கிறது புராணம்.  இராவணன் செய்த தவறை விபீஷணன் சுட்டிக்காட்டியும் இராவணன் சீதையை விடுவிக்க மறுத்ததால் அவரை விட்டு அகன்று இராமனை விபீஷணன் அடைக்கலம் அடைந்த இடம் இது.  இங்கு இராமர் சீதா இலக்குமணன் ஹனுமான்  மூர்த்திகளுடன் விபீஷணன் இராமரை வணங்கும் கோலத்தில் உள்ள மூர்த்தியையும் காணலாம்.  அது இந்த இடத்தின் சிறப்பு.  அது மட்டுமல்லாமல் இந்த ஸ்தலத்தில் சீதா தேவி இராமரின் வலது புறத்தில் இருக்கிறார். மற்ற படங்களிலும் ஸ்தலங்களிலும் இராமரின் இடது புறத்தில் தான் சீதையைக் காண்கிறோம். இந்த இடம் தவிர்த்து நேபாளத்தில் மட்டுமே இராமரின் வலது புறத்தில் சீதாதேவி இருக்கும் மூர்த்தி காணக் கிடைக்கிறது.  இலங்கையை வென்று உன்னை மன்னனாக்குவேன் என்று உறுதி பூண்ட இராமர் அடைக்கலம் அடைந்த விபீஷணனுக்கு இலக்குவன் கையால் பட்டாபிஷேகம் செய்வித்த இடம் இது என்று கூறப்படுகிறது.



கோதண்டராமர் திருக்கோவிலிலிருந்து நாங்கள் தங்கியிருந்த 'ஆலயம்' ஹோட்டல் ரூமிற்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு சாப்பிடச் சென்றோம். 

இராமேஸ்வரத்தில் தீர்த்த சிரார்தம், சமையல் சாப்பாடு போன்றவை செய்வதற்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். யாத்திரிகர்களின் குடும்ப முறைப் படி அந்தந்த மாநிலக் காரர்களின் பழக்கவழக்கத்தின் படி பூசனைகள் செய்து உணவு சமைத்துக் கொடுக்க பல  குடும்பங்கள் இருக்கின்றன.  அவரவரின் வாத்தியார்களே/சாஸ்திர்களே  யாத்திரிகர்களின் பழக்கத்திற்கேற்றார் போல குடும்பங்களை நியமிக்கிறார்கள். மாற்றி  நியமிப்பதை யாத்திரிகர்களே கேட்டாலும் அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அதனை ஒரு நியமமாகக் கடை பிடிக்கிறார்கள்.

ஸ்ரீராம் வாத்தியார் எங்களுக்கு நியமித்திருந்த குடும்பம் திரு. ராமமூர்த்தி, ஜெயலஷ்மி  அவர்களது குடும்பம்.  அவர்கள் வீட்டிற்கு சாப்பிடச் சென்றோம். பாயசத்துடன் விருந்து சாப்பாடு மிக அருமை. இவர்கள் சமையலும் விருந்தோம்பலும் குறிப்பிடத்தக்கது, அவர்கள் எல்லாருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிய விதம் நெஞ்சைத் தொட்டது.  எங்களது முறையில் சமையல், சாப்பாடு, பித்ரு காரியம் செய்யும் எல்லாருக்கும் இவர்களை பரிந்துரைக்கலாம். 

இராமர் பாதம்:

அடுத்து நாங்கள் சென்றது 'இராமர் பாதம்' எனும் இடத்திற்கு.  இந்த இடம் இருப்பது கந்த மாதவ பர்வதம். சீதையை மீட்க ஆலோசனை நடத்திய இடம் இது எனப்படுகிறது. கடலைக் கடந்து இலங்கை செல்லுமுன் இராமர் இங்கு தங்கியதாக ஐதீகம்.  இந்த இடம் இராமேஸ்வரத்தின் உயரமான இடம். இங்கிருந்து பார்த்தால் இராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க முடிகிறது. கடலும்  இராமநாத ஸ்வாமி கோவில் கோபுரமும் சுற்றிப் பார்க்க மிக அழகாக இருக்கிறது. 



அடுத்து நாங்கள் பார்த்தது இராமர் தீர்த்தம்.  

இராமர் தீர்த்தம்:

இராமர் தன் வில்லினைக் கொண்டு இந்த இராமர் தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.  
 
                                      

அங்கிருந்து இராமேஸ்வரத்தின் பிரசித்தி பெற்ற 'இராமநாத ஸ்வாமி,  கோவிலுக்குச் சென்றோம்.  

