Wednesday, July 31, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை நிறைவுப் பகுதி 6 - சமாராதனை

 குடும்பத்துடன் காசி யாத்திரை நிறைவுப் பகுதி 6 - சமாராதனை:

இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து அலகாபாத், காசி, கயா என்று எல்லா புண்ணிய ஸ்தலங்களிலும் ஸ்ரார்த்தம் செய்து பிண்டம் இட்டு பித்ரு காரியங்களை நிறைவாகச் செய்ததைப் பற்றி போன பகுதிகளில் பார்த்தோம். 3.6.2024 அன்று காலை 6.30 மணி அளவில் ஊர் வந்து சேர்ந்தாகிவிட்டது. 

கிரிஜா மன்னிக்கு  கோவிலில் வேண்டுதல் இருந்ததால்  சமயபுரம் மற்றும் வைதீஸ்வரர் கோவில் செல்ல வேண்டும் என்றார். எனவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான், கௌரி, மன்னி மூவரும் 10.30 மணி அளவில்  கார் புக் செய்து கொண்டு  முதலில் சமயபுரத்திற்குச் செல்ல முடிவு செய்தோம்.

அன்று எங்களுக்கு எங்களது நாத்தனார் சியாமளா அக்கா அகத்தில் சாப்பிடச் சொல்லி இருந்தார்கள். நாங்கள் சிற்றுண்டியை முடித்து விட்டு புளி சாதம், தயிர் சாதம் பேக் செய்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.

வழி முழுவதும் கிண்டலும் கேலியும் தான். மகளிர் மட்டும் செல்லும் பயணத்தில் ஆண்கள் தலை உருளுவதைத் தடுக்கத் தான் முடியுமா? பாவம் எங்கள் டிரைவர் தமிழ்ச்செல்வன்.  கிரிஜா மன்னி அந்த தமிழ்ச்செல்வனையும் விட்டு வைக்கவில்லை. அதற்குள் சமயபுரம் வந்துவிட்டது.

சமயபுரம்:

சமயபுரத்து மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்தக் கோவிலுக்கு பத்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.  நாங்கள் சென்ற போது மணி 12.30 ஆகிவிட்டது.


இங்கு சிறிய அளவில் வெள்ளியில் உடல் பாகங்கள் அதாவது, கை, கால், கண், மூளை, தொண்டை, முழு உடல், சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்று தனித்தனியாக வெள்ளி பொம்மைகள் விற்கிறார்கள். 


அவற்றை வாங்கி சமயபுரத்தாளுக்கு வேண்டிக் கொண்டு காணிக்கையாக உண்டியலில் போட்டால் அந்த பாகத்திலிருக்கும் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது ஐதீகம்.  குடுப்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக இந்த வேண்டுதலை யார் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.  நாங்கள் குடுபத்தினர் அனைவருக்கும் உடல் வாங்கி சாற்றினோம். அதனுடன் சிலருக்கு கண். சிலருக்கு கால் என்று எழுதி வைத்துக் கொண்டு மொத்தமாக வாங்கி சிறியவர், பெரியவர் எல்லாருடைய உடல் நலத்திற்காகவும் வேண்டிக் கொண்டு 28 உடல் பாகங்களும் தனித்தனி பிரார்த்தனையாக 8 உடல் பாகங்களும் வாங்கிக் கொண்டோம். 

உள்ளே மிகவும் கூட்டமாக இருந்தது, எங்களுக்கு முன்னால் ஒரு V.I.P. சென்றிருக்கிறார். அவருக்காக ஏதோ ஒரு வாயில் திறக்க, மன்னி எங்களையும் அந்த வழியில் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.  அருமையான தரிசனம். அம்மன் முகம் அத்தனை பொலிவு. கண்களை எடுக்கவே முடியவில்லை. மனமார தரிசனம் செய்து விட்டு 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என்று வேண்டிக் கொண்டு, கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கலும் புளி சாதம் ட்ரைவருக்கும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம்.  காரிலேயே அமர்ந்து நாங்கள் சியாமளா அக்கா வீட்டிலிருந்து கொண்டு சென்ற சாப்பாடு மற்றும் பிரசாதங்களை ட்ரைவருடனும் பகிர்ந்து சாப்பிட்டோம். வழியில் டீ, காஃபி குடித்து விட்டு  வைதீஸ்வரர் கோவிலை நோக்கிப் புறப்பட்டோம்.

வைதீஸ்வரர் கோவில்:

வைதீஸ்வரர் கோவில் பிரம்மாண்டமான கோபுரத்துடன் கம்பீரமாக இருக்கிறது.  தீராத நோயையும் தீர்த்து வைப்பவர் இந்த வைதீஸ்வரர்.



அங்காரகன் என்னும் செவ்வாய் கிரஹத்தின்  தொழு நோய் தீர்க்க சிவன், வைத்தியநாத ஸ்வாமியாய்  எழுந்தருளிய ஸ்தலம்  இந்தக் கோவில். தேவாரப் பாடல் பெற்ற செவ்வாய் கிரஹத்தைக் குறிக்கும் இந்த ஸ்தலம் நவகிரகக் கோவில்களில் ஒன்றாகும்.  அம்பாள் தையல் நாயகித் தாயார். 

பிரகாரங்கள் பெரிதாக இருக்கின்றன. சுற்றிக் குளத்துடன் தெய்வாதீனமாக இருக்கிறது இந்தக் கோவில்.



இங்கிருக்கும் சித்தாமிர்த்தக் குளத்தில் குளித்தால் பிணிகள் பறந்து போகும் என்பது நம்பிக்கை. இங்கு மிளகு, உப்பு கலந்த வெல்லத்தினை நீரில் கரைத்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்று  மக்கள் நம்புகிறார்கள்.  கோவிலிலேயே மிளகு, உப்பு, வெல்லம் வைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக யாரையும் குளத்தில் கரைக்கவிடுவதில்லை. அவர்கள் ஒரு பாத்திரத்தில் குளத்து நீரை வைத்திருக்கிறார்கள். மிளகு, உப்பு, வெல்லம் வாங்கி அங்கேயே கரைத்து வேண்டிக் கொள்ளலாம். நாங்களும் வாங்கி எல்லாருடைய க்ஷேமத்திற்கும் வேண்டிக் கொண்டு கரைத்தோம். 


