Sunday, June 23, 2024

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2 - பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்


குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 2:
பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத் :

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 ல் இராமேஸ்வரம் பயணம் பற்றி எழுதியுள்ளேன். அதன் இரண்டாவது பாகம்  இந்தப் பகுதி. இதில் நாங்கள் எங்களது ஊரான மகாதானபுரத்திலிருந்து கிளம்பி வாரணாசி என்னும் காசிக்கு சென்று அங்கிருந்து  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத் சென்றதையும்   அங்கு செய்த பிராயசித்த பூஜை மற்றும் பித்ரு காரியங்கள்  பற்றியும் எங்களது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளேன்.  



 மகாதானபுரத்திலிருந்து:

28.5.2024 ஆம் தேதி காலை மகாதானபுரத்தில் எங்களது கிரஹத்தில் சுந்தர் மாமா யாத்ரா தான பூஜை செய்துவித்தார். இராமேஸ்வரத்திலிருந்து வந்த பின் காசி யாத்திரை தொடங்கு முன்,  யாத்திரை தடங்கலின்றி நடக்கவும், பித்ரு காரியங்கள் விக்னமின்றி சிறந்த முறையில் நிறைவேறவும்  கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டு, இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை பூஜை அறையில் வைத்து செய்யும் பூஜை இது.   




நன்கு பிரார்த்தனை செய்து கொண்ட பின் பூஜை செய்த இராமேஸ்வரம் மணலையும் கையில் எடுத்துக் கொண்டு எங்களது  காசி பயணம்  இனிதே தொடங்கியது. 

எங்கள் அனைவரின் அழைப்பின் பேரில் எங்களுடன் இராமேஸ்வரம் வந்து எங்கள் பயணத்தை சிறப்பித்துக் கொடுத்த ரேவதி அக்காவையும் ஈஸ்வரன் அத்திம்பேரையும் தவிர மற்ற எல்லோரும் வாரணாசிக்கு செல்ல 'இண்டிகோ' விமானத்தில் 'புக்' செய்திருந்தோம்.  

சுந்தர் மாமா, விஜயா அக்கா, அனந்தகிருஷ்ணன் அண்ணா, கிரிஜா மன்னிக்கு மதியம் 12.30 மணிக்கு திருச்சியிலிருந்து சென்னை வழியாக வாரணாசிக்கு செல்ல புக் செய்திருந்தார் என் மச்சினர் அனந்தகிருஷ்ணன் அண்ணா.  

'மாதங்கி' ஆகிய நான், என் கணவர் ஜெயராமன், அவரது தம்பி சீதாராமன், அவரது மனைவி கௌரி,  கடைசி தம்பி ரகுராமன், அவரது மனைவி சாரதா ஆகிய அறுவருக்கும் மாலை 3.30 மணிக்கு திருச்சியிலிருந்து பெங்களூரு வழியாக வாரணாசிக்கு செல்ல புக் .செய்திருந்தோம்.

எப்பொழுதும் போல் என் பெரிய நாத்தனார் ஆபத்பாந்தவன் போல் எங்களுக்கு பொங்கலும்  இட்லியும் செய்து கொடுக்க, கௌரி அவருக்கு உதவியாக இருந்தாள். ரகு பிசைந்து கொடுத்த சப்பாத்தி மாவில்  நானும் சாரதாவும் ரேவதி அக்காவும்   சப்பாத்தி  செய்தோம்.   பொங்கல் சாப்பிட்டுவிட்டு கையில் சப்பாத்தி மற்றும் இட்லி pack செய்து எடுத்துக் கொண்டோம். 

முதல் பேட்ச் (batch)  9.45 க்கு மகாதானபுரத்திலிருந்து காரில் புறப்பட்டார்கள். அந்த கார் திரும்பி வந்ததும் எங்கள் பேட்ச் 12.30 மணிக்கு இட்லியை பேக் செய்து எடுத்துக்கொண்டு  திருச்சி ஏர்போர்ட் நோக்கி புறப்பட்டது.  
                                                       

    
அவர்கள் பேட்ச் மதியம் 2.30 மணிக்கு சென்னை அடைந்ததும் கொண்டு சென்ற இட்லியை  சாப்பிட்டார்களாம்.  விஜயா அக்காவிற்கு இது முதல் விமானப் பயணம்.  நன்கு ரசித்ததாகவும், விமானம் நகராமல் ஓரிடத்திலேயே இருப்பது போன்று தோன்றியதாகவும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.  அவர்கள் அடுத்த விமானத்திற்கு  கூடுதல் நேரம் ஏர்போர்ட்டில் காத்திருக்க வேண்டி இருந்தது.


