அந்தமானைப் பாருங்கள் அழகு என்று கேட்டுக் கேட்டு பார்க்க ஆசை. ஓடோடி, இல்லை இல்லை, பறந்து
பறந்து செல்ல முடிவெடுத்தோம்.
கப்பலில் மிதந்தும் செல்லலாம். ஆனால் 3 நாட்கள் ஆகும் என்பதனால், பால்மர் லௌரி அண்ட் கம்பெனி
லிமிடெட் (M/s Balmer Lawrie & Company Limited (BLCL) ஏஜென்ஸியின் மூலமாக விஸ்தாரா
விமானத்தில் 5 இரவுகள் 6 நாட்களுக்கு பேக்கேஜ் டூருக்கு
புக் செய்தோம்.
லிஸ்ட் போட்டு ட்ரெஸ்ஸிங்க் கிட்டில் பிரஷ்,
பேஸ்ட், சன் ஸ்க்ரீன் லோஷன், பாடி க்ரீம், பௌடர், லிப் பாம், கூலர்ஸ் போன்றவற்றையும்
சோப், ஷாம்பு பொன்றவை ஹோட்டலிலேயே கொடுப்பதால் அவை விடுத்து மற்ற தேவையான மேக் அப்
சாமான்களையும் எடுத்துக் கொண்டோம். மருத்துவ கிட்டில் பேராசிட்டமால், ஜெலூசில் போன்ற
அடிப்படை மருந்துகளைப் பேக் செய்து கொண்டோம். வழி நடைக்கு கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக்
கொண்டோம். கடல் சூழ் தீவுக்குப் பயணம் என்பதனால் தேவையான அளவு உள் ஆடைகள், ட்ராவல்
உடைகள், துண்டுகள் மற்றும் மாற்று உடைகள் எடுத்துக்
கொண்டோம். சாக்ஸ், ஷூ மற்றும் நீரில் திளைக்க செப்பல் என்று பேக் செய்து கொண்டோம்.
பயணத்தில் குறைந்த சாமான்களை எடுத்துச் செல்வது உத்தமம் என்பதனால் அளவாக ஆனால் முக்கியமான
பொருட்களுடன் புறப்படத் தயாரானோம்.
போர்டிங் பாஸ் வீட்டிலிருந்த
படி ஆன் லைனில் வாங்கி ஆகி விட்டது. டிஜ்ஜியாத்ரா
(Digi Yatra app) என்ற
ஆப் டவுன்லொடு செய்து அதில் நம் ஆதார் மற்றும் போர்டிங் பாஸ் அப்லோடு செய்து விட்டால் ஏர்போர்ட் நுழையும் போதும் செக்யூரீட்டி செக் செய்யும் போதும் புதிதாக வைக்கப் பட்டுள்ள கேமரா வில் முகத்தைக் காட்ட, ஃபேஸ் ரிகக்னிஷன் மூலம் நம் விவரங்கள் ஸ்க்ரீனில் விரிய எளிதாக செக்கிங் முடிகிறது என்பது கூடுதல் தகவல். இந்த வசதி பெரிய விமான நிலையங்களில்
தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது.
மான், மழை, மயில், கடல் அலைகள், விமானம் இவற்றை
எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. இவை அனைத்தையும் பார்க்கப் போகிறோம்
என்றால் உற்சாகத்துக்கு சொல்லவும் வேண்டுமோ? குழந்தையாய் மாறி குதூகலித்தபடி நான், என் கணவர் ஜெயராமன் மற்றும் எங்களது இரண்டாவது மகள் அனன்யா மூவரும் காலை உணவை பேக் செய்து கொண்டு 17.12.2023
ஆம் நாள் காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம். எங்கள்
பெரிய மகள் சந்தியா அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து வருவதால் அவள் எங்களுடன் வர முடியவில்லை. அவளில்லாமல்
நாங்கள் செல்லும் முதல் வெளியூர் பயணம் என்பதால் அவளை மிகவும் மிஸ் செய்தோம். நாங்கள்
கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு நிமிடத்தையும் அவளுடன் பகிர்ந்து கொண்டோம்.
நாள் ஒன்று:
8.30 மணிக்கு பெங்களூர் ‘கெம்பகௌடா
ஏர்போர்ட்’டின் T2 டெர்மினலை அடைந்தோம். பெங்களூரின் T2 டெர்மினல் புதிதாக மிகவும்
கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைக்காட்சிக் கூடம் போல் எங்கும் எழில் நிறைந்து,
வேற்று கிரகத்தில், ஒரு ஃபேண்டஸி உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு. மூங்கிலால் அழகமைக்கப்பட்ட உட்புறக் கூரை. எங்கும்
பசுமை. இந்தியாவின் முக்கியமாக கர்நாடக மாநிலத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை
விளக்கும் விதமாக ஆங்காங்கே அமைக்கப்பட்ட மாதிரிப் படிவங்கள் அழகுக்கு மெருகூட்டின.