வைதீஸ்வரரையும் தையல் நாயகியையும் மனமார வேண்டிக் கொண்டு மன்னி கொண்டு வந்திருந்த புடவை வேஷ்டியை ஸ்வாமிக்குச் சார்த்தும் படி கூறிவிட்டு காணிக்களைச் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பும் போதே மணி 5.30 ஆகிவிட்டது.  கோவில் பிரார்த்தனைகளை நிறைவாக நிறைவேற்றிய திருப்தியுடன்   அங்கிருந்து கிளம்பினோம்.

அங்கிருந்து புறப்பட்டு திருச்சியில் A2B யில்  ரவா தோசை, பொடி தோசை, தோசை, ஜிலேபி என்று ஜாலியாக டின்னர் சாப்பிட்டோம்.  டிரைவரும் சாப்பிட்ட பின காரில் திரும்பும் போது.  மறுநாள் இராமேஸ்வரத்திற்கு யார் யார் போவது என்று பேச்சுவார்த்தை நடந்தது எங்களிடையே. உண்மையில் எங்கள் எல்லாருக்குமே மீண்டும் அங்கு செல்ல ஆசை தான். ஆனால்  அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

வழியில் எங்கள் உரையாடல்:

ஏண்டி, உங்க அண்ணா என்னமோ பஸ்ல தான் இராமேஸ்வரம் போணும்னு சொல்றா? இது கிரிஜா மன்னி.

எல்லாரும் போக வேண்டியதில்லையாம் மன்னி என்றேன் நான்.

போடி நம்ம திரும்பியும் சேர்ந்து எப்போ இராமேஸ்வரம் போறது. மறுபடி வேன் புக் பண்ணலாம்னு நான் சொன்னா அதெல்லாம் முடியாதுங்கறார் உங்க அண்ணா.  என்னமோ பஸ் புடிச்சு கரூர் போறதாம் அங்கேர்ந்து இன்னொரு பஸ் புடிக்கறதாம். யாரால முடியுமோ வாங்கோன்னா என்ன அர்த்தம்? இதெல்லாம் நடக்கற காரியமா?  நம்ம அவாளுக்கு எதிரா ஒரு ஐடியா பண்ணுவோம் என்ற மன்னி,  டிரைவரைப் பார்த்து தமிழ் நீ என்ன பண்ற நாளைக்கு காலைல மூணு மணிக்கு வந்து லேடிஸ் எங்களை இராமேஸ்வரத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு அபிஷேகம் முடிஞ்சதும் கூட்டிட்டு வந்துடு இந்த ஜெண்ட்ஸ் எல்லாம் எப்படியோ எதயோ புடிச்சு வரட்டும். என்ன? என்றதும் தமிழ் நடுங்கி விட்டான்.  
சார் சொல்லட்டுங்க நான் வந்துடறேன் என்று அவன் சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ இராமேஸ்வரம்லேர்ந்து வந்ததும் ரெண்டு நாள் தலைமறைவாயிடு.  இரண்டு நாள் கழிச்சு வந்து என்னையும் சாரையும் திருச்சி ஏர்ப்போர்ட்ல விட மட்டும் நீ வந்தா போதும் என்று மன்னி சொன்னதும் நானும் கௌரியும் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டோம். நான் ஏதோ கௌரவமா கார்  ஓட்டி நல்ல கஸ்டமர் ரிலேஷன்ஷிப் வெச்ச்ருக்கேன் அதுக்கே பங்கம் வந்துடும் போல இருக்கே என்ற தமிழ்செல்வன் இரண்டு நாட்கள் எங்கள் வீட்டுப் பக்கமே வரவில்லை என்பது வேறு விஷயம். 
இப்படியாக நாங்கள் அரட்டை அடித்துச் சிரித்து மகிழ்ந்து ஊர் வந்து சேர்ந்த போது இரவு மணி 10.30 ஆகிவிட்டது. 

நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் அனந்தன் அண்ணா கிரிஜா மன்னியே அருகே அமரச் சொன்னதுமே மன்னிக்கு இது இராமேஸ்வரம் பற்றிப் பேசத் தான் என்று புரிந்துவிட்டது. நாங்கள் பெண்கள் ஐடியா போட்டது போலவே ஆண்களும் கூட்டு ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். முதலில் எல்லாரும் இராமேஸ்வரம் செல்வதாகத் தான் நினைத்தோம். ஆனால் குடும்பத்தில் ஒருவர் சென்றால் போதுமானது என்பதனால் ஒரு வழியாக ஒரு மனதாக நானும், சீதாராமனும் மட்டும் கங்கை நீருடன் பஸ்ஸில் இராமேஸ்வரம் சென்று வரலாம் என்று இருக்கிறோம். அதற்கு அடுத்த நாள் விடியற்காலை 3 மணிக்கே எழுந்து குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும்.   எல்லாரும் சென்று வந்தால் அலைச்சல் அதிகமாகிவிடும். டயர்ட் ஆகிவிடும் அதனால் தான் இந்த ஏற்பாடு என்று கூறி ஒரு வழியாக மன்னியை கன்வின்ஸ் செய்தார் அண்ணா. மன்னியை கன்வின்ஸ் செய்யுமுன்பே இரண்டு பேருக்கு மட்டும் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தாகி விட்டது என்பது உங்களுக்கும் எனக்கும் இடையில் மட்டும் இருக்கட்டும். 
நாங்கள் ஒன்று நினைக்க, ஆண்கள் ஒன்று நினைக்க, டிரைவர் கண்ணில் படாமல் தப்பித்துவிட, தெய்வம் ஒன்றை நினைத்து அதையே நடத்திக் கொண்டார். வேறென்ன சொல்ல?