இராமநாத ஸ்வாமி:

இங்கு அம்பாள் 'பர்வதவர்தினி'. இந்தக் கோவில் மிகப் பழமை வாய்ந்தது. இதில் மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன.   முதல் இரண்டு உள் பிரகாரங்கள் 1660 லேயே கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
                                                          



அதில்  மூன்றாம் பிரகாரம் கட்டுவதற்கு மட்டுமே 30 ஆண்டுகள் அதாவது 1740 ஆம் ஆண்டு முதல் 1770 ஆம் ஆண்டு வரை ஆகியிருக்கிறது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். 1200 க்கும் மேற்ப்பட்ட தூண்கள் கண்களைக் கவருகின்றன. இதனை நிர்மாணித்தவர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார்.


இவரது மகன் பாஸ்கர சேதுபதி இந்தக் கோவில் மட்டுமல்லாது பல கோவில்களுக்கு திருப்பணி செய்தவர். விவேகானந்தரை தன் சொந்த செலவில்  'அனைத்திந்திய உலக சமயப் பேரவை'க்கு  அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அனுப்பி வைத்தவர் இவர் என்பது கூடுதல் தகவல்.

இராமர் இராவணனைக் கொன்றதனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்த ஸ்தலத்தில் சிவபெருமானை வழிபடுவதாக புராணம் சொல்கிறது. அதனால் தான் இந்த ஊர் இராமன் ஈசனை வழிபட்ட இராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறதாம். இராமன் ஹனுமனை கைலாயத்திலிருந்து லிங்கம் கொணரும்படி அனுப்பினாராம். அனுமன் வர நேரமானதால் நல்ல நேரம் முடியுமுன் சீதா தேவி மண்ணினால்  பிடித்த சிவனை பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறது வரலாறு.  அனுமன் கொண்டு வந்த விஷ்வ லிங்கத்திற்கு மரியாதை செய்யும் விதமாக அந்த விஷ்வ லிங்கத்திற்குத் தான்   இங்கு பூஜை நடக்கிறது.

இந்த ஆலயத்தின் லிங்கம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இராமநாத கோவிலை தரிசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

வரும் வழியில் இலக்ஷ்மண தீர்த்தம் பார்த்தோம்.  நேரமாகி விட்டதால் உள்ளே செல்ல முடியவில்லை. இருட்டிவிட்டது. வெளியிலிர்ந்தே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு கேமராவில் 'கிளிக்' கிக் கொண்டு வந்துவிட்டோம்.

இரவு உணவுக்கு கார்த்திக் என்பவரின் வீட்டில் சப்பாத்தி தால் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து தூங்கிவிட்டோம். 

மறு நாள்  அதாவது 27.5.2024 அன்று காலை குளித்து மடிசார் பஞ்சகசத்துடன் அதிகாலையில்  கிளம்பிவிட்டோம். 


முதலில் ஸ்ரீராம் வாத்தியார் கிரஹத்தில் தீர்த்த ஸ்ரார்தம் ஆரம்பிப்பதற்கான பாப விமோசன சங்கல்பம் செய்து விட்டு அக்னிதீர்த்தத்தில் நீராட சென்றோம்.  அக்னி தீர்த்தம் என்பது மஹோததி கடலாகும். அது முதல் ஸ்நாநம்.  அங்கிருந்து இராமநாத ஸ்வாமி திருக்கோவிலுக்குச் சென்றோம்.  திரு. இராமமூர்த்தி அவர்களும்  எங்களுடன் வந்தார்கள். 

இராமநாத ஸ்வாமி கோவிலில் மொத்தம்  21 கிணறுகள் இருக்கின்றன.  ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர் இரைத்து ஸ்நாநம் செய்ய வேண்டும்.  கயிற்றுடன் கட்டிய நிறைய வாளிகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. நீர் இரைக்க என்று கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே நீர் இரைத்து நம் மீது ஊற்ற வேண்டும். ஒருவருக்கு அதிக பட்சம் 5 நபர்கள் என்று பிரித்திருக்கிறார்கள். நாங்கள் 12 பேர்கள் ஒரே குடும்பமாகச் சென்றதால் எங்கள் அனைவரையும் ஒரு சேர செல்ல அனுமதி அளித்தார்கள். இராமமூர்த்தி அவர்கள் நீர் இறைத்து எங்கள் ஒவ்வொருவர் தலையிலும் ஊற்றினார். 