இந்த டெர்மினல் உலகத்திலுள்ள அழகான ஏட்போர்ட்
களில் ஒன்று என்று யுநேஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 2023 ம் வருடத்திற்கான உட்புற அழகிற்கான
சிறப்புப் பரிசை இந்த டெர்மினல் பெற்றுள்ளது. அழகை ரசித்தபடி படங்கள் பிடித்தபடி கொண்டு
வந்திருந்த காலை உணவை உண்டோம்.
10.05 க்கு போர்டிங்க் ஆரம்பித்தது.
விமானத்தில் நுழைந்தோம். அருமையான வெதர். கடலுக்கு
மேல், மேகங்களுக்கிடையே விமானம் பறக்க, கண்ணுக்கு
விருந்தாய், மனதுக்கு ரம்மியமாய் ஜன்னல் வழியே உள் நுழைந்து மயக்கியது இயற்கை. கிளிக்கினோம்
கேமிராவை. 2.15 மணி நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் காம்ப்ளிமென்ட்ரி
ப்ரெக் ஃபாஸ்ட் கொடுத்தனர். 1.30 மணிக்கு போர்ட் பிளேரின் வீர் சவர்கர் விமான நிலையத்தை
அடைந்தோம்.
எங்கள் பேக்கேஜ் டூரின் அந்தமான் ஏஜெண்ட் அந்தமான் ஃபியஸ்டா (Andaman Fiesta) என்னும் நிறுவனம். என் கணவரின் பெயர் பலகையைப் பிடித்தபடி நின்றிருந்தார் டிரைவர். ஏசி காரில் பயணித்து எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ‘மரினா மெனார்’ என்னும் ஹோட்டலுக்குச் சென்றோம். அது ரொம்ப பிரமாதமான ஹோட்டல் இல்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு தரமான இடம் தான்.
முதலில் நாங்கள் சென்றது அந்தமானின் பிரிட்டிஷ் காலனிச் சிறையான செல்லுலார் ஜெயில் (Cellular Jail). நம்முடைய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கே அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். இது ஒரு தேசியப் போர் நினைவுச் சின்னமாகும். கனத்த இதயத்துடனும் நன்றி உணர்ச்சியுடனும் அந்த 7 பகுதிகளைக் (Wings) கொண்ட அந்த சிறையை சுற்றி வந்தோம்.
செல்லுலார் ஜெயிலில் காண்பிக்கப் படும்
ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சிக்கு (Light and Sound show) மாலை 5.50 ஷோவிற்கு எங்கள் டிக்கெட்
புக் செய்யப்பட்டிருந்தது. அருமையான நிகழ்ச்சி. அனைவரும் குறிப்பாக இளைஞர்களும் வருங்கால
சந்ததியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.
நம் முன்னோர்கள் எத்தனை கஷ்டங்களையும் கொடுமைகளையும் சகித்து நமக்கு சுதந்திரம்
வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க மெய் சிலிர்த்தது. வந்தே மாதரம்.
ஷோ முடிந்ததும் நாங்கள் காரில் ரூமுக்கு
வந்தோம். கொண்டுவந்திருந்த தின் பண்டங்களைக் கொரித்து விட்டு அருகிலிருந்த வெற்றி மலை
முருகன் கோவிலுக்கு ஆட்டோ எடுத்துக் கொண்டு சென்றோம். காந்தி பார்க் அருகில் இருக்கும்
இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். அங்கு தரிசனம் முடித்து விட்டு
அன்னபூர்ணா வெஜிடேரியன் ஹோட்டலில் இரவு உணவு அருந்திவிட்டு ரூமுக்கு வந்து சேர்ந்தோம்.
முதல் நாள் பயணம் அருமையாய் முடிந்து அமைதியாக உறங்கினோம்.
18 ஆம் தேதி காலை 6.45க்கு நாங்கள் ரூமை காலி செய்துவிட்டு, அங்கிருந்து இட்லி, சட்னி சாம்பார் பேக் செய்து கொண்டு எங்களது இரண்டாம் நாள் பயணத்தை போர்ட் ப்ளேரிலிருந்து ஹேவ் லாக் தீவை நோக்கி த் தொடங்கி விட்டோம்.. ஹேவ் லாக் தீவின் புதிய பெயர் ஸ்வராஜ் தீவு. எங்களது கார் எங்களை ஹார்பரில் விட்டு விட, மக்ரூஸ் (Makruzz) பயணக் கப்பல் எங்களை ஏற்றிக் கொண்டு காலை 8.00 மணிக்கு ஹேட்டோ துறைமுகத்திலிருந்து (Haddo Jetty) புறப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட அந்த அழகான ப்ரைவெட் க்ரூஸில் அந்தமான் கடலின் அழகை ரசித்தபடி 1.50 மணி நேரப் பயணம்.
அது எங்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்ட்து. ஏனென்றால் மதிய வேளை என்பதாலும் சாப்பாட்டு நேரம் என்பதாலும் பீச்சில் கூட்டமே இல்லை. ராதாநகர் கடற்கரையின் அழகை வார்த்தைகளில் வடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த கடற்கரை மிகவும் தூய்மையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. Foundation for Environmental Education (FEE) என்னும் சுற்றுப்புறச் சூழல் நிறுவனம் இந்தக் கடற்கரைக்கு ப்ளூ ஃப்ளேக் (Blue Flag) சான்றிதழ் அளித்து சிறப்பித்துள்ளது. இங்கு வாட்டர் விளையாட்டுக்கள் எதற்கும் அனுமதியில்லை. ஆசை தீர தூய்மையான நீரில் நீந்தித் திளைக்கலாம். இயற்கையை ரசிக்கலாம். கூட்டம் இல்லாததினால் எங்கள் சொந்தக் கடற்கரை போல் நீரில் ஆட்டம் போட்டோம்.