மீண்டும் இராமேஸ்வரம்:

இராமேஸ்ரத்திலிருந்து வேணி மாதவராய் உருவகம் செய்து பூஜித்த மணலை எடுத்துக் கொண்டு போய் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் 'ஓம் நமசிவாயா' என்று சொல்லி கரைத்தாகி விட்ட்து, திரிவேணி சங்கமத்தில் கங்கையிலிருந்து கேனில்  எடுத்து வந்த கங்கை நீரை இராமேஸ்வரம் எடுத்துச் செல்ல வேண்டும்.   

4.6.2024 காலை 3 மணிக்கே அனந்த அண்ணாவும் சீதாராமனும் மகாதானபுரத்திலிருந்து கிளம்பினார்கள்.  இராமேஸ்வரத்தில் எங்களுக்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்து வைத்த ஸ்ரீராம் வாத்தியார் அவர்களை கோவிலில் சந்தித்தார். 



நாங்கள் கொண்டு சென்ற கங்கை நீரை வாத்தியார் ஸ்ரீராம் அவர்களின் உதவியுடன் இராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யக் கொடுத்து வேண்டிக் கொண்டு அம்பாள் பர்வதவர்த்தினித் தாயாரையும் ஜோதிர் லிங்கத்தையும் தரிசித்து வணங்கிவிட்டு வாத்தியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள் அகத்தில் லஞ்ச் சாப்பிட்ட பின் பஸ்ஸில் இரவு மகாதானபுரம் வந்து சேர்ந்தார்கள்.

இப்படியாக இராமேஸ்வரத்தில் ஆரம்பித்த எங்களது காசி யாத்திரை தங்கு தடையின்றி, மன நிறைவுடன் இராமநாதருக்கு அபிஷேகம் செய்து நிறைவடைந்தது. 

குலதெய்வம் கோவில்:

எங்கள் குலதெய்வம் மலயாமருங்க அய்யனார் மற்றும் தாயார் மங்களாம்பிகா. இந்தக் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 

5.6.2024 விடியற்காலை 4 மணிக்கு மாகாதானபுரத்திலிருந்து வேன் வைத்துக்கொண்டு அனந்தன் அண்ணா, கிரிஜா மன்னி, நான், என் கணவர் ஜெயராமன், சீதாராமன், கௌரி, ரகு, சாரதா எல்லாருமாக எங்கள் குல தெயவ வழிபாட்டிற்குப் புறப்பட்டோம்.  எங்களது பெரியப்பா மகன் ராமமூர்த்தியும் அவர் மனைவி ஈஸ்வரி மன்னியும் திருச்சியில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். பெரியப்பாவின் பெரிய மகனும் எங்கள் குடும்பத்தில் பெரியவருமான இராதாகிருஷ்ணன் அண்ணாவும் கல்யாணி மன்னியும் நேரே கோவிலுக்கு வந்துவிட்டார்கள். அங்கு நாங்கள் மாவிளக்கு போட்டு புஜை செய்தோம். என் மாமியாரின் வருஷாப்தீகத்தை குடும்பமாகச் சேர்ந்து செய்து விட்டு, காசி யாத்திரை முடித்த பின் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வ வழிபாட்டையும் குடும்பத்துடன் முடித்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.  


நாங்கள் பூஜை முடித்து அங்கு சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு 3 மணி போல் கிளம்பி ராமு அண்ணா தம்பதியை திருச்சியில் இறக்கிவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம். எங்கள் குலதெய்வ வழிபாடு பற்றி அடுத்த பகுதியில் விரிவாக எழுத உள்ளேன்.  காத்திருக்கவும்.

அமாவாசை:

6.6.2024 அன்று அமாவாசை.  சகோதரர்கள் நால்வரும் சுந்தர் மாமாவுடன் கருப்பத்தூர் சென்று அங்கு காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டு வந்தனர்.  வந்ததும் அகத்திலேயே அண்ணாவின் சமையல். எங்கள் மாமியாரிடம் நான் எப்போழுதும் வியந்து கேட்பது எப்படி மகன்களுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய  பழக்கினீர்கள் என்பது தான். எல்லாருமே எல்லாம் செய்வார்கள்.  அண்ணாவின் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரொம்பப் பிரசித்தம். அவர் அதை செய்திருந்தார். நாங்கள் அன்று வாஷிங் மெஷினில் தோய்க்க வேண்டிய துணிகளைப் போட்டு உலர்த்தினோம். அமாவாசை அன்று கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தோம் நாங்கள். 

சாயங்காலம் நானும் தம்பி ரகுவும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் சமாராதனையில் கலந்து கொள்ள ஊரிலுள்ள எல்லாரையும் அழைப்பதற்காகச் சென்றோம். லேசாக தூறிக் கொண்டிருந்தது. குடையுடன் சென்று எல்லாரையும் அழைத்துவிட்டு வர இரவு 8.30 மணி ஆகிவிட்டது.

கங்கா சமாராதனை:

7.6.2024 அன்று எங்களது இல்லத்தில் கங்கா சமாராதனை செய்தோம். காலை குளித்து மடிசாரு கட்டிக் கொண்டு, ஸ்வாமிக்கு பூ வைத்து கோலம் போட்டு பூஜை அறையை ரெடி செய்தோம். காசியிலிருந்து கொண்டு வந்திருந்த கங்கைச் சொம்புகள், காசிக் கயிறு இவற்றை பூஜையில் வைத்தோம்.  


ரேவதி அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். என் பெற்றோர் உட்பட ஊரில் அழைத்தவர்கள் எல்லாரும் கலந்து கொள்ள  கங்கா பூஜை தோடங்கியது. சுந்தர் மாமா பூஜை செய்து வைத்தார்.