எங்கள் விமானம் 3.30 மணிக்கு புறப்பட்டது. சாராதாவுக்கும் ரகுவுக்கும் மட்டும் ஸ்நாக்ஸ் பை வழங்கப்பட்டது. . நாங்கள் V.I.P.  எங்களுக்கு மட்டும் தான் இந்த ராஜ மரியாதை என்று சாரதா பையுடன் போஸ் கொடுக்க அதனையும் 'க்ளிக்' செய்த படி வானில் பறந்தோம். (டிக்கெட் புக் செய்யும் போதே அதற்கும் பணம் கட்டி இருந்தால் மட்டுமே இந்த ராஜ மரியாதை கிடைக்கும் என்பது உங்களுக்கு மட்டும் நான் சொல்லும் சிதம்பர இரகசியம்)
 
எங்களது விமானம் 5 மணிக்கு பெங்களூரை அடைந்தது.  பேக் செய்திருந்த இட்லியையும் சாரதாவுக்கும் ரகுவுக்கு ராஜமரியாதையாகக் கிடைத்த ஸ்நாக்ஸையும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு 6.30 மணிக்குப் புறப்படும் வாரணாசி செல்லும் விமானத்திற்காக காத்திருந்தோம்.

விமான நிலையத்தில் ஒரு மாமா மாமி எங்களுக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தனர். அவர்களும் நம்மைப் போலவே காசிக்கு யாத்திரை செய்பவர்களாக இருக்கவேண்டும் என்று பேசிக் கொண்டோம். 

பெங்களூரிலிருந்து வாரணாசி செல்லும் விமானம் ஏறியதும் அந்த மாமா, மாமியும் எங்கள் சீட் அருகிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டோம். சாரதா அவரிடம் பேச்சுக் கொடுத்ததில்  காசியில் அவரது கிரஹத்தில் தான் நாங்கள்  பித்ரு காரியங்களை செய்யப் போகிறோம் என்பதும் அதனை செய்து வைக்கப் போகும் 'கேதார்' வாத்தியார்   இவர் தான் என்பதும் அவரது மகன் கௌஷிக்  தான் எங்களுக்கு தங்க மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திருப்பவர் என்பதும் தெரிய வர அதிசயித்துப் போனோம். அவருக்கு மதுரையில் ஒரு விருது வழங்கப்பட்டதாகவும் அந்த விழா முடிந்து மனைவியுடன் காசிக்குத் திரும்புவதாகவும் கூறினார்.  





இரவு 8 மணிக்கு கொண்டு வந்திருந்த சப்பாத்தியை விமானத்திலேயே சாப்பிட்டோம்.  சென்னையிலிருந்து வாரணாசி வரும் முதல் 'பேட்ச்'    இரவு 8.30 மணிக்கு  வாரணாசியை அடைந்து அவர்கள் லக்கேஜ் கலெக்ட் பண்ணி காத்திருக்க 9 மணிக்கு எங்கள் விமானம் தரை இறங்கியது.  

வாரணாசி என்னும் காசி:

தரை இறங்கிய அந்த இரவு வேளையிலும் கூட மேலே பட்ட காற்று சுடச் சுட இருந்தது வாரணாசியின் தட்ப வெட்பத்தை அப்பட்டமாய் எடுத்துக் காட்டியது. மே மாத வெய்யில் 48 லிருந்து 50 டிகிரிக்குக் குறைவாக இல்லை.



நாங்கள் வாத்தியாருடனேயே வருவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டார் சுந்தர் மாமா. இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால் கிரிஜா மன்னிக்கு கேதார் வாத்தியாரை சிறு வயதிலிருந்தே தெரியுமாம். அவர்கள் குடும்ப நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து அவரை சந்தித்தது மட்டுமல்லாமல் அவரே எங்களுக்கு எல்லாம் செய்து வைக்கப் போகிறார் என்பதை அறிந்து இரட்டிப்பு சந்தோஷம்.  வாத்தியார் தம்பதிகளின் பெட்டிகள் எங்களது பெட்டிகள் எல்லாவற்றையும்  சரி பார்த்து கலெக்ட் செய்து கொண்டு அவர்களது வண்டியில் அவர்களை அனுப்பிவிட்டு எங்களுக்காக அவருடைய மகன் புக் செய்திருந்த வேனில் 'சிவாலா காட்' (ghat) என்னுமிடத்தில் அவர் புக் செய்திருந்த 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆஷ்ரம்' என்னும் ஹோட்டலுக்குச் சென்றடைந்த போது மணி 10.30 ஆகிவிட்டது..