மாலை ஆறரை மணிக்கு எங்கள் ரெஸார்ட்
வந்தோம். ஃப்ரஷன் அப் செய்து கொண்டு அருகிலிருந்த
தமிழ் தோசா கார்னரில் உணவு அருந்தச் சென்றோம்.
பிறகு காலாற நடந்தோம். வரும் வழியில்
ஒரு இடத்தில் மூவரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து சேர்ந்தோம். இரண்டாம்
நாள் இனிதே முடிந்தது.
நாள் மூன்று:
19 ஆம் தேதி காலை 5 மணிக்கு ரிசப்ஷனில் எங்களை எழுப்பச் சொல்லி, சூரிய
உதயத்தைப் பார்க்க நானும் என் கணவரும் அருகிலிருந்த நார்த்தன் பீச்சு (Northern
beach) க்கு புறப்பட்டோம். பிரம்ம
முகூர்த்தத்தில் அரை இருட்டில் காலாற நடந்தது சுகமாய் இருந்தது. கடலிலிருந்து
மெல்ல மெல்ல கதிரவன் தலை நீட்டி கொஞ்சம் கொஞ்சமாய் வெளி வந்து கதிர் விரித்து வெளிச்சத்தைப்
பரப்பியபடி தலை எடுக்கும் அழகை ரசித்து ருசித்து படம் பிடித்து மகிழ்ந்தோம்.
ரூமுக்கு வந்து குளித்து ரெடியாகி அங்கேயே
சிற்றுண்டிக்கு காம்ப்ளிமெண்டரி (complimentary) பஃபே (buffet) விருந்தை புசித்து பசி நீக்கிய பின் அங்கிருந்து
செக் அவுட் செய்து 8.30 மணிக்குப் புறப்பட்டோம். 9.30 மணிக்கு ஹேவ்லாக் தீவிலிருந்து
நீல் தீவுக்கு எங்களுக்கு நாட்டிகா (Nautika) என்னும் க்ரூஸில் லக்ஸுரி சீட்டில் பயணிக்க டிக்கெட் புக்
செய்யப் பட்டிருந்தது. லக்ஸுரி க்ரூஸில் சொகுசாகப் பயணித்து, லெமன் ஜுஸ் பருகியபடி,
மெய் மறக்கச் செய்த கடலின் அழகை ரசித்தபடி 1 மணி நேரத்தில் நீல் தீவினை அடைந்தோம்.
10.45 க்கு எங்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த ‘கோரல் கார்டன்’ என்னும் அழகான ரெஸார்டினை
அடைந்தோம்.
12 மணிக்கு பரத்பூர் பீச் சென்றோம்.
பரத்பூர் பீச், நீல் தீவிலிருக்கும் மிக அழகான பீச். இங்கு கடல் நீர் மிகத் தெளிவாக இருக்கிறது. நீரின் வண்ணத்திலேயே அதன் தெள்ளத் தெளிவான அழகு புலப்படுகிறது. கடலுக்கடியில் இருக்கும். அழகிய உலகத்தையும், அதில் வாழ் உயிரினங்களையும் தரிசிக்க இந்த பீச் மிகச் சிறந்த இடமாகும். இங்கு ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்ளிங்க், ஜெட் ஸ்கீ, படகு சவாரிகள் போன்ற பல நீர் விளையாட்டுகள் நடக்கின்றன. நமக்குப் பிடித்த விளையாட்டை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தைக் கட்டி நாமும் அதில் பங்கு பெறலாம். நாங்கள் மூவரும் ஸ்கூபா டைவிங் செய்யத் திட்டமிட்டோம். அதற்கான கட்டணம் ஒருவருக்கு Rs. 4500. முதலில் தயங்கினாலும் கண்டிப்பாக அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்று மூவருக்கும் பணம் கட்டிவிட்டோம்.
எனக்கு ஹிப் ரீப்ளேஸ்மெண்ட் ஸ்ர்ஜரி
நடந்து 6 மாதங்களே ஆன நிலையில் இதை செய்யலாமா? என்ற கேள்வி என் மனதில் இருந்தது உண்மை.
இதைப் பற்றி பல வளை தளங்களில் ஆராய்ந்து வந்தேன். ஸ்ர்ஜரி ஆன 3 மாதங்களில் ஸ்கூபா டைவிங்
செய்தவர்களின் அனுபவங்களையும், ஹிப் ரீப்ளேஸ்மெண்ட் ஸ்ர்ஜரி ஆனவர்களும் செய்யலாம் என்று
அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஸ்கூபா டைவிங்
இருந்ததையும் படித்திருந்ததனால் துணிந்து விட்டேன். https://pubmed.ncbi.nlm.nih.gov/7898139/
எங்கள் மகள் அனன்யா மிகவும் ஆர்வத்துடன் இதை எதிர் பார்த்திருந்தாள். என் கணவரும் அனன்யாவும் என்னை உற்சாகப் படுத்த என்னால் என் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. களத்தில் அந்தமான் கடலில் இறங்கிவிட்டோம்.