அக்னி தீர்த்தமான வங்காள விரிகுடா கடல் ஸ்நாநத்திற்குப் பிறகு, முதல் கிணறான  1.'மஹாலக்ஷ்மி' தீர்த்தத்திலிருந்து தொடங்கி  21 கிணறுகளில் எங்கள் ஸ்நாநம் தொடர்ந்தது. அடுத்தடுத்து நாங்கள் நீராடிய தீர்த்தங்கள்: 2.'கந்தமாதன ', 3.'கவஷ்ய',  4.'கவாய', 5.'நீலா', 6.'நள', 7.''சேது மாதவ' 8.'பிரம்மஹத்தி தோஷ நிவாரண', 9. 'சாவித்திரி', 10.'காயத்திரி', 11.'சரஸ்வதி', 12.'சங்கு', 13.'சக்கிர', 14.'சூர்ய', 15.'சந்திர', 16.'சிவ', 17.'சர்வ தீர்த்தம்', 18.'கயா', 19.'யமுனா', 20.'கங்கா', 21.'கோடி தீர்த்தம்' .  

அக்னி தீர்தத்தையும் சேர்த்து மொத்தம் 22 தீர்த்தங்களில் நீராடினோம். இந்த 22 தீர்த்தங்களும் இராமருடைய் 22 அம்புகளைக் குறிக்கிறதாம்.

ஒவ்வொரு தீர்தத்திலும் கூட்டம் அலை மோதியது . இடித்துத் தள்ளியபடி பலர் சென்றனர். ஆனாலும் இராமமூர்த்தி அவர்கள் எங்கள் எல்லாரையும் ஒரு சேர அழைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் நீர் இறைத்து ஊற்றி மிகச் சிரத்தையாக எங்களை அழைத்துச் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது. 

கோடி தீர்தத்திலிருந்து அவர்  நீர் எடுத்து ஒரு கேனில் நிரப்பி பத்திரப்படுத்தினார்.  முன்பு பத்திரப்படுத்திய மணலையும், கோடித் தீர்த்தத்தையும் நாம் காசிக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது அவசியமாகும்.

கோவிலுக்கு அருகிலேயே இராமமூர்த்தி அவர்களின் பெற்றோர் வசிக்கிறார்கள் அவர்கள் சுந்தர் மாமாவை பார்க்க விரும்பியதால் அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வந்தோம். 

அங்கிருந்து இராம தீர்த்தம் இலக்குமண தீர்த்தம் இரண்டும் செல்வதாக இருந்தது.  தீர்த்த ஸ்ரார்ததிற்கு நேரமாகி விட்டதால்  இராமமூர்த்தி அவர்கள் இராம தீர்த்தம் மற்றும் இலக்குமண தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வருவதாகவும் அதனை தீர்த்த ஸ்ரார்தத்திற்கு முன் தலையில் எல்லாரும் பிரோக்க்ஷணம் செய்து கொள்வதாகவும்  முடிவானது.  கோடி தீர்தத்திலிருந்து அவர்  எடுத்துக் கொடுத்த நீரினை பத்திரமாக எடுத்துக் கொண்டோம்.


அங்கிருந்து ரூமிற்கு சென்று ஈர உடைகளை மாற்றி கொண்டோம்.  ரூமை காலி செய்து கொண்டு பணம் கட்டி சாவியை கொடுத்துவிட்டு தீர்த்த ஸ்ரார்தம் செய்ய இராமமூர்த்தி, ஜெயலக்ஷ்மி அவர்கள் கிரஹத்திற்குச் சென்றோம். 

 



சிரார்ததிற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தார்கள்.  எங்கள் அக்கா அத்திம்பேருக்கு தனியாகவும்,   மற்ற சகோதரர்கள் சிரார்தம் செய்ய தனியாகவும்   ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். சமையலும் இரண்டு வகையில் அவரவர் குடும்ப முறைப்படி செய்திருந்தார்கள். தீர்த்த சிரார்த்தம் என்பது புண்ணிய ஸ்தலங்களில் செய்யப்படுவதால் குறிப்பிட்ட திதியில் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. புனித நதிகளின் கரையில் அமைந்த இராமேஸ்வரம் போன்ற  புண்ணிய இடங்களில் பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதால் குடும்ப க்ஷேமம் உண்டாகும். மனம் ஒன்றி மனத் திருப்தியுடன் எல்லாரும் சேர்ந்து செய்தது எங்களுக்கு நிறைவாக இருந்தது.  பிராமணர்களுக்கு சாப்பிடும் போது நாங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்னது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. பிறகு பிராமணர்களுக்கு தக்ஷணைகள் கொடுத்த பின்  நாங்கள் சாப்பிட்டோம்.  இரவு உணவுக்கு கார்த்திக் அவர்கள் வீட்டிலிருந்து சப்பாத்தி, தக்காளித் தொக்கு பேக் செய்து எடுத்துக் கொண்டோம். உடை மாற்றிக் கொண்டு மாலை 3.30 மணிக்கு இராமேஸ்வரத்தை விட்டு வேனில் புறப்பட்டோம்.