முதலில் மூன்று ரூம்கள் எடுத்துக் கொள்வதாக இருந்தது. அதற்கு பதிலாக இரண்டு பெரிய ரூம்களை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தோம். ரூமுக்கு 5 பேர்கள். நான்கு பேர்கள் கட்டிலிலும் ஒருவர் கீழேயும் படுக்குமாறு இருந்தது அந்த ஏசி ரூம்.  எக்ஸ்ட்ரா பெட் வாங்கிக் கொண்டோம்.  ஆண்களுக்கு ஒரு ரூம். பெண்களுக்கு ஒரு ரூம் என்று பிரித்துக் கொண்டோம்.  பாகப் பிரிவினையில் நாங்கள் செய்த பெரும் தவறு மோசமான ரூமில் தங்க ஒப்புக் கொண்டது தான்.  அருமையான, பெரிய, நன்கு வேலை செய்யும் ஏசி ரூமை ஆக்கிரமித்துக் கொண்டனர் ஆண்கள். இது தெரியாத நாங்கள் அப்பாவிகளாக கொடுத்ததை எடுத்துக் கொள்ள, அந்த ரூமில் பாத்ரூம் ஹேண்ட் ஷவர் வேலை செய்யவில்லை,  ஏசி சரியில்லை, கதவு தாழ்ப்பாள் போட வரவில்லை.  எப்படியோ நாங்கள் தூங்கப்போகவே 11.30 மணி ஆகி விட்டது.  அசதியில் நாங்கள் தூங்கிவிட்டோம். கிரிஜா மன்னியால் தூங்கவே முடியவில்லையாம். நான் 3 மணிக்கு எழுந்து பார்த்தால் மன்னி கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். கௌரியும் எழுந்து வர மன்னியை ஆசுவாசப் படுத்தி  பேசிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சாரதாவும், விஜயா அக்காவும் எழுந்திருக்க ஒவ்வொருவராக குளிக்கச் சென்றோம். 

5 பெண்கள் அரைமணியில்  மடிசார் கட்டிக்கொண்டு சீக்கிரமாகவே ரெடியாகி காத்திருக்க, அங்கு பாய்ஸ் ரூமில் யாருமே ரெடியாகவில்லை. அவர்களை நல்ல ரூம் கொடுத்தும் ரெடியாகவில்லை என்று வெகுவாகக் கலாய்த்து விட்டு பெரிய மனது பண்ணி எங்கள்  பாத்ரூமை உபயோகப்படுத்தச் சொல்லி ஒரு வழியாய் எல்லாரும் 5 மணிக்கு ரெடியாகிவிட்டோம். 
கிரிஜா மன்னி ஹோட்டல் ரிசப்ஷனுக்கு சென்று எங்கள் ரூம் சரியில்லை. நாங்கள் இங்கு ஆறு நாடகள் தங்குவதற்கு வந்திருக்கிறோம். வேறு ரூம் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள திரும்பி வரும் போது வேறு ஒரு ரூம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்கள்.

கௌஷிக் வாத்தியார் ஏற்பாடு செய்திருந்த ஷ்யாம் என்பவர் எங்களை பிக் அப் செய்ய வந்திருந்தார்.  கையில் மாற்று உடையும்,  முக்கியமாக நாங்கள் காசியிலிருந்து கொண்டு வந்த மண்ணையும்,  சுமங்கலிகளுக்கு கொடுக்க கண்ணாடி, சீப்பு மஞ்சள் போன்ற சுமங்கலி திரவியங்களையும்  எடுத்துக் கொண்டு வேனில் எங்களது அலகாபாத் பயணம் திட்டப்படி தொடங்கியது.

பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்:

அலகாபாத்தில் நாங்கள் பித்ரு காரியங்கள் செய்ய கணசேன் மாமாவின் இடமான 'சிவ மடம்' என்னுமிடத்தை ஏற்பாடு செய்திருந்தார் கௌஷிக் வாத்தியார். காசியிலிருந்து அலகாபாத் பயணம் இரண்டரை மணி நேரங்கள். அலகாபாத் அடைந்ததும் நாங்கள் முதலில் தரிசித்தது வேணி மாதவர் கோவில்.



அருமையான தரிசனம்வேணி மாதவரை மனமாரப் பிரார்த்தித்துக் கொண்டுசிவ மடம் நோக்கிச் சென்றோம்அங்கு காஃபி கேட்டவர்களுக்கு காஃபியும் அல்லது கஞ்சி கேட்டவர்களுக்கு  கஞ்சியும்  கொடுத்தார்கள்அங்கிருந்த கணேச வாத்தியாருக்கு சுந்தர் மாமாவின் 'வித்வத்'தின் மேல் மிகவும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது தெரிந்தது.