எப்பொழுதும் சுறுசுறுப்பாக ஓடி சமையல் வேலைகள் எல்லாவற்றையும் செய்யும் எங்கள் நாத்தனார்களுக்கு ரெஸ்ட் கொடுக்கும் விதமாக சமையலுக்கு ஆள் போட்டு விட்டதால், ரிலாக்ஸாக பூஜையில் கலந்துகொண்டு அமர்ந்திருந்த எங்கள் சியாமளா மற்றும் விஜயா அக்கா மற்றும் ரேவதி அக்காவை என் ஃபோனில் 'க்ளிக்'கினேன் நான்.

எங்களது இன்னொரு அக்காவான ஜானகி அக்கா சமாராதனைக்கு வர முடியவில்லை,  பூஜை முடிந்ததும் சியாமளா அக்காவும் ரேவதி அக்காவும் ஆரத்தி எடுத்தனர்.

பூக்களால் நிரம்பி பூஜை அறையே மணத்தது. கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பெரியோர்களின் ஆசியும் கடவுளின் அனுகிரஹமும் பரிபூரணமாகக் கிடைத்த திருப்தி மனதில் நிறைந்தது. 


வடை, பாயசத்துடன் சமாராதனை சமையல்.  ஊரார் எல்லாருக்கும் பரிமாறி வெற்றிலை பாக்குடன் காசிக் கயிரும் கொடுத்தோம். மூன்று வார லீவில் ஊருக்கு வந்து எல்லாரும் குடும்பமாய் மாமியாருக்கு திதி முடித்து,  காசி யாத்திரை முடித்து சமாராதனையையும் நிறைவாகச் செய்தோம். 


குடும்பத்துடன் ஒற்றுமையாகச் செய்யும் எந்த ஒரு செயலும் குடும்ப க்ஷேமத்திற்கும் மன நிம்மதிக்கும் வழி வகுக்கும்.

சமாராதனைக்கு ஆன செலவு:

சமாராதனைக்கு ஆன  செலவு:             10000.00
(சாப்பாடு,  தட்சணை எல்லாம் சேர்த்து)

குடும்பத்துடன் காசி யாத்திரைக்கு ஆன  செலவுகள்:

வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள்

Rs.

1

இராமேஸ்வரத்தில் ஆன மொத்த செலவு

60600.00

2

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆன மொத்த செலவு  

  53780.00

3

காசியில் ஆன மொத்த செலவு

291200.00

4

 கயாவில் ஆன மொத்த செலவு

16420.00

5

 காசியில் தம்பதி பூஜைக்கான மொத்த செலவு

10435.00

6

சமாராதனை மொத்த செலவு

10000.00

 

குடும்பத்துடன் காசி யாத்திரைபயணத்தில் 10 பேராகச் சென்றதில் ஆன மொத்த செலவு

4,42,435.00



இத்துடன் குடும்பத்துடன் காசி யாத்திரை தொடர் நிறைவு பெற்றது. ஆறு பாகங்களைக் கொண்ட இந்தத் தொடரில் எங்கள் குடும்ப வழக்கப்படி நாங்கள் செய்த ஸ்ரார்த்தம், பித்ரு காரியங்கள், அதற்கான செலவுகள் எல்லாவற்றையும் பகிர முயன்றுள்ளேன்.     இந்தப் பயணத்தொடர் நிறைவு பெற்றாலும் எங்களது பயணங்களும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் என்றென்றும் தொடரும். உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் கமெண்டில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி நவிலல்:

முதல் நன்றி எங்கள் முன்னோர்களுக்கு.

நினைத்துப் பார்க்க முடியாத இந்த சூறாவளி சுற்றுப் பயணத்திற்கு வித்திட்ட அனந்தன் அண்ணா, கிரிஜா மன்னிக்கு எங்கள் நன்றிகள்.

வேலையிலிருப்பவர்களுக்கு சரியான சமயத்தில் விடுமுறை கிடைத்ததற்கும் எங்கள் நன்றிகள். சீதாராமனும் ரகுவும் வெளிநாட்டில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும்  ப்ரொஃபஸர் ஜெயராமன் மற்றும் ஆசிரியை சாரதா தன் பிஸி வேலையிலும் கடமையிலும் இத்தனை நாட்கள் எங்களுடன்  வந்து எங்களுக்குப் பக்கபலமாக இருந்ததற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

எங்களுடன் வர சம்மதித்து எங்களுக்கு வழி காட்டி சிரத்தையாக எல்லாவற்றையும் செய்து முடிக்க உறுதுணையாக இருந்த எங்கள் குடும்ப உறுப்பினரும் எங்கள் சாஸ்திரிகளுமான சுந்தர் மாமாவுக்கும் விஜயா அக்காவுக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

மூன்று வாரங்கள் எங்களை அனுப்பிக் கொடுத்து சமாளித்த எங்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு எங்களது அன்பான நன்றிகள்.

எங்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் (9 கஜ புடவைகள்) கொடுத்து எங்களுக்கு பக்க பலமாக இருந்த சியாமளா அக்கா மற்றும் இராதகிருஷ்ணன் அத்திம்பேருக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

ஃபோட்டோ க்ரெடிட்ஸ் முதலில் முக்கியமாக கௌரிக்கு. அடுத்து என் கணவர் ஜெயராமன் மற்றும் தம்பி ரகுவுக்கு. இறுதியானாலும் மறக்காமல் மாதங்கியான எனக்கும் க்ரெடிட்ஸ் உண்டு.

பணப் பொறுப்பை தனியாகக் கையாண்டு சிறப்பாக நிறைவேற்றிய ரகுவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

எந்த வித தடங்கலும் இல்லாமல் இந்த யாத்திரை நிறைவேற அனுக்கிரஹம் புரிந்த கடவுளுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

மொத்தத்தில் அற்புதமான பயணத்திற்கு வித்திட்ட உறவுகளுக்கும் முன்னோர்களுக்கும் ஆண்டவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
  

குடும்பத்துடன் காசி யாத்திரை தொடர் முற்றும்


பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.    https://mathangiyinmanam.blogspot.com/2024/06/1_36.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 -  வாரணாசி என்னும் காசி: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 - காசியில் தம்பதி பூஜை: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

Thursday, July 25, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 - காசியில் தம்பதி பூஜை:

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 -  காசியில் தம்பதி பூஜை:

கயா ஸ்ரார்த்தத்தை சிரத்தையாக  முடித்துவிட்டு கயாவிலிருந்து காசிக்கு 2.6.24 அன்று காலை 3 மணிக்கு  வநது சேர்ந்ததைப் பற்றி   'குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா'வில் பார்த்தோம்.