ஸ்கூபா டைவிங் அனுபவம்:
ஸ்கூபா டைவிங் செய்வதற்கு முதலில் நமக்கு
மாற்று உடை கொடுக்கிறார்கள். எங்கள் மூவருடன் இன்னும் மூவர் சேர்ந்து கொண்டனர். அவர்கள்
இதற்கு முன்பே ஸ்கூபா டைவிங் செய்து அனுபவப் பட்டதினால், முதல் முதலாக செய்யும் எங்களை மிகவும் உற்சாகப் படுத்தினர். முக்கியமாக
எனக்கு மிகவும் ஊக்கம் கொடுத்து என் ஆவலைத் தூண்டினர்.
இரண்டு தேர்ந்த பயிற்சியாளர்கள், ஆழ்
கடலில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நிபந்தளைப் பற்றி பயிற்சி கொடுப்பதற்காக, கடலில் குறைந்த ஆழம் இருந்த இடத்திற்கு
எங்கள் ஆறு பேரையும் கூட்டிச் சென்றார்கள்.
கடலுக்கடியில் பேச முடியாது என்பதால்
சைகை மூலம் நம் பயிற்சியாளர்கள் சொல்வதை புரிந்து கொண்டு நாம் எப்படி செயல்பட வேண்டும்
என்பதையும் நாம் சொல்ல வேண்டியதை சைகையில் எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிக்
கொடுத்தார்கள். பயிற்சி:
1. நீருக்கடியில் வாய் வழியாக மட்டுமே
சுவாசிக்க முடியும் என்பதால் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுத்து அதன் ட்யூபை வாயில் சொருகிக்
கொண்டு நீருக்கடியில் வாய் வழியாக மூச்சு விடும் பயிற்சி.
2. பிரஷர் மாறுபடும் போது கடலுக்கடியில்
காது அடைக்கும் அதை சரி செய்ய வாய் வழியாக மூச்சை உள் இழுத்து மூக்கினை மூடிய படி மூக்கின்
வழியாக மூச்சை வெளியேற்ற காது க்ளியராகும். அதற்கான பயிற்சி மற்றும் சைகையில் அதை எப்படி
தெரியப்படுத்துவது என்பதற்கான முத்திரை.
3. வாய்க்குள் தண்ணீர் புகுந்து விட்டால்,
நம் வாயிலுள்ள ட்யூபில் உள்ள பட்டனை அழுத்தினால் வாயில் புகுந்த நீர் வெளியேறிவிடும்.
அதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி.
4. கண்ணில் நீர் புகுந்துவிட்டால்.
தலையை மேல் நோக்கி சாய்த்து கைகளால் முக மாஸ்க்கை பிடித்துக் கொண்டு மூக்கு வழியாக
காற்றை வெளியேற்ற வேண்டும்.
5. நாம் சரியாக இருக்கிறோமா? என்பதற்கு
ஒரு முத்திரை. சரி இல்லை என்றால் அதனை பயிற்சியாளர்களுக்கு தெரிவிக்க ஒரு முத்திரை.
6. கடலுக்கடியில் செல்ல ‘தம்ஸ் டௌன்’
முத்திரை.
7. மேல் எழும்பி வர ‘தம்ஸ் அப்’ முத்திரை.
பயிற்சிக்குப் பின் நம்மை சோதித்துப்
பார்க்கிறார்கள். அதில் பாஸ் செய்தால் மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச்
செல்கிறார்கள்.
‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ என்று என் மனம் குதூகலிக்க படகில் ஆழ் கடல் நோக்கி பயணம்.
4 மீ லிர்ந்து 12 மீ வரை ஆழமுள்ள இடத்தில் படகை நிறுத்தினார்கள். ஒருவருக்கு ஒரு பயிற்சியாளர் என்ற வகையில் இரண்டு பயிற்சியாளர்கள் இருந்ததால், ஒரு முறைக்கு இரண்டு பேரை கடலுக்கடியில் அழைத்துச் சென்றார்கள்.
இடுப்பில் பாலாட்ஸ் எடைகள் என்ப்படும்
எடையினை கட்டி, ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில்
இணைத்து, மூக்கினை மூடி நீருக்கடியில் தெளிவாகத் தெரியும் கண்ணாடியுடன் கூடிய முகக்
கவசம் அணிவித்து, மூச்சு விட வாயில் ஒரு ட்யூபை பொருத்தி, காலில் துடுப்புகளைப்
(fins) போன்ற செருப்புகளை அணிவித்தால் ஏறக்குறைய 12 கிலோ எடையினை சுமந்து நாம் ஸ்கூபா டைவிங்
செய்ய ரெடி. நீருக்கடியில் வெயிட் தெரியாது. நம்மை படகில் உட்கார வைத்து மெல்ல கடலுக்குள் மென்மையாகத்
தள்ளி விடுகிறார்கள். கடலில் பயிற்சியாளர் நம்மை பிடித்துக் கொள்கிறார்.