முதலில் எங்களுக்கு சங்கல்பம் செய்து வைத்தார் கணேச வாத்தியார்.  தம்பதிகள் எந்த ஒரு பூஜை செய்யும் போதும், பூஜையை ஆரம்பிக்கும் முன்  கணவன் தன்னுடைய கையில் ஏந்தி நிற்கும் தாம்பாளத்தில் தீர்த்தம் இட்டு பூஜையை ஆரம்பித்து வைக்கும் உரிமை மனைவிக்கே உண்டு.  'அலகாபாத்'தில் செய்யப் படும் சங்கல்பத்திற்கு மட்டும் கணவன், மனைவி கையில் ஏந்தி இருக்கும் தாம்பாளத்தில் உத்திரணி ஜலம்  இட்டு பூஜையை ஆரம்பித்து வைப்பது தனி சிறப்பு.  கணவர் பூஜையை ஆரம்பிக்க அனுமதி அளித்ததும் கணவனின் பாதம் அலம்பி சந்தனம் குங்குமம் இட்ட பின் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் மாலை அணிவிக்க பூஜை தொடங்கியது.  நான்கு சகோதர்களும் சுந்தர் மாமாவும் தம்பதி சமேதமாக சங்கல்பம் செய்த பின் பிராயசித்த பூஜை செய்து வைத்தார் வாத்தியார். தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாபங்களுக்கு பிராயசித்த பூஜை செய்து வேண்டிக் கொண்டோம்.  கொண்டு சென்றிருந்த இராமேஸ்வரம் மண்ணை வைத்து பூஜை  செய்வித்தார் வாத்தியார். அவர் சொன்னபடி ஒவ்வோரு தம்பதியும், ஒரு மூங்கில் முறத்தில் இரண்டு ரவிக்கைத்துணிகள்  சுமங்கலி திரவியங்களை வைத்து பூஜை செய்தோம்.  ரவிக்கைத்துணி, கண்ணாடி வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, மஞ்சள், குங்குமம்,  போன்ற சுமங்கலி திரவியங்களை அங்கேயே வாங்கிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. சிவமடத்தில் இருப்பவர்களிடம் பணம் கொடுத்தால் வாங்கி வந்து கொடுக்கிறார்கள்.

அந்த முறத்தை எடுத்துக் கொண்டு விஜயா அக்கா, கிரிஜா மன்னி, நான், கௌரி, சாரதா எல்லாரும், இரண்டு சுமங்கலிகளுக்கு ரவிக்கைத்துணி, சுமங்கலி திரவியங்கள், கண்ணாடி வளையல்கள், பூ, தட்சணை வைத்துக் கொடுத்து நமஸ்கரித்தோம்.  அதே முறத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ எல்லாம் எடுத்துக் கொண்டு புடவைத் தலைப்பால் மூடிக்கொண்டு, இராமேஸ்வரம் மணலையும் எடுத்துக் கொண்டு  திரிவேணி சங்கமம் நோக்கி 'வேணி தானம்' செய்வதற்குப் புறப்பட்டோம். 




திரிவேணி சங்கமம் என்பது கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற மூன்று புனித  நதிகள் சங்கமிக்கும் இடம். திரிவேணி சங்கமத்திற்கு 'போட்'டில் செல்ல வேண்டும். 


இந்த புனிதமான இடத்திற்கு வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று தோன்றியது.  இந்த இடத்தில் ஒரு தெய்வீக ஆற்றல்பாசிடிவ் வைப்ரேஷன் இருப்பதை உணர முடிந்தது.  இந்த இடத்தை  தூய்மையாக வைத்திருக்கலாம்வைத்திருக்க வேண்டும்அதற்கு இந்தியர்களாகிய நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாகத் தோன்றியது.  

'போட்'டில்  எங்களுக்கு பூஜை செய்து வைக்க அந்த ஊர்  வாத்தியார் அதாவது பண்டா  வந்தார்.  அவர் தான் எங்களுக்கு வேணி தான பூஜை செய்து வைத்தார். போட்டில் அமர்ந்தபடி, கணவரை தன் மனைவிக்கு தலை வாரி, பின்னல் போடச் சொன்னார்.  என் கணவருக்கு பின்னத் தெரியும் என்பதே அன்று தான் எனக்குத் தெரிந்தது. (எனக்கு மட்டுமில்லை எல்லா மனைவிகளுக்கும் தான்).  முகம் பார்க்கும் கண்ணாடியில் முகம் பார்த்து சரியாக இருக்கிறதா என்றும் கேட்க வேண்டுமாம். பின்னுவதே பெரிய விஷயம் இதில் தவறென்ன? சரி என்ன? பின்னி முடித்த பின் கணவரைத் தன் கையால் மனைவியின் தலை முடியின் நுனியில் சிறிதளவு வெட்டி அதனையும் நதிக்கு தானமிடும் படி சொன்னார் அந்தப் பண்டா.  வாழ்க்கையில் ஒரு முறை தான் இதனை செய்ய வேண்டுமாம். மிகவும் வித்தியாசமான அனுபவம். 

முடி நதியில் இட்டதும் நேராக உள்ளே சென்று விடுகிறது. மேலே மிதப்பதில்லை. சரஸ்வதி நதி உள் இழுத்துக் கொள்வதாகவும் இது இந்த நதியின் சிறப்பு என்றும் கூறுகிறார்கள்.

திரிவேணி சங்கமத்தில் கங்கையின் நிறமும் யமுனையும் நிறமும் வேறுபட்டு இருப்பதால் அந்த இரண்டு நதிகளையும் பிரித்துப் பார்க்க முடிகிறது. சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. தலையைப் பின்னும் போது முடியினை மூன்றாகப் பிரித்த பின் பின்னல் பின்னப்படுகிறது. ஆனால்  பின்னிய பின்னலில்  முடியின் இரண்டு பாகங்கள் மட்டுமே  நம் கண்களுக்குப் புலப்படுகிறது. மூன்றாவது பாகம் பின்னிப் பிணைந்து நம் கண்ணுக்கு நேரடியாகப் புலப்படுவதில்லை. அது போலவே சரஸ்வதி நதியும் கங்கை, யமுனையுடன் பின்னிப் பிணைந்து கண்ணுக்குத் தெரிவதில்லை என்று சொல்கிறார்கள்.