2.6.24 ஆம் ஆண்டு காலை நாங்கள் எழுந்திருக்க  மணி ஏழு ஆகிவிட்டது.  எழுந்ததுமே கங்கையில் குளிக்கப் போகலாம் என்று முடிவு செய்து எல்லாரும் சிவாலா காட் சென்றோம். எல்லா பித்ரு காரியங்களும் சிறப்பாக முடித்துவிட்டதால் மிகவும் நிதானமாக கங்கையில் குளிக்க முடிந்தது.  நீர்  தூய்மையாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் கங்கையல்லவா? புண்ணிய நதியில் குடும்பத்துடன் நீராடியது மனதிற்கு இதமாக இருந்தது,



குளித்து சந்தியா வந்தனம் செய்ததும் ரூமுக்குப் போய் உடை மாற்றி 9 கஜம் கட்டிக் கொண்டு ஈர உடைகளை உலர்த்தி விட்டு எல்லாரும் 10.30 மணிக்கு தம்பதி சமேதராக கேதார் வாத்தியாரின் மகன் கௌஷிக் அகத்திற்குச் சென்றோம். 

தம்பதி பூஜை:

கௌஷிக் அவர்கள் தம்பதி பூஜை செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். தம்பதிகளுக்கு புடவை, வேஷ்டி,  மெட்டி, திருமாங்கல்யம் போன்றவற்றிர்க்கு நாங்கள் பணமாகக் கொடுத்துவிட்டோம். 


சுந்தர் மாமாவும் விஜயா அக்காவும் கேதார் வாத்தியாருக்கும் அவரது மனைவிக்கும் தம்பதியாக பூஜை செய்ய,  சகோதரர்கள் நால்வரும் இன்னொரு ஜோடிக்கு தம்பதி சமேதராக பூஜை செய்து மரியாதை செய்தோம்.





தம்பதிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, பூ கொடுத்து புஜை செய்து நமல்கரித்தோம். அவர்கள் அக்ஷதை தூவி ஆசிர்வதிக்க தம்பதி பூஜை இனிதே நடந்து முடிந்தது.  10.30 மணிக்கெல்லாம் தம்பதி பூஜை முடிந்துவிட்டது. 

பூஜை முடிந்து நாங்கள் கேதார் வாத்தியாருக்கும் கௌஷிக் வாத்தியாருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, சுந்தர் மாமாவும் கேதார் வாத்தியாரும் சேர்ந்து வேத மந்திரங்கள் சொல்ல கேட்கவே இனிமையாக இருந்தது. எல்லாரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.


எங்களது குடும்பத்துடன் காசி யாத்திரைப் பயணம் தம்பதி பூஜையுடன் சிறப்பாக இனிதே நடந்தேறியது.   மணி 12.30 ஆகி இருந்தது. 1.30 மணிக்கு சாப்பிடலாம் என்று கூறி இருந்தார்கள்.  

எங்களில் பலருக்கு சிம்பிளாக ஒரு உப்புமா சாப்பிட்டால் போதும் என்று ஆகிவிட்டது. எனவே நான், சாரதா, கௌரி மூவரும் கௌஷிக் அவர்கள் அகத்தில் அவர்களது அனுமதியுடன் கோதுமை ரவை உப்புமா செய்வது என்று முடிவு செய்தோம். மற்றவர்கள் ரூமிற்கு சென்று விட்டார்கள். சாராதா அவர்களுடன் சென்று  என் கணவர் வாங்கிக் கொடுத்த கோதுமை ரவை, தக்காளி, பச்சை மிளகாய்,  கேரட், குடைமிளகாய் எல்லாவற்றையும்  கொண்டு வர அவர்களுடன் சென்றாள். அதுவரை நானும் கௌரியும் கேதார் வாத்தியாரின் பேத்தி சிவபிரியாவுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.



சாரதா வந்ததும் நான் உப்புமா செய்யப் போக கௌரியும் சாரதாவும் தயிர் சாதம் மற்றும் சில காய்கறிகளை பேக் செய்யச் சென்றார்கள்.  கேதார் அகத்திலிருந்த சமையல் வேலை செய்பவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். தேவையான பாத்திரம் கரண்டி எண்ணெய் எல்லாம் எடுத்துக் கொடுத்தோடு பேக் செய்யத் தேவையான தூக்கு இலை எல்லாம் கொடுத்தது சௌகர்யமாக இருந்தது. முக்கால் கிலோ உப்புமா செய்தேன். அதை கிளரவும் அவர் உதவியாக இருந்தார். 

பாவம் அவர் எங்கள் எல்லாருக்கும் சாம்பார், ரசம், உருளைக் கிழங்கு கறி எல்லா காயும் போட்டு கூட்டு எல்லாம் செய்திருந்தார்.  எனவே நான் சாரதா, கௌரி அவர் சமைத்த சமையலை சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுக்கு உப்புமா தயிர் சாதம் எடுத்துச் செல்வதாக முடிவு செய்தோம். 


நாங்கள் அவர் சமைத்ததை சாப்பிட்டோம்.  அதிர்ஷ்டவசமாக எங்கள் மூவருக்கும் அந்த சமையலால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு நாள் கயாவில் மட்டும் கௌரிக்கு கொஞ்சம் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. மற்றபடி நாங்கள் ஓகே தான். எனவே நாங்கள் ஜாலியாக பேசிய படி சாப்பிட்டோம். கௌரி பேப்பட் பேளேட், தயிர் சாதம் எடுத்துக் கொண்டு முன்னால் சென்றுவிட்டாள்.  நானும்  சாரதாவும் உப்புமா  கூட்டு ஊறுகாயுடன் கேதார் அகத்தில் எல்லாருக்கும்  'பை' சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். 