கடலுக்கடியில் இருக்கும் அழகிய உலகம்
நோக்கி நம் பயணம் தொடங்குகிறது. வித விதமான கோரல்கள் நம் மனதை மயக்குகிறது. கோரல் ஓர்
உயிரினம் அதனை தொடவோ அதன் மீது கால் வைக்கவோ கூடாது. பார்த்து ரசித்தோம். பூ கோரல்,
ஃபயர் கோரல், ப்ரெயின் கோரல், ஃபிங்கர் கோரல் என பல வகை கோரல்களும், கலர் கலரான மீன்கள்,
நாம் பார்த்திராத நிறங்களில், வடிவங்களில், உருவங்களில் பார்க்கப் பார்க்க பரவசமாக
இருந்தது. நீமோ, டோரி போன்ற மீன்கள் ரசிக்கும் படி இருந்தது. சிறு மீன்கள் ஓர் ஒழுக்கத்துடன்
கூட்டம் கூட்டமாக சேர்ந்து சென்று கூட்டமாகத் திரும்பும் அழகே அழகு.
மேலே சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் எல்லாரும் ரசித்தாலும், முதலில் சென்ற என் கணவர் மேலே வர விரும்பி ‘தம்ஸ் அப்’ முத்திரை காட்டி மேலே வந்து விட்டார். அனன்யா இன்னும் கடல் உள்ளே பரவச உலகத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அடுத்து உள்ளே சென்ற நான் முதலில் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டு வந்தேன். நடுவில் வாயிலிருந்த ட்யூப் வெளிவந்ததை உணரவில்லை. பயிர்சியாளர்கள் சொல்வது போல் வாயிலிருந்த ட்யூபை மெல்ல பல்லால் கடித்தபடி வைத்திருக்க வேண்டும். அதன் மூலமாகத் தான் சுவாசிக்க வேண்டும். அது வெளியில் வராமல் வாயால் பிடித்துக் கொள்ள வேண்டும். தவறி வெளி வந்து விட்டால் உடனேயே அதனை மீண்டும் வாயில் பொருத்தி, அதில் உள்ள பட்டனை அழுத்தி, வாயில் சென்ற நீரினை வெளியேற்ற வேண்டும். கண்டிப்பாக பீதி அடையத் தேவையில்லை. ஆனால் நான் பயந்துவிட்டேன். கடல் நீர் வாயில் சென்றதும் சற்றே திணறி விட்டேன். ஆனால், பயிற்சியாளர் உடனே என் வாயில் ட்யூபைப் பொருத்தி பட்டனை அழுத்தி வாயில் சென்ற நீரை வெளியில் எடுத்துவிட்டார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். என் மகளுடன் கடலுக்கடியில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். அதிக ஆழத்திற்கு செல்லுமுன்மேலே வர விரும்பி வந்துவிட்டாலும் கடலுக்கடியில் இருந்த வரை ஒரு புது உலகத்தில் உலவிய உற்சாகம் உள்ளத்தை நிறைத்திருந்தது.
இந்த அனுபவத்தை எங்களால் மறக்கவே முடியாது.
முழு 25 நிமிடங்களையும் நன்கு அனுபவித்து ரசித்து கண்களுக்கான விருந்தை ருசித்து மீனோடு
மீனாய் நீந்தித் திளைத்தாள் அனன்யா. அவளது அனுபவத்தைக் கேட்கக் கேட்க கண்டிப்பாக மீண்டும்
ஒரு முறை ஸ்கூபா டைவிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்குகிறது. அவள் அதிக பட்கமாக 12 மீட்டர் ஆழம் வரை சென்று பல
விசித்திர கடல் உயிரினங்களையும், கடல் குகும்பர் என்னும் வெள்ளரிக்காய் போன்ற கடல்
உயிரினம், வெள்ளை கருப்பு நிறத்தில் கடல் பாம்பு
போன்றவற்றையும் பார்த்திருக்கிறாள். அடியில் வெள்ளை வெளேர் என்ற மணலில் கால்
பதித்திருக்கிறாள்.
எங்களுடன் வந்தவர்களும் ஸ்கூபா டைவிங்
செய்து முடித்ததும், எங்கள் பயிற்சியாளர்களுடன் எல்லாரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்
கொண்டு கரையை நோக்கி வந்தோம்.
பரத் பூர் பீச்சில் நன்கு என்ஜாய் செய்துவிட்டு அங்கிருந்து 5 மணிக்கு லக்ஷ்மண்பூர் பீச் சென்றோம் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க. சூரிய உதயமும், அஸ்தமனமும் நிதம் நிதம் நடந்தாலும் நம் அன்றாட வாழ்வில் அதை நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால் விடுமுறையில் கடற்கரையில் அதனைக் கண்டு களிக்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதவில்லை.
அங்கிருந்து எங்கள் ‘கோரல் கார்டன்’
ரெசார்ட்டில் நன்கு சூடான நீரில் நீராடி ரெடியாகி காலாற உலாவப் புறப்பட்டோம்.