பாம்பன் பாலம்:

பாம்பன் பாலத்தைக் கண்டதும் வேனை நிறுத்தச் சொல்லி இறங்கி போய் பார்த்துவிட்டு வந்தோம். புதிய பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.



                    

தேவிப் பட்டினம்:

வழியில் 'தேவிப் பட்டினம்' என்னும் இடத்தில் நவக்ரஹ திருக்கோவிலுக்குச் சென்றோம். இந்தக் கோவிலில் நவக்ரஹம் கடலுக்குள் இருக்கிறது. பூஜை நீரில் இறங்கி நின்று தான் செய்கிறார்கள். அந்த இடத்தைச் சுற்றி எடுத்துக் கட்டி இருக்கிறார்கள். பார்க்க குளம் போல் இருக்கிறது. வித்தியாசமான நவக்ரஹத் திருக்கோவிலை இரசித்த படி வலம் வந்தோம்.





உப்பூர் விநாயகர் கோவில்:

அங்கிருந்து புறப்பட்டு உப்பூர் விநாயகர் கோவிலுக்குச் சென்றோம். 'வெயிலுகந்த விநாயகர்' என்ற பெயர் கொண்டு கம்பீரமாய் வீற்றிருக்கிரார் விநாயகர்.  காசிக்கு செல்லும் அனைவரும் இராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கும் உப்பூர் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வேண்டி வழிபட்டு தேங்காய் உடைத்து விட்டுச் சென்றால் காசி யாத்திரை விக்னமில்லாமல் பூரணமாகும் என்பது ஐதீகம்.





இந்த விநாயகர், சூரியனுக்கு ஏற்பட்ட சாபத்தினைப் போக்க  அருளியதால் சூரியன் தன் கிரணங்களால் வழிபடும் ஸ்தலம் இது. அதனால் இங்கு விநாயகருக்கு 'வெயிலுகந்த விநாயகர்' என்ற பெயராம். இந்த இடத்தில் நகரத்தார் கோவில் கட்டி இன்று வரை பராமரித்து வருகிறார்கள். இன்றும் தினமும் சூரிய கிரணம் விநாயகர் மீது படும்படி அமைந்துள்ளது இந்தக் கோவில். நாங்கள் சென்றது 27.5.2014 ஆம் தேதி. 26 ஆம் தேதி சங்கட ஹர சதுர்த்தி. அது 27 வரை இருந்ததும் அன்று இந்த விநாயகரை தரிசிக்கக் கிடைத்ததும் எங்கள் பாக்கியம், 28.5.2023 ல் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தேறியதாம். அது முடிந்து  வருடாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததைக் காணக் கிடைத்ததும் மகிழ்ச்சியைக் கொடுத்தது எங்களுக்கு. 

கொண்டு வந்த சப்பாத்தியை வழியில் வேனை நிறுத்தி சாப்பிட்டோம். பன்னீர் சோடா குடித்து 'சியர்ஸ்' சொல்லி கமராவில் பதிவு செய்து 'கூலாக' அங்கிருந்து கிளம்பினோம்.  


மகாதானபுரம் வந்து சேரும் பொழுது  இரவு மணி 12.20. தோய்க்க வேண்டிய துணிகளை வாஷிங்க் மெஷினில் போட்டு தோய்த்து காய வைத்து நாங்கள் தூங்கும் போது விடியற்காலை  3 மணி.

இராமேஸ்வரம் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. காசி யாத்திரைக்கான துவக்கத்தை இராமேஸ்வரத்தில் இனிதாய் தொடங்கிவிட்டோம். கையில் சேது மாதவராய் பூஜை செய்த மண்ணையும், கோடி தீர்த்தத்திலிருந்து எடுத்து வந்த தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டோம். காசி யாத்திரை  28.5.2024 ல் தொடங்குகிறது. அந்த விவரம் பகுதி 2 ல் காணலாம்.