பிரயாகையில் கணவர்களும் முடி தானம் செய்ய வேண்டுமாம். 'ப்ரயாகே ப்ரதமே முண்டனம்'. பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்கிறார்கள். காசி, கயைக்கான விளக்கங்களை வரும் பகுதிகளில் காணலாம். பிரயாகையில் ஆண்கள்  மொட்டை போடுவது உசிதம். அது முடியவில்லை என்றால் சவரம் செய்து கொண்டு கொஞ்சமாக முடி இறக்கிக் கொள்வது நல்லதாம்.  அங்கு சவரம் செய்து விட ஆட்கள் இருக்கிறார்கள். எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒருவர் வந்து ஐந்து ஆண்களுக்கும் கொஞ்சமாக முடி இறக்கி, சவரம் செய்வித்தார். 

நாங்கள் முறத்தில் கொண்டு சென்றிருந்த வெற்றிலை, பாக்கு, பழம், பூ,  முதலியவற்றை திரிவேணி சங்கமத்தில் வேண்டிக் கொண்டு நதிக்கு அர்ப்பணித்தோம். பின் நான்கு சகோதரர்களும் அவர்கள் மனைவிகளும் ஒரு சேர 'ஓம் நமசிவாய' என்று பன்னிரண்டு முறை உச்சரித்த படி இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த சேது மாதவராய் பூஜித்த மண்ணை திரிவேணி சங்கமத்தில் கரைத்தோம். அதே போல் சுந்தர் மாமாவும் விஜயா அக்காவும் செய்தார்கள். அங்கே நடு நதியிலிருந்து கேனில் நீர் நிரப்பிக்  கொண்டோம். அதன் பின்  நாங்கள் ஜோடி ஜோடியாக கையைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை முங்கி எழுந்து எல்லா பாபங்களும் தீரவும், குடும்ப நபர்களை மனதில் நினைத்து அவர்களுது க்ஷேமத்திற்காகவும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் வேண்டிக் கொண்டோம். 

வேணி தானம்  மிகவும் திருப்தியாக மன நிறைவுடன் இனிதே முடித்து விட்டு ஈரத்துணியுடன் அங்கிருந்து கிளம்பி சிவ மடத்திற்கு வந்தோம். அடிக்கும் வெய்யிலில் இந்த ஈரம் ஒரு பொருட்டே இல்லை. 

சிவ மடத்திற்கு வந்ததும் ஹிரண்ய சிரார்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இதற்கு பிராமணாள் கிடையாது. 17 பிண்டங்கள் பிடித்து பிண்டப் பிரதானம் செய்து 'தத்தம்' கொடுத்த பின் வாத்தியாருக்கு சம்பாவனை செய்து முடித்ததும் தர்ப்பணம் செய்தார்கள் ஆண்கள்.  பிண்டத்தை கங்கையில் கரைக்க வேண்டும். அதை வாத்தியாரே கரைக்க ஏற்பாடு செய்வதாகக் கூற அதற்கான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டோம்.


அதன் பின் எங்கள் ஈரப் புடவைகளையும் வேஷ்டிகளையும் மாற்றிக் கொண்டு அந்த புடவைகளையும் வேஷ்டிகளையும் தானமாகக் கொடுக்கும்படி அந்த சிவ மடத்திலேயே விட்டு வந்தோம்.  அலகாபாத் தில் நீராடிய பின் அந்த ஈர உடையை அங்கேயே விட்டு விட்டு வர வேண்டும் என்பது சிலரது நம்பிக்கை. அதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும் முன்பெல்லாம் இல்லாதவர்களுக்கு அதைக் கொடுத்தால் எடுத்துச் செல்வார்கள். ஆனால் இப்பொழுது யாரும் வாங்கிக் கொள்வதில்லை என்றார் கணேச வாத்தியார்.  இருந்தாலும் நாங்கள் எங்கள் உடைகளை  தானம் செய்யும் விதமாக அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம். 

பின் அவர்கள் சமைத்து வைத்திருந்த சிரார்த்த சாப்பாடு சாப்பிட்டோம்.  பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முறைப்படி முடித்துவிட்டு அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு வாரணாசி நோக்கிக் கிளம்பினோம். வழியில் 'லஸ்ஸி'யும் டீ கேட்டவர்களுக்கு டீயும் வாங்கிக் கொடுத்தோம். நடுவில் என் கணவர் ஜெயராமன் லிச்சி பழம் வாங்கி வர தாகத்திற்கு இதமாய் இனித்தது அது. 5 மணிக்கு வாராணாசி வந்து சேர்ந்தோம்.