அருகில் ஒரு பிள்ளையார் கோவில், அதன் அருகே முருகன் கோவில், சிறியதாய் நேர்த்தியாய் இருந்தது. அங்கு பூஜை நடந்து கொண்டிருந்த்தது. நல்ல கும்பல். அந்த ஊர் மக்களோடு மக்களாக நாங்களும் அமர்ந்து பூஜையில் கலந்து கொண்டோம். நாங்கள் பார்த்தவரை அந்தமான் தீவில் பலர் ஐயப்ப மலைக்கு மாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். தென் இந்தியர்கள் மட்டுமில்லாமல் பெங்காலிகளும் மாலை போட்டுக் கொண்டிருந்தது ஆச்சர்யம் அளித்தது. சென்ற இடத்தில் கோவிலில் 18 படி க்கும் விளக்கேற்றி தமிழில் பாடி ஐயப்ப பூஜை செய்ததைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனோம்.
அந்தக் கோவிலில் இருக்கும் போது எங்கள்
மகளுக்கு MBBS முதலாம் ஆண்டுத் தேர்வு முடிவுகள் ஆன் லைனில் அறிவிக்கப்பட்டது. அவள்
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கடவுளின் ஆசிர்வாதத்துடன்
கோவிலில் பொங்கல், சுண்டல் பிரசாதமும் கிடைக்கப் பெற்று ரூமுக்குத் திரும்பினோம். ரூம்
சர்விஸில் சப்பாத்தி ஆர்டர் செய்து டின்னரை முடித்துவிட்டு உறங்கினோம்.
நாள் நான்கு:
20 ஆம் தேதி அதிகாலையில் நீல் தீவின் அழகை
ரசிக்க நானும் என் கணவரும் ‘கோரல் கார்டன்’
லிருந்து புறப்பட்டோம். விடிந்தும் விடியாத
அரை இருளில் கதை பேசியபடி நடப்பது ரம்மியமாக இருந்தது. லேசாக ஆரம்பித்த தூறல் கொஞ்சம்
கொஞ்சமாய் அதிகரிக்க மார்க்கெட் வாசலில் ஒதுங்கும் படி ஆனது. அதனால் நீல் தீவின் உள்ளூர்
காய்கறி மார்க்கெட்டில் நுழைந்து அந்த ஊரில் விளைந்த ‘கதலி கேலா’ வகை வாழைப் பழத்தையும்
அங்கு விளைந்த வெள்ளரிக்காயையும் வாங்கிக் கொண்டு ரூமுக்குத் திரும்பினோம்.
ரெசார்ட்டிலிருந்து காம்ப்ளிமெண்ட்ரி
ப்ரேக் ஃபாஸ்ட்டை முடித்துக் கொண்டு 8 மணிக்கு செக்அவுட் செய்தோம். நீல் தீவிலிருந்து மீண்டும் போர்ட் ப்ளேர் செல்ல
எங்களது க்ருஸ் 12.30 மணிக்குத் தான் என்பதால் நாங்கள் காரிலேயே எங்கள் பெட்டிகளை வைத்துவிட்டு நேட்சுரல் பிரிட்ஜ் (Natural Bridge) எனப்படும் இயற்கையாக ஏற்பட்ட பாலத்தைப்
பார்க்கச் சென்றோம். ட்ரைவரிடம் விசாரித்ததில் அவர் தண்ணீரில் செல்லத் தேவையில்லை அதனால்
ஷூ அணிந்து செல்லலாம் என்று தவறாக தகவல் கொடுத்ததால் நான் ஷு அணிந்து கொண்டேன். அனன்யாவும்
என் கணவரும் செப்பல் அணிந்து வந்தது சௌகரியமாகப் போனது. அங்கு செல்லும் வழியில் ஜூஸ்
கடைகள், முத்து நகைகள், சங்கு, உடைகள் போன்றவற்றை
விற்கும் கடைகள் இருந்தன. நாங்கள் சங்கு, கீ
செயின் போன்ற சின்ன சின்ன பொருட்களை வாங்கினோம். அங்கிருந்த சில கடைகளில் செருப்புகள்
வாடகைக்குக் கொடுக்கிறார்கள். நம் ஷூ வை அங்கு விட்டுவிட்டு அங்கிருந்து நமக்குத் தோதான
செப்பலை அணிந்து கொண்டு திரும்பி வரும் போது அதை திருப்பிக் கொடுத்துவிட்டு அவர்கள்
விற்கும் ஏதாவது ஒரு பொருளை நாம் வாங்கலாம். அப்படி ஓர் கடையில் நான் என் ஷூ வைத்துவிட்டு
ஒரு செருப்பை அணிந்து கொண்டேன்.
மிகவும் அழகான, அற்புதமான, அருமையான இடம் இந்த ‘நேட்சுரல் பிரிட்ஜ்’. அலைகள் தொடந்து வந்து அடித்ததனால் கோரல் பாறையில் தானாக ஏற்பட்ட குகை போன்ற அமைப்பினால் இயற்கையாக அமைந்த பாலம்.. இங்கு காலாற நடந்து, மரகத நிறத்தில் மின்னும் கடலை அதில் நீந்தும் அழகான மீன்கள், சூரிய ஓளி, இயற்கை அழகு இவற்றை ரசித்து படம் எடுத்துக் கொண்டு, அங்கிருக்கும் கோரல்கள், எல்லாவற்றையும் பார்த்த படி நடந்தோம். கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் போது பார்த்த பலவற்றை இங்கு காணக் கிடைத்தது அற்புதமான அனுபவம்.
