அங்கிருந்து கிளம்பி கோதண்டராமர் கோவிலுக்குச் சென்றோம்.
கோதண்டராமர் கோவில்:
இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் இராமர், சீதை இருவரும் தங்கி இருந்த இடம் இது என்கிறது புராணம். இராவணன் செய்த தவறை விபீஷணன் சுட்டிக்காட்டியும் இராவணன் சீதையை விடுவிக்க மறுத்ததால் அவரை விட்டு அகன்று இராமனை விபீஷணன் அடைக்கலம் அடைந்த இடம் இது. இங்கு இராமர் சீதா இலக்குமணன் ஹனுமான் மூர்த்திகளுடன் விபீஷணன் இராமரை வணங்கும் கோலத்தில் உள்ள மூர்த்தியையும் காணலாம். அது இந்த இடத்தின் சிறப்பு. அது மட்டுமல்லாமல் இந்த ஸ்தலத்தில் சீதா தேவி இராமரின் வலது புறத்தில் இருக்கிறார். மற்ற படங்களிலும் ஸ்தலங்களிலும் இராமரின் இடது புறத்தில் தான் சீதையைக் காண்கிறோம். இந்த இடம் தவிர்த்து நேபாளத்தில் மட்டுமே இராமரின் வலது புறத்தில் சீதாதேவி இருக்கும் மூர்த்தி காணக் கிடைக்கிறது. இலங்கையை வென்று உன்னை மன்னனாக்குவேன் என்று உறுதி பூண்ட இராமர் அடைக்கலம் அடைந்த விபீஷணனுக்கு இலக்குவன் கையால் பட்டாபிஷேகம் செய்வித்த இடம் இது என்று கூறப்படுகிறது.
கோதண்டராமர் திருக்கோவிலிலிருந்து நாங்கள் தங்கியிருந்த 'ஆலயம்' ஹோட்டல் ரூமிற்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு சாப்பிடச் சென்றோம்.
இராமேஸ்வரத்தில் தீர்த்த சிரார்தம், சமையல் சாப்பாடு போன்றவை செய்வதற்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். யாத்திரிகர்களின் குடும்ப முறைப் படி அந்தந்த மாநிலக் காரர்களின் பழக்கவழக்கத்தின் படி பூசனைகள் செய்து உணவு சமைத்துக் கொடுக்க பல குடும்பங்கள் இருக்கின்றன. அவரவரின் வாத்தியார்களே/சாஸ்திர்களே யாத்திரிகர்களின் பழக்கத்திற்கேற்றார் போல குடும்பங்களை நியமிக்கிறார்கள். மாற்றி நியமிப்பதை யாத்திரிகர்களே கேட்டாலும் அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அதனை ஒரு நியமமாகக் கடை பிடிக்கிறார்கள்.
ஸ்ரீராம் வாத்தியார் எங்களுக்கு நியமித்திருந்த குடும்பம் திரு. ராமமூர்த்தி, ஜெயலஷ்மி அவர்களது குடும்பம். அவர்கள் வீட்டிற்கு சாப்பிடச் சென்றோம். பாயசத்துடன் விருந்து சாப்பாடு மிக அருமை. இவர்கள் சமையலும் விருந்தோம்பலும் குறிப்பிடத்தக்கது, அவர்கள் எல்லாருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிய விதம் நெஞ்சைத் தொட்டது. எங்களது முறையில் சமையல், சாப்பாடு, பித்ரு காரியம் செய்யும் எல்லாருக்கும் இவர்களை பரிந்துரைக்கலாம்.
இராமர் பாதம்:
அடுத்து நாங்கள் சென்றது 'இராமர் பாதம்' எனும் இடத்திற்கு. இந்த இடம் இருப்பது கந்த மாதவ பர்வதம். சீதையை மீட்க ஆலோசனை நடத்திய இடம் இது எனப்படுகிறது. கடலைக் கடந்து இலங்கை செல்லுமுன் இராமர் இங்கு தங்கியதாக ஐதீகம். இந்த இடம் இராமேஸ்வரத்தின் உயரமான இடம். இங்கிருந்து பார்த்தால் இராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க முடிகிறது. கடலும் இராமநாத ஸ்வாமி கோவில் கோபுரமும் சுற்றிப் பார்க்க மிக அழகாக இருக்கிறது.