'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆஸ்ரமம்' ஹோட்டலில் நாங்கள் கேட்டுக் கொண்டபடி வேறு ரூம் மாற்றிக் கொடுத்தார்கள் . அது பழைய ரூமை விட பரவாயில்லை. ஆனால் ஏசி சுமராகத் தான் வேலை செய்தது. இதுவும் ஆண்கள் ரூம் அளவுக்கு இல்லை என்று புலம்பினாலும் அந்த ரூமுக்கு மாறி விட்டோம்.

வாரணாசி என்னும் காசி:

6 மணிக்கு ஷ்யாம் வந்து எங்களை கங்கா ஆர்த்தி பார்க்க அழைத்துச் சென்றார். எங்கள் எல்லாருக்கும் கங்கா ஆர்த்தியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஆசை. முக்கியமாக சாரதா விற்கு அது மிகப்பெரிய கனவு. தினமும் ஆன்லைனில் அந்த ஆர்த்தியைப் பார்ப்பது அவளது வழக்கம்.  கங்கைக் கரையை அடைந்ததுமே மனம் குதூகலித்தது. 



கங்கை 'சிவாலயா காட்'  என்னுமிடத்திலிருந்து 'போட்' டில் புறப்பட்ட நாங்கள் கங்கையைச் சுற்றி இருக்கும் 66 காட் களையும் அந்த போட்டில் அமர்ந்தபடி வலம் வந்தோம்.  
ஹனுமான் காட், ஹரிசந்திரா காட், துளசி காட், மணி கர்நிகா காட்,  அஸ்ஸி காட் இப்படி பல காட் களை பார்த்து கடந்த பின் தச அஸ்வமேதா காட் வந்தடைந்தோம். 

கங்கா ஆரத்தி பார்க்க நிறைய பேர் வந்திருந்தார்கள். செம கூட்டம். போட்டில் அமர்ந்த படி ஆர்த்தியை ரசித்தோம். மணியோ சாயங்காலம் ஏழு மணி. இருப்பதோ கங்கை நதி சூழல். அப்படியும் அடித்ததென்னவோ வெப்பக்காற்று தான். தாகம் தாங்கவில்லை. நாங்கள் கேட்டுக் கொண்டதால் போட் ஓட்டுநர் ஒவ்வொரு 'போட்'டாக தாண்டிச் சென்று கரையிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில்கள் வாங்கி வந்தார். நன்றியுடன் பருகிய உடன் தான் உயிர் வந்தது. அடாது அனல் அடித்தாலும் விடாது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வது என்று நாங்களும் அசராமல் எல்லாவற்றையும் உற்சகமாய் செய்து வந்தோம்.





நாங்களும் விளக்கு வாங்கி அதை நீரில் இட்டு அது மிதந்து வரும் அழகை ரசித்தோம். ஆர்த்தி முடிந்து நாங்கள் நேராக 'கேதார் வாத்தியார்' வீட்டிற்குச் சென்றோம். அவர்களை விமானத்திலேயே சந்தித்திருந்ததால் மிகவும் பரிச்சியமாக இருந்தது.  அவர்கள் வீட்டில் எங்கும் 'மஹா பெரியவா' நிறைந்திருக்கிறார். அவரது பாதத்தை பூஜை அறையில் வைத்திருக்கிறார்கள்.  அங்கு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அருகில் இருக்கும் அவரது மகன் கௌசிக் வீட்டிற்கு சாப்பிடச் செல்வதாக ஏற்பாடு.  நான், சீதாராமன் மற்றும் விஜயா அக்கா ஹோட்டல் ரூமிற்கு வந்து விட்டோம். மற்றவர்கள் கௌஷிக் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு எங்களுக்கும் தோசை எடுத்துக் கொண்டு வந்தார்கள். சாப்பிட்டு சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தோம்.

இரவு 9 மணிக்கு அனந்தன் அண்ணாவும் ரகுவும் காசி விஸ்வநாதரை தரிசிக்க செல்வதாகச் சொல்ல நாங்களும் வருகிறோம் என்று நான், கௌரி, சாரதாவும் கிளம்பிவிட்டோம்.  வாரணாசியில் சுற்றுப்புற சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் இருக்கின்றன. அதில் 4 பேர்கள் தாராளமாகச் செல்லலாம். 5 வது ஆள் ஓட்டுநர் பக்கத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு பயணிக்க முடியும். நாங்கள் ஐந்து பேரும் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டோம். ஆட்டோ கோவில் வரை செல்வதில்லை. அங்கிருந்து நடந்து நாங்கள் கோவிலை அடைந்தோம். கோவிலுக்குள் மொபைல் ஃபோன், எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதி இல்லை. ஆண்களுக்கு ஒரு க்யூ. பெண்களுக்கு ஒரு க்யூ. கோவிலுள் நுழையுமுன் செக்யூரிட்டி செக் செய்கிறார்கள். சாரதா உள்ளே சென்ற பின் நான் செல்ல எங்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' சைப் பார்த்து என்னையும் கௌரியையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
  