இராமேஸ்வரம் பயணத்திற்கு ஆன செலவுகள்:

வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள் (ரூ)

1

மகாதானபுரத்திலிருந்து 282 கிமீ தோலைவிலுள்ள இராமேஸ்வரத்திற்கு 12 நபர்கள் சென்று வர மூன்று நாட்களுக்கு வேன் செலவு                                  

21000.00

2

ஆலயம் ஹோட்டல் 2 நாட்களுக்கு 3 ரூம்கள்  ஒரு நாளைக்கு ஒரு ரூமுக்கு 2000 வீதம் 2 நாளைக்கு

12000.00

3

காஃபி 20 ரூ 8 பேருக்கு                                   

160.00

4

தனுஷ்கோடி பூஜா சம்பாவனை                            

3200.00

5

சாப்பாடு ஒரு ஆளுக்கு 200 மேனி 13 பேருக்கு                  

2600.00

6

காஃபி 20 ரூ 12 பேருக்கு

240.00

7

சப்பாத்தி ஆளுக்கு 100 ரு வீதம் 12 பேருக்கு               

1200.00

8

இராமநாத ஸ்வாமி கோவில் சிறப்பு தரிசனம் ஆளுக்கு 100 ரூ வீதம் 12 பேருக்கு                                    

1200.00

9

ஒரு காஃபி ரூ20 வீதம் 15 காஃபி                                                                                  

300.00

10

21 கிணறுகளில் ஸ்நாநம் செய்ய ஆளுக்கு 200ரூ 12 பேருக்கு                   

2400.00

12

ப்ராமணா சம்பாவனை      

5000.00

13

வாத்யார் சம்பாவனை  

4000.00

14

ப்ராமணா சாப்பாடு 6 பேருக்கு 600 ரூ வீதம்                                    

3600.00

15

எங்கள் சாப்பாடு 10 *200   + 500 விஷ்ணு இலை                                                  

2500.00

16

பேக் செய்த சப்பாத்தி 12 * 100

1200.00

17

மொத்தம்   

60600.00

                                                                                                        

இராமேஸ்வரம் என் பார்வையில்:

இராமேஸ்வரம் மிக அழகான கடற்கரை நகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித ஸ்தலம். இராமனும் ஈஸ்வரனும் இணைந்த இடம். இராமநாத ஸ்வாமி கோவிலில் இருப்பது இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்.  

இங்கு முக்கியமாக யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணகளின் வரவு  தான் முக்கிய வருமானம்.  

கடற்கரைகள் ஓரளவுக்கு தூய்மையாக இருக்கின்றன, 

வீதிகள் மிகக் குறுகலாக இருக்கின்றன. ஒரு வண்டி வந்தால் எதிரில் இன்னொரு வண்டி வருவது கூடக் கஷ்டமாகி விடுகிறது. பெரிய வண்டியைத் திருப்புவது ப்ரம்ம பிரயத்னமாக இருக்கிறது. 

பல வீடுகளின் வெளியில் பறவைகள் மாடுகள் குடிக்க தண்ணீர் வைத்திருக்கிறார்கள்.

நான் பார்த்தவரை மக்கள் நன்கு பழகுகிறார்கள்.  யாத்திரிகர்களுக்கு ஏற்ற இடம்.

காசி யாத்திரை என்பது  இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து இராமேஸ்வரத்திலேயே நிறைவடைகிறது. அதாவது இராமேஸ்வரம் மண்ணை  கங்கையில் சேர்த்து  கங்கையிலிருந்து  நீரை , கொண்டு வந்து இராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த பின் நிறைவடைகிறது. 

பயணங்கள் தொடரும்.

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 -  வாரணாசி என்னும் காசி:
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா 

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 -  தம்பதி பூஜை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://mathangiyinmanam.blogspot.com/2024/07/5_25.html
https://mathangiyinmanam.blogspot.com/2024/07/5_25.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 6 -  சமாராதனை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பயணங்கள் தொடரும்.


மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

5 comments:

  1. Elaborate narration and photographs. Enjoyable reading. This will be very useful for anyone planning a trip. Thanks for taking time to share everything.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much Viji. Very happy to see your comment.

      Delete
  2. Excellent akka what a defenation with photo all are very good 💯

    ReplyDelete
  3. Thank you so much Rama. It is so nice of you to call and talk to me as well.

    ReplyDelete
  4. Really detailed narration, and pics are lovely!

    ReplyDelete

எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...