நேட்சுரல் பிரிட்ஜ்
அங்கிருந்து கிளம்பி திரும்பும் போகும் போது என் ஷூவை அணிந்து கொண்டு ஆம் பன்னா, லெமன் ஜூஸ், அந்த ஊர் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து துறைமுகத்தை நோக்கி கிளம்பினோம்.
எங்களது க்ரூஸ் ITT 12.30 மணிக்கு நீல் தீவை விட்டு கிளம்பியது. மீண்டும் கடல் அழகை கண்ணிலும் மனதிலும் கேமராவிலும் படம் பிடித்தபடி வாங்கி வந்த வெள்ளரி மற்றும் பழத்தையயும் ருசித்தபடி போர்ட் ப்ளேரை 2 மணிக்கு அடைந்தோம். எங்களது ஹோட்டல் ‘மரீனா மெனார்’ க்கு சென்று அவர்களது ரெஸ்டாரெண்ட்டான டெலிஷியா வில் லஞ்ச் சாப்பிட்டோம் (Delicia) .எங்களுக்கு ஷாப்பிங்க் டே அன்று. எனவே நான்கு மணிக்கு எங்களை பிக் அப் செய்ய கார் வந்தது. அங்கு ‘மீனா ஸ்டோர்’ என்னும் கடைக்கு அழைத்துச் சென்றார் எங்கள் டிரைவர். அங்கு ஒரு முத்து செட் சில தோடுகள், ஹேர் க்ளிப்ஸ், குங்குமச் சிமிழ் போன்ற பொருட்களை வாங்கினோம். அடுத்ததாக சஹாரிகா என்னும் ஸ்டோருக்கு அழைத்துச் சென்றார் ட்ரைவர். அங்கு ப்ரேஸ்லெட் மற்றும் நண்பர்களுக்கு சில பரிசுப் பொருள்கள் வாங்கினோம்.
21 ஆம் தேதி காலை 9 மணிக்கு ‘ராஸ் தீவு’ (Ross island) க்கு எங்களை கூட்டிச் செல்ல கார் வந்தது. நாங்கள் குளித்து காலை உணவு முடித்துக் காத்திருந்தோம். போர்ட் ப்ளேர் துறைமுகத்திலிருந்து 15 நிமிடம் லோக்கல் படகில் பயணம். ஒரு படகில் 8 பேரை ஏற்றிக் கொள்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒரு லைஃப் கார்ட் கூட வருகிறார். எல்லாரும் கண்டிப்பாக லைஃப் ஜாக்கெட் அணிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியில் ‘ராஸ் தீவு’ தான் அந்தமானின் தலைநகரமாக இருந்திருக்கிறது. மிகவும் அழகான தீவு. கடல் ஆய்வாளர் ‘டேனியல் ராஸ்’ என்பவரின் பெயரால் ‘ராஸ் தீவு’ என்றழைக்கப்பட்ட இந்தத் தீவிற்கு 2018 ஆம் ஆண்டு ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு’ என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அந்த தீவில் நம்மை இறக்கிவிட்டு விட்டு ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு மீண்டும் படகு இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார்கள். அந்த அழகிய சிறிய தீவினை நடந்து சென்று பார்த்து படம் பிடிக்க ஒரு மணி நேரம் போதாது என்பதனால் படகில் எங்களுடன் வந்த நான்கு பேரும் நாங்கள் மூவரும் சேர்ந்து ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டோம். தலா 100ரூ என்று பேசி நாங்கள் அதில் அமர்ந்து பயணித்தபடி தீவினை வலம் வந்தோம். ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்டு, நமது சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னமாக, வரலாற்றுச் சின்னமாக, இடிபாடுகளுடன் இருந்தாலும் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்தத் தீவில் ஆங்கிலேயர்களின் அரசாங்க அலுவலகங்கள், பழமையான சர்ச், டென்னிஸ் கோர்ட், சீஃப் கமிஷ்னருடைய வீடு, ஸ்விம்மிங் பூல் போன்றவை இருந்ததற்கான அடையாளங்களை வண்டியிலிருந்த படியே பார்த்தபடி, படமெடுத்தபடி சென்றோம். அந்தக் காலத்திலேயே தண்ணீரை சுத்தப் படுத்திக் குடிப்பதற்காக வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளேண்ட் (Water treatment plant) அமைத்திருந்திருக்கின்றனர். லைட் ஹௌஸ் அருகில் நாம் இறங்கிக் கொண்டு வ்யூ பாயிண்ட் மற்றும் லைட் ஹௌஸ் பார்க்க படி ஏறி மேலே சென்றோம். அற்புதமான வ்யூ. இந்த தீவில் நிறைய மான்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இங்கு இரவில் யாரும் தங்குவதில்லை. மாலை ஆறு மணிக்குள் எல்லா சுற்றுலா பயணிகளையும் கூட்டிக் கொண்டு கடைசி படகு புறப்பட்டு விடுகிறது. இந்தத் தீவிற்குள் காலாற நடந்து ஒவ்வொரு இடமாக ரசிக்க ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? என்னும் நிலையில் ஒரு மணி நேரம் கண்டிப்பாகப் போதவில்லை.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு
‘ராஸ் தீவு’ இல்லை ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ தீவிலிருந்து நாங்கள் வந்த படகிலேயே புறப்பட்டு ‘நார்த் பே’ தீவிற்கு சென்றோம்.