'வாட்ச்'சை வெளியில் லாக்கரில் வைத்துவிட்டு வரும்படி கூறிவிட்டனர். உள்ளே சென்ற மூவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. எங்களிடம் பணமும் இல்லை. ஆனால் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளாதா என்ன? எங்களுக்கு ஹிந்தி தெரியுமாதலால் நாங்கள் வெளியில் சென்று லாக்கர் இருக்கும் இடத்தை அறிந்து வாட்சை வைத்துவிட்டு ஸ்வாமிக்கு முந்திரி திராட்சை டப்பா வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போது பணம் தருவதாகக் கூறிவிட்டு வருவதற்குள், எங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் அண்ணா.  என்னாச்சு பின்னாடியே வர வேண்டியது தானே? என்று அண்ணா கேட்க, எங்களை உள்ள விடலை. ஏன் நீங்க எங்களைத் திரும்பிப் பார்க்கலை என்று நாங்கள் எதிர் கேள்வி கேடக டென்ஷன் குறைந்து சிரித்தபடி நாங்கள் தரிசனத்திற்குச் சென்றோம்.  இரவு 10 மணிக்கும் அசாத்திய கும்பல்.  சிவனுக்கு ஆர்த்தி நடந்து கொண்டிருந்ததை அங்கிருந்த டீவி மூலம் பார்க்க முடிந்தது. க்யூவில் சென்ற போதும் காசி விஸ்வநாதரை தூரத்திலிருந்து தான் தரிசிக்க முடிந்தது. பூ அலங்காரங்களில் இருந்ததால் சிவலிங்கத்தை எங்களால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. ஆனால் ஆர்த்தியை கண்ணில் ஒற்றிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. கோவிலின் அழகை ரசித்தபடி அங்கிருந்து கிளம்பி எங்களின் 'வாட்ச்'சைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்துவிட்டு    தெய்வீகமான காசி அன்னபூரணியைப் பார்க்கச் சென்றோம். அன்னபூரணி கொள்ளை அழகு. அவளது அழகை கண்களிலும் கருணையை மனதினிலும் நிரப்பிக் கொண்டு கேட் 2 வில் உள்ள விசாலாட்சி அம்மனை தரிசிக்கச் சென்றோம். 

தெருவில் ஆட்டோ, நாய், ஸ்கூட்டர், நடப்பவர்கள், அங்கேயே ஸ்கூட்டரை  நிறுத்திவிட்டு செல்பவர்கள், எங்கும் குப்பை கூளம் என்று   நிறைந்திருக்க தெருவில் கால் வைக்கவே இடமில்லை. அதிலும் 5 பேர் தட்டுத்தடுமாறி அம்மனை தரிசித்தோம். அம்மனின் கருணை உருவில் அத்தனை தூரம் நடந்ததே தெரியவில்லை.  நாங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோவில் ரூமுக்கு வரும் போது மணி 11.30 ஆகி விட்டது.   நிம்மதியாக உறங்கிப்போனோம்.

வாரணாசியில் நாங்கள் செய்த பித்ரு காரியங்களின் விவரங்கள் பகுதி 3 ல் காணலாம்.

பிரயாக்ராஜ் என்னும் அலகாபாத் பயணத்திற்கு ஆன செலவுகள்:

வரிசை எண்

விளக்கங்கள்

செலவுகள்

1

மகாதானபுரத்திலிருந்து திருச்சிக்கு வேன் செலவு (ஒரு பேட்சுக்கு 2000 வீதம் இரண்டு ட்ரிப் களுக்கு)  

            4000.00

2

28.5.2024 வாரணாசி ஏர்போர்ட்டிலிருந்து பிக் அப் செய்து மீண்டும்  2.6.2024  வாரணாசி ஏர்போர்ட்டில் விடும் வரை  பனிரெண்டு பேர்கள் சௌகர்யமாக அமரும்   வண்ணம் அர்பானியா (Urbania) வேனுக்கு  

35000.00

3

ஸ்நாக்ஸ்                                                                                  

          100.00

4

வேணிதானம் ஒரு சுமங்கலிக்கு 100 வீதம் 2 சுமங்கலிகளுக்கு 5 பேர் கொடுத்தது

1000.00

5

வேணிதானத்திற்கு முறம், ரவிக்கைத் துணி இத்யாதி                                   

        1000.00

6

போட், பண்டா, சவரம்  

        3200.00

7

டிப்ஸ்    

200.00

8

வாட்டர் பாட்டில் 6 க்கு ஒன்று 20 ரூ வீதம்  

120.00

9

ஹிரண்ய ஸ்ரார்தம் வாத்தியார் தட்சணை  5 பேருக்கு 500ரூ வீதம்

2500.00

10

பிண்டம் கரைக்க    

250.00

11

சாப்பாடு  2530 + டிப்ஸ் 

 3000.00

12

லஸ்ஸி டீ இத்யாதி   

  420.00

13

லிச்சி பழம்  

140.00

14

டிரைவர் உணவு

200.00

15

வாழைப்பழம்  

 50.00

16

கங்கா ஆர்த்தி விளக்கு ரூ20 வீதம் 5 விளக்குகள்  

100.00

17

கங்கா ஆர்த்தி பார்க்க போட் செலவு பேருக்கு 250ரூ வீதம் 10 பேருக்கு

2500.00

 

மொத்தம்

53780.00



அலகாபாத் என் பார்வையில்:

நாங்கள் அலகாபாத்தில் தங்கவில்லை. 