அடுத்து நாங்கள் பார்த்தது இராமர் தீர்த்தம்.
இராமர் தீர்த்தம்:
இராமர் தன் வில்லினைக் கொண்டு இந்த இராமர் தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.
அங்கிருந்து இராமேஸ்வரத்தின் பிரசித்தி பெற்ற 'இராமநாத ஸ்வாமி, கோவிலுக்குச் சென்றோம்.
இராமநாத ஸ்வாமி:
இங்கு அம்பாள் 'பர்வதவர்தினி'. இந்தக் கோவில் மிகப் பழமை வாய்ந்தது. இதில் மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் இரண்டு உள் பிரகாரங்கள் 1660 லேயே கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
அதில் மூன்றாம் பிரகாரம் கட்டுவதற்கு மட்டுமே 30 ஆண்டுகள் அதாவது 1740 ஆம் ஆண்டு முதல் 1770 ஆம் ஆண்டு வரை ஆகியிருக்கிறது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். 1200 க்கும் மேற்ப்பட்ட தூண்கள் கண்களைக் கவருகின்றன. இதனை நிர்மாணித்தவர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார்.
இவரது மகன் பாஸ்கர சேதுபதி இந்தக் கோவில் மட்டுமல்லாது பல கோவில்களுக்கு திருப்பணி செய்தவர். விவேகானந்தரை தன் சொந்த செலவில் 'அனைத்திந்திய உலக சமயப் பேரவை'க்கு அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அனுப்பி வைத்தவர் இவர் என்பது கூடுதல் தகவல்.
இராமர் இராவணனைக் கொன்றதனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்த ஸ்தலத்தில் சிவபெருமானை வழிபடுவதாக புராணம் சொல்கிறது. அதனால் தான் இந்த ஊர் இராமன் ஈசனை வழிபட்ட இராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறதாம். இராமன் ஹனுமனை கைலாயத்திலிருந்து லிங்கம் கொணரும்படி அனுப்பினாராம். அனுமன் வர நேரமானதால் நல்ல நேரம் முடியுமுன் சீதா தேவி மண்ணினால் பிடித்த சிவனை பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறது வரலாறு. அனுமன் கொண்டு வந்த விஷ்வ லிங்கத்திற்கு மரியாதை செய்யும் விதமாக அந்த விஷ்வ லிங்கத்திற்குத் தான் இங்கு பூஜை நடக்கிறது.
இந்த ஆலயத்தின் லிங்கம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இராமநாத கோவிலை தரிசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
வரும் வழியில் இலக்ஷ்மண தீர்த்தம் பார்த்தோம். நேரமாகி விட்டதால் உள்ளே செல்ல முடியவில்லை. இருட்டிவிட்டது. வெளியிலிர்ந்தே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு கேமராவில் 'கிளிக்' கிக் கொண்டு வந்துவிட்டோம்.
இரவு உணவுக்கு கார்த்திக் என்பவரின் வீட்டில் சப்பாத்தி தால் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து தூங்கிவிட்டோம்.
மறு நாள் அதாவது 27.5.2024 அன்று காலை குளித்து மடிசார் பஞ்சகசத்துடன் அதிகாலையில் கிளம்பிவிட்டோம்.
முதலில் ஸ்ரீராம் வாத்தியார் கிரஹத்தில் தீர்த்த ஸ்ரார்தம் ஆரம்பிப்பதற்கான பாப விமோசன சங்கல்பம் செய்து விட்டு அக்னிதீர்த்தத்தில் நீராட சென்றோம். அக்னி தீர்த்தம் என்பது மஹோததி கடலாகும். அது முதல் ஸ்நாநம். அங்கிருந்து இராமநாத ஸ்வாமி திருக்கோவிலுக்குச் சென்றோம். திரு. இராமமூர்த்தி அவர்களும் எங்களுடன் வந்தார்கள்.
இராமநாத ஸ்வாமி கோவிலில் மொத்தம் 21 கிணறுகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர் இரைத்து ஸ்நாநம் செய்ய வேண்டும். கயிற்றுடன் கட்டிய நிறைய வாளிகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. நீர் இரைக்க என்று கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே நீர் இரைத்து நம் மீது ஊற்ற வேண்டும். ஒருவருக்கு அதிக பட்சம் 5 நபர்கள் என்று பிரித்திருக்கிறார்கள். நாங்கள் 12 பேர்கள் ஒரே குடும்பமாகச் சென்றதால் எங்கள் அனைவரையும் ஒரு சேர செல்ல அனுமதி அளித்தார்கள். இராமமூர்த்தி அவர்கள் நீர் இறைத்து எங்கள் ஒவ்வொருவர் தலையிலும் ஊற்றினார்.