வரும் வழியில் நானும்  சாரதாவும் பால் மற்றும் தயிர் வாங்க ஒரு கடையில்  நுழைந்தோம். அங்கு லஸ்ஸி, பால், தயிர் இருந்தது. நாங்கள் உப்பு, சர்க்கரை, தயிர் மற்றும் பால் வாங்கிக் கொண்டோம். தயிர் மிகவும் கட்டியாக இருந்ததால் அந்தப் பாத்திரத்திலேயே நீர் ஊற்றி, உப்பு, ஐஸ் போட்டு நீர் மோராகக் கொடுக்கச் சொல்லிக் கேட்டோம். கொஞ்சமாக நீர் ஊற்றினார் கடைக்காரர். நாங்கள் இன்னும் ஊற்றச் சொல்ல, இதில் இன்னும் நீர் ஊற்றுவதா? அந்தக் கடைக்காரரால் அதை ஜீரணிக்கவே  முடியவில்லை.  கெட்டித் தயிர் எங்களுக்கு ஜீரணமாகவில்லை என்ன செய்வது? ஒரு வழியாய் அவர் மனமின்றி நீர் ஊற்றி ஜிலு ஜிலு என்று நீர் மோர் கொடுக்க  மனம் குளிரப் பருகி விட்டு மனதார அவரை வாழ்த்திவிட்டு வந்தோம். 

வாளி நிறைய சுடச் சுட மணக்க, மணக்க வெஜிடபிள் உப்புமா. எல்லாருக்கும் 'பேப்பர் ப்ளேட்' டில் போட்டுக் கொடுத்தோம். தொட்டுக் கொள்ள சர்க்கரை, கூட்டு பரிமாற எல்லாரும் ரசித்துச் சாப்பிட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் தயிர் சாதம் ஊறுகாய் சாப்பிட்டதும் மீதமிருந்த உப்புமா தயிர் சாதத்தை இரவு உணவிற்காக டப்பாவில் பேக் செய்து கொண்டோம். 

பின் சாரதாவும் நானும் குழந்தைகளுக்குப் பொருட்கள் வாங்கப் புறப்பட்டோம்.  ஆண் குழந்தைகளுக்கு குர்தாவும், பெண் குழந்தைகளுக்கு அழகான கைப்பையும் வாங்கினோம்.  எங்களுக்கும் கௌரிக்கும் ஒரே மாதிரி உடை வாங்க முயற்சி செய்தோம்.  சரியாக அமையவில்லை. கடையிலிருந்து திரும்பியதும், பெட்டிபளைப்  பேக் செய்ய ஆரம்பித்தோம். 

மாடியிலிருந்து உடைகளை எடுத்து  மடித்து வைத்து, ரூமிலிர்ந்த எல்லா சாமான்களையும் பேக் செய்யத் தொடங்கினோம்.

இண்டக்ஷனை பெட்டிக்குள் வைக்குமுன் வாங்கி வந்த பாலில் டீ, காஃபி,  போட ஆரம்பித்தோம். நான் காஃபி, டீ, ப்ளாக் டீ, சர்க்கரை சேர்த்து, சேர்க்காமல் என்று அவரவர்கள் கேட்டதைக்   கலந்து கொடுத்தேன், ஒவ்வொரு முறை காஃபி கொடுக்கும் போதும்  சூடு இல்லை. பில்டர் காஃபியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், சர்க்கரையை குறைத்திருக்கலாம் என்று  ரகுவுக்கு எப்பொழுதும் ஒரு சிறிய அதிருப்தி இருந்து கொண்டே இருந்தது.  அதை நிவர்த்தி செய்யாமல் காசியை விட்டு வருவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன் நான், எனவே இந்த முறை ஃபில்டரில் சுடச் சுட டிகாக்ஷன் இறக்கி, பால் காய்ச்சி ஃபில்டர் காஃபி போட்டு மிகச் சரியாக சர்க்கரை சேர்த்து ரகு எங்கும் நகரும் முன் கையில் கொடுத்து குடித்து விட்டு .'திருப்தி, திருப்தி, பரம திருப்தி' என்று  சொல்லும் வரை நாங்கள் விடவில்லை. எல்லாம் மனதிற்கு நிறைவாகச் செய்த பின் திருப்தியை மனதாரச் சொல்ல வேண்டாமா? ரகுவும் சம்த்தாகக் குடித்து விட்டு ரொம்பத் திருப்தி என்று  சொல்ல காசி பயணம் திருப்தியாக முடிந்துவிட்டது. 

கொண்டு சென்ற இண்டக்ஷன், ஃபில்டர், சர்க்கரை டப்பா ஊறுகாய் டப்பா, பாத்திரங்கள், டம்ப்ளர், டபரா, ஸ்பூன் இப்படி எல்லாவற்றையும் பெட்டியில் வைத்து பேக் செய்தோம். 

அனந்தன் அண்ணாவும் ரகுவும் சென்று கங்கை நீரை சொம்பில் அடைத்துக் கொண்டு காசிக் கயிறும் வாங்கி வந்தார்கள். அதனுடன் இராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டிய நீரையும் பத்திரமாக பேக் செய்து பெட்டியில் வைத்தோம். ஹோட்டலுக்கு பணம் செட்டில் செய்தோம்.