காசியில் 28.5.2024 லிலிருந்து 2.6.2024 வரை தங்குவதற்கு ரூம் புக் பண்ணிக்கொண்டோம்.  எங்கள் ஊரிலிருந்து  செல்லும் போதே நாங்கள்  கெட்டில், இண்டக்ஷன் ஸ்டௌ, பில்டர், இரண்டு இண்டக்ஷன் பாத்திரங்கள், கஞ்சி மாவு, காஃபி பௌடர், டீ பேக்கெட்ஸ், இன்ஸ்டன்ட் காஃபி பௌடர் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றிருந்தோம். காசி ஹோட்டலில் கெட்டில் வைத்திருக்கவில்லை. நாங்கள் எடுத்துச் சென்றது மிகவும் உபயோகமாக இருந்தது.

29.5.2024 அன்று காலை காசியிலிருந்து அலகாபாத் சென்று பித்ரு காரியங்களை நல்லபடி முடித்துவிட்டு சாயங்காலம் 5 மணிக்கு மீண்டும் காசி வந்து விட்டோம். 

மே மாத வெய்யில் கொளுத்தி எடுத்துவிட்டது அலகாபாத்தில். 45 லிருந்து 48 டிகிரி. அந்த ஊர் சாப்பாடு, வெய்யில், தண்ணீர் எல்லாம் நமது உடம்புக்கு ஒத்துக் கொள்வது கடினம்.  பலருக்கு வாந்தி, 'டீ ஹைட்ரேஷன்' (Dehydration) ஆகும் வாய்ப்புகள் மிக அதிகம்.  எங்களிலும் பலருக்கு இந்த பிரச்சனை முதல் நாளிலேயே இருந்தது.

திரிவேணி சங்கமத்தை பார்க்க குளிர் காலம் அதாவது அக்டோபரிலிருந்து மார்ச் வரை உள்ள மாதங்கள் தான் உகந்தது. தண்ணீரும் மிகுந்து இருக்கும்.  

கையில் குளுகோஸ், எலக்ட்ரால், புளிப்பு மிட்டாய்கள் எடுத்துச் செல்வது நல்லது. தாகத்தைக் கட்டுப்படுத்தி 'டீ ஹைட்ரேஷன்'  ஆகாமல் காக்க உதவும். 
தண்ணீர் பாட்டிலில்கள் வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது குடித்துக் கொண்டே இருப்பது உசிதம். 

லஸ்ஸி மிகவும் பிரசித்தம். மிகவும் ருசியாக இருக்கிறது. ஆனால் அந்த ஊர் பால், தயிர் மிக மிக திக்காக இருப்பதால் பலருக்கு ஈசியாக டைஜஸ்ட் ஆவதில்லை.

அலகாபாத்தில் நாங்கள் தங்கி இருந்த சிவ மடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். இங்கிருக்கும் கணேச மாமாவின் தாத்தா நடேச சாஸ்திரிகள் அரசியலில் இருந்திருக்கிறார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி. கிரி அவர்கள் இந்த மடத்தில் தங்கியுள்ளார். அந்த புகைப் படத்தை சிவ மடத்தில் காண முடிகிறது.

1900 ல் பாரதியார் இங்கு தங்கியதாக வலைதளத்தின் மூலம் தெரிய வருகிறது.

திரிவேணி சங்கமத்தில் நீர் அதிகமில்லா வெய்யில் காலத்திலும் நீரின் சுழற்சி அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

திரிவேணி சங்கமத்தைப் பார்க்கும் போது ஒருவித தெய்வீகத் தன்மையுடன் இருந்தாலும், அங்குள்ள  தண்ணீரின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தோன்றியது.  தண்ணீரில் துணிகளை விடுவதும், ப்ளாஸ்டிக் போன்ற குப்பைகளைப் போடுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இப்பொழுது கொஞ்சம் விழிப்புணர்வு தோன்றி இருக்கிறது என்றாலும்  இந்த இடங்களின்  புனிதத் தன்மையைக் காப்பாற்றி தூய்மையுடன் நம் வருங்கால சந்ததிகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 
 
பயணங்கள் தொடரும். 

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.
22.06.2024

மற்ற பகுதிகளுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 1 – இராமேஸ்வரம்    

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.                          https://mathangiyinmanam.blogspot.com/2024/06/1_36.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 3 -  வாரணாசி என்னும் காசி:
படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 4 -  கயா 

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 5 -  தம்பதி பூஜை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 
https://mathangiyinmanam.blogspot.com/2024/07/5_25.html

குடும்பத்துடன் காசி யாத்திரை பகுதி 6 -  சமாராதனை

படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


பயணங்கள் தொடரும்.

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.

எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...