அக்னி தீர்த்தமான வங்காள விரிகுடா கடல் ஸ்நாநத்திற்குப் பிறகு, முதல் கிணறான 1.'மஹாலக்ஷ்மி' தீர்த்தத்திலிருந்து தொடங்கி 21 கிணறுகளில் எங்கள் ஸ்நாநம் தொடர்ந்தது. அடுத்தடுத்து நாங்கள் நீராடிய தீர்த்தங்கள்: 2.'கந்தமாதன ', 3.'கவஷ்ய', 4.'கவாய', 5.'நீலா', 6.'நள', 7.''சேது மாதவ' 8.'பிரம்மஹத்தி தோஷ நிவாரண', 9. 'சாவித்திரி', 10.'காயத்திரி', 11.'சரஸ்வதி', 12.'சங்கு', 13.'சக்கிர', 14.'சூர்ய', 15.'சந்திர', 16.'சிவ', 17.'சர்வ தீர்த்தம்', 18.'கயா', 19.'யமுனா', 20.'கங்கா', 21.'கோடி தீர்த்தம்' .
அக்னி தீர்தத்தையும் சேர்த்து மொத்தம் 22 தீர்த்தங்களில் நீராடினோம். இந்த 22 தீர்த்தங்களும் இராமருடைய் 22 அம்புகளைக் குறிக்கிறதாம்.
ஒவ்வொரு தீர்தத்திலும் கூட்டம் அலை மோதியது . இடித்துத் தள்ளியபடி பலர் சென்றனர். ஆனாலும் இராமமூர்த்தி அவர்கள் எங்கள் எல்லாரையும் ஒரு சேர அழைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் நீர் இறைத்து ஊற்றி மிகச் சிரத்தையாக எங்களை அழைத்துச் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.
கோடி தீர்தத்திலிருந்து அவர் நீர் எடுத்து ஒரு கேனில் நிரப்பி பத்திரப்படுத்தினார். முன்பு பத்திரப்படுத்திய மணலையும், கோடித் தீர்த்தத்தையும் நாம் காசிக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது அவசியமாகும்.
கோவிலுக்கு அருகிலேயே இராமமூர்த்தி அவர்களின் பெற்றோர் வசிக்கிறார்கள் அவர்கள் சுந்தர் மாமாவை பார்க்க விரும்பியதால் அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வந்தோம்.
அங்கிருந்து இராம தீர்த்தம் இலக்குமண தீர்த்தம் இரண்டும் செல்வதாக இருந்தது. தீர்த்த ஸ்ரார்ததிற்கு நேரமாகி விட்டதால் இராமமூர்த்தி அவர்கள் இராம தீர்த்தம் மற்றும் இலக்குமண தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வருவதாகவும் அதனை தீர்த்த ஸ்ரார்தத்திற்கு முன் தலையில் எல்லாரும் பிரோக்க்ஷணம் செய்து கொள்வதாகவும் முடிவானது. கோடி தீர்தத்திலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த நீரினை பத்திரமாக எடுத்துக் கொண்டோம்.
அங்கிருந்து ரூமிற்கு சென்று ஈர உடைகளை மாற்றி கொண்டோம். ரூமை காலி செய்து கொண்டு பணம் கட்டி சாவியை கொடுத்துவிட்டு தீர்த்த ஸ்ரார்தம் செய்ய இராமமூர்த்தி, ஜெயலக்ஷ்மி அவர்கள் கிரஹத்திற்குச் சென்றோம்.
Elaborate narration and photographs. Enjoyable reading. This will be very useful for anyone planning a trip. Thanks for taking time to share everything.
ReplyDeleteThank you so much Viji. Very happy to see your comment.
DeleteExcellent akka what a defenation with photo all are very good 💯
ReplyDeleteThank you so much Rama. It is so nice of you to call and talk to me as well.
ReplyDeleteReally detailed narration, and pics are lovely!
ReplyDelete