ரூமை விட்டுக் கிளம்புமுன் எல்லா பெண்களும் கூலாக கூலிங்க் க்ளாஸ் போட்டுக் கொண்டு கலக்கலாக போடடோ எடுத்துக் கொள்ள முடிவு செய்தோம். சுந்தர் மாமா, "விஜயா நன்னா தானே இருந்தா? இப்ப என்னாச்சு? கறுப்புக் கண்ணாடி போட்டுனுட்டாளே' ன்னு எல்லாரும் பரிதாபப் படப் போறா என்று கிண்டல் செய்ய 'அந்த பிராமணன் சொல்றத விடு என்ன ஃபோட்டோ எடு என்று அம்சமாகப் போஸ் கொடுக்க அதை கௌரி அழகாக படம் பிடிக்க குதூகலமாய் இருந்தது. நாங்கள் ஐவரும் மாற்றி மாற்றி கூலர்ஸ் அணிந்து கொள்ள ரகு பொறுமையாய் படம் பிடிக்க மிக மிக ஜாலியாக எஞ்சாய் செய்தோம் நாங்கள்.

இரவு 9.20 க்கு  வாரணாசியிலிருந்து சென்னை திரும்புவதற்கு இண்டிகோ விமானத்தில் எங்களுக்கு புக் செய்திருந்தோம். ஆறு நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணமாக காசி யாத்திரையை கிரமமாக முடித்துக் கொண்டு நாங்கள் புக் செய்திருந்த அர்பேனியா வேனில் வாரணாசி ஏர்ப்போர்ட் நோக்கி எங்கள் பயணம். 

ஏர்ப்போர்ட்டில் பெட்டிகளை செக்கிங் செய்து விட்டு உள்ளே சென்றதும்  கொண்டு சென்றிருந்த உணவை எல்லாருக்கும் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிட்டோம். 

போர்டிங்க் ஆரம்பித்துவிட்டது.   விமானத்தில் என் கணவர் கம்ப்யூட்டரில் வேலை செய்தபடி வர நான் இந்த ப்ளாக் எழுத சில குறிப்புகளை மொபைலில் நோட்ஸ் எடுத்தபடி வந்தேன்.  11.30 க்கு  சரியாக சென்னைக்கு வந்தது விமானம்.  வானம் நீர்த்தூவி எங்களை வரவேற்கத் தொடங்கியது. 

பின் இடியுடன் கூடிய பெருமழை கொட்டத் துவங்க,  வானம் பொத்துக்கிகொண்டு ஊற்ற தரை இறங்க சிரமப் பட்ட எங்கள் விமானத்தை இன்டர் நேஷனல் டெர்மினல் அருகில் பாதுகாப்பாய் தரை இறக்க வேண்டியதாகிவிட்டது.  கன மழை பெய்ததால் விமானக் கதவுகளைத் திறக்கவில்லை.  யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. சிலர் பொறுமை இழந்து  காணப்பட மழையினால் தரை இறங்க முடியாத இன்னொரு விமானம் பெங்களூரில் தரை இறங்கத் திரும்பியதாகத் தெரிவித்தார்கள். மழையின் வேகம் குறையும் வரை பொறுமையுடன் பொறுத்திருக்கும்படி பைலட் அறிவித்தார். அரை மணி நேரங்களுக்கு மேல் விமானத்தினுள்ளேயே உட்கார்ந்திருந்தோம்.  ஆசை தீர மேகம் கொட்டித் தீர்த்தது ஓய்ந்ததும் ஒவ்வொருவாய் வேளியில் வந்து ஏர்போர்ட் பஸ்ஸில்  ஏர்போர்ட் வந்து வெளியில் வந்தோம்.

லேசாகத் தூற ஆரம்பித்தது. சென்னையிலிருந்து மகாதானபுரம் செல்ல இரண்டு வேன்கள் புக் செய்திருந்தோம்.  சென்னையிலிருந்து எங்களுடன் சுந்தர் மாமா, விஜயா அக்காவின் பேத்தியும் சில லக்கேஜ்களுடன் மகாதானபுரம் வருவதாக ஏற்பாடு. மழையினால் அவர்கள் வந்து நாங்கள் அவர்களை சந்திக்க மணி 12.15 ஆகிவிட்டது. எல்லா லக்கேஜ்களையும் வண்டியில் ஏற்றி ஒரு வழியாக எங்கள் பயணம் தொடங்கியது. வந்த இரண்டு வேன்களில் ஒரு டிரைவர் லக்கேஜ் ஏற்றுவதிலிருந்தே ரொம்பவும் படுத்தி விட்டார். அவர் வழியிலும் மரியாதை குறைவாகப் பேசியதும் பொறுத்துக் கொள்ளும்படி இல்லை.  நாங்கள் சொன்ன வழியில் செல்லவும் இல்லை. சுற்றிக் கொண்டு தான் செல்வேன் என்று  எடுத்தெறிந்து  பேசியதும் சரியில்லை. வேனுக்கு பணம் செட்டில் பண்ணும் போது அந்த வேன் டிரைவர் மீது புகார் சொல்லி விட்டுத் தான் பணம் செட்டில் பண்ணினோம். மற்றொரு டிரைவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. 

இரவு முழுவதும் பயணம் செய்து நாங்கள் மகாதானபுரம் வந்து சேரும் போது மணி 6.30 ஆகி விட்டது. எங்களது வெற்றிகரமான காசி யாத்திரை 28 ஆம் தேதி மகாதானபுரத்தில் ஆரம்பித்து 3 ஆம் தேதி மகாதானபுரத்தில் அற்புதமாக முடிவடைந்தது. கொண்டு வந்திருக்கும்  கங்கா ஜலத்தை இராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்த பின் தான் காசி யாத்திரை முடிவு பெறும்.  இராமேஸ்வரத்தில் அபிஷேகம் மற்றும்  வேண்டுதல் நிறைவேற்றச் சென்ற கோவில்கள், குலதெய்வம் கோவில் மற்றும் சமாராதனை பற்றி அடுத்த பகுதியான 'குடும்பத்துடன் காசி யாத்திரை நிறைவுப் பகுதி 6 -  சமாராதனை' பகுதியில் காணலாம். 

காசி தம்பதி பூஜைக்கான செலவு:


வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள்

1

காசி தம்பதி பூஜை சாமான்

680.00

2

காசிக் கயிறு 

  75.00

3

தட்சணை

2500.00

4

 காசி சொம்பு

1800.00

5

 ஷ்யாம் கைட்

1500.00

6

காசி சாப்பாடு

3880.00

 

மொத்த செலவு

10435.00


எங்களது காசி யாத்திரை ஒரு அலசல்:

ஓர் குடும்பத்திலிருந்து 45 வயதிலிருந்து 75 வயது வரை உள்ள 10 பேர்  ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாய் சென்று வந்த  வெற்றிகரமான பயணம் எங்களது காசி யாத்திரை. 

நாங்கள் சென்றது மே மாதக் கடைசியில் உக்கிரமான கோடைக்காலத்தில் அதுவும் 6 நாட்களுக்கு மட்டுமே.  போன பகுதியில் கூறியது போல் காசிக்குச் செல்வதானால் நவம்பரிலிருந்து ஃபிப்ரவரி வரை உள்ள மாதங்களில் செல்வது நல்லது. அதுவும் குறைந்தது 10 நாட்கள் செல்வது உசிதம். 


இண்டக்ஷன் ஸ்டௌ, பாத்திரங்கள் 3, ஸ்பூன், டம்ப்ளர், டபரா, கெட்டில், டீ பேக்கெட்ஸ், பால் பௌடர், ஃபில்டர், காஃபி பொடி, கஞ்சி மாவு, சகிதம் சென்றது உபயோகமாக இருந்தது.

கூடவே ORS,  க்ளுகோஸ் பாக்கெட்டுகள்,  எலெக்ட்ரால் போன்றவையும் எடுத்துச் செல்வது பயன் தரும்.

மெடிகல் கிட்டில் வலி நிவாரணிகள், ஜெலூசில், பேராசிட்டமால், வாந்தி வராமலிருக்க மருந்துகள் என்று தேவையான மருந்துகளை எடுத்துச் செல்வது அவசியம்.

நாங்கள் 5 பெண்களுக்கும் தினமும் மடிசாரு என்பதனால் ஒருவருக்கு 3 வீதம் 15 புடவைகளை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டோம். (எங்கள் பெரிய நாத்தனார் உபயம். அவர் தினமும் மடிசாரு கட்டுபவர் என்பதால் எங்கள் எல்லாருக்கும் 9 கஜப்புடவை சப்ளை இவர் தான் என்பது எங்கள் எல்லாருக்கும் ஒரு வரம்).

நேரமும் இடமும் கிடைக்கும் போதெல்லாம் துணி அலசி, காய வைத்து மடித்து வைத்துக் கொண்டோம்.  எந்த சிக்கலும் இல்லாமல் மிக நேர்த்தியாக சமாளிக்க முடிந்தது.

ஒரு ரூமில் 5 பேர் இருந்தாலும் 3 பேர் இருந்தாலும் நேரத்திற்கு குளித்து மடியாகக் கிளம்ப முடிந்தது எங்களால் என்பது எங்களது ஒற்றுமைக்குச் சான்று.

எங்களில் சிலருக்கு வாந்தி, உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் மிக அழகாகச் சமாளித்து எல்லா பித்ரு காரியங்களையும் சிரத்தையாகச் செய்ய முடிந்தது கடவுளின் அனுக்க்ரஹம் தான் என்பதில் துளியும் ஐயமில்லை.

மொத்தத்தில் இது ஒரு வெற்றிப் பயணம். 


ப்ளூபர்ஸ்:

இந்த பயணத்தில் நாங்கள் தொலைந்தவர்களைத் தேடிக் கண்டு பிடித்தது, தூங்கியபடி வண்டி ஓட்டிய ட்ரைவரையும், மரியாதை குறைவாகப் பேசிய ட்ரைவரையும்  எப்படியோ சமாளித்து ஊர் வந்து சேர்ந்தது, பையை வைத்துவிட்டு வந்ததனால் புத்த கயா பார்க்க முடிந்தது என்று பல ப்ளுப்பர்ஸ் பற்றி மேற் சொன்ன பகுதிகளில் பார்த்தோம். அதில் விட்டுப்போனது இதோ இங்கே:

காசியில் வந்து இறங்கிய முதல் நாள் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா ஹோட்டலில் 2 ரூம்கள் எடுத்துக் கொண்டதைப் பற்றி முன்பே பார்த்தோம். அதிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூம் நன்றாக இல்லை என்றும் கிரிஜா மன்னி சரியாகத் தூங்கவில்லை என்றும்  சொன்னேன். விடியற்காலை 3 மணிக்கு மன்னி உட்கார்ந்திருந்ததைப் பார்த்த நான் எழுந்து சென்று மன்னியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கௌரியும் எழுந்து வந்தாள். 

இருட்டில் மற்றவர்களை எழுப்பாமல்  தட்டுத் தடுமாறி, மன்னிக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கலாம் என்று  கெட்டிலை எடுத்தோம்.  கெட்டிலை வந்த உடன் உபயோகித்திருந்ததால் மேஜை மேலேயே இருந்தது. அதனை ஆட்டிப் பார்த்த கௌரி தண்ணீர் இருக்கிறது என்று கூறி ஆன் செய்தாள். 

சிறுது நேரத்தில் ரூம் முழுக்க புகை கிளம்ப அவசர அவசரமாய் கெட்டிலை ஆஃப் செய்துவிட்டு மொபைல் வெளிச்சத்தில் பார்த்தால் கெட்டில் உள்ளே யாரோ சர்க்கரை டப்பாவை வைத்திருக்கிறார்கள். ஆட்டிப் பார்த்ததில் அதை தண்ணீர் என்று நினைத்து ஆன் செய்து விட்டோம். நல்ல வேளை ஃபயர் அலார்ம் இருந்திருந்தால் ஹோட்டலே அதிர்ந்திருக்கும். சமயத்தில் நிலமையை சமாளித்தாலும் அந்தக் கெட்டிலை க்ளீன் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.        https://mathangiyinmanam.blogspot.com/2024/06/1_36.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 –  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 -  வாரணாசி என்னும் காசி: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா: 
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 6 -  சமாராதனை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.


எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...