நார்த் பே தீவில் ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்ளிங், கடலுக்கடியில் நடந்து கடல் உயிரினங்களை ரசிக்கும் சீ வாக், ‘டால்ஃபின் ரைட்’, பேரா சையிலிங்க் (Para sailing) போன்ற பல நீர் விளையாட்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது இரண்டை தேர்ந்தெடுத்து போர்ட் ப்ளேர் துறைமுகத்திலேயே நாம் பணம் கட்டிவிட வேண்டும். நாங்கள் தேர்ந்தெடுத்தது ஸ்நார்க்ளிங் மற்றும் ‘டால்ஃபின் ரைட்’.
‘ஸ்நார்க்ளிங்’ ஸ்கூபா டைவிங் உடைய
குழந்தை வடிவம் என்று சொல்லலாம். ஸ்கூபா டைவிங் செய்ய முடியாதவர்கள், பயப்படுபவர்கள்
இதை கண்டிப்பாக செய்யலாம். மாற்று உடை எடுத்துச் செல்லாதவர்களுக்காகவே அங்கு கடைகளில்
வாடகைக்கு அவரவர் அளவுக்கு உடைகள் வழங்குகிறார்கள். நாங்களும் அங்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டோம்.
இதற்கு முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளவேண்டும். மூக்கின் வழியே எப்பொழுதும் போல் மூச்சு
விட முடிகிறது என்பதால் தண்ணீருக்குள் எளிதாக பயணிக்க முடிகிறது. நம் கையை பயிற்சியாளர்
பிடித்துக் கொண்டு வழி நடத்திச் செல்கிறார்.
பல வித கோரல்களைக் கண்டு களித்தோம். மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் வித விதமாய் கலர் கலராய் நம்மை மெல்ல முத்தமிட்டபடி நம் கூடவே நீந்தி
வருகின்றன. கடலுக்கடியில் ஃபோட்டோ எடுக்க ஒருவருக்கு
தனியாக பணம் 500 ரூ கட்ட வேண்டும். வேண்டாம் என்று நினைத்திருந்தோம் ஆனால் என் கணவரும்
அனன்யாவும் முடிவெடுத்து என்னை படம் எடுக்க பணம் கட்டிவிட்டு வந்தது மிகவும் ஆச்சர்யமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது. இந்த பயணத்தின் அழகை
அற்புதத்தை பறை சாற்றும் விதமாக நினைவுச் சின்னமாக
என்றென்றும் இது எங்களுடன் இருக்கும்.
‘டால்ஃபின் ரைட்’, அதாவது டால்ஃபின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஃபெர்ரி (Ferry) யில் ஆழ் கடலில் ஒர் உலா. அந்த ஃபெர்ரியின் உள் தளத்தில், நடுவில் பெரிய மாக்னிஃபையிங் கண்ணாடி (Magnifying glass) பதித்துள்ளார்கள். அதைச் சுற்றி 15 பேர் உட்கார்ந்து ஆழ் கடல் உயிரினங்களை மிக அருகில் காண முடிகிறது, தண்ணீர் கால் வைக்காமல் நனையாமல் கடல் வாழ் உயிரினங்களை ரசிக்க அவற்றின் உலகத்தை தரிசிக்க ஓர் அறிய வாய்ப்பு. கடல் உலகம் தனி உலகம் அதனை காண்பது பரவசமான அனுபவம்.
கடல் உலகம் சுற்றுப் புறச் சூழலுக்கு செய்யும் பணி மிக மிக அரிதானது. அதனை மனிதர்களாகிய
நாம் எவ்வளவு பாது காக்கிறோமோ அத்தனை நம் சுற்றுப் புழச் சூழலுக்கு நல்லது என்பதை நாம்
உணர ஓர் அறிய வாய்ப்பு.
நீல் தீவில் நீர் மிகவும் தெள்ளத் தெளிவாக
இருக்கிறது. அதனால் கடல் உலகம் கிரிஸ்டல் கிளியராக நம் கண் முன் தெள்ளத் தெளிவாகத்
தெரிகிறது. ‘நார்த் பே’ தீவில் நாங்கள் பார்த்த வரை நீல் தீவு அளவிற்கு தெளிவாக இல்லை
என்பதைத் தவிர குறை சொல்ல ஒன்றும் இல்லை. அந்தத்
தீவில் வெஜிடேரியன் மட்டும் உள்ள ஹோட்டல் எதுவும் இல்லை. அங்கிருந்து கிளம்பி படகில்
போர்ட் ப்ளேர் தீவிற்கு வந்த நாங்கள் 3.40 க்கு அதே ‘ராஜஸ்தான் ரசோய்’ சென்று லேட்
லஞ்ச் சாக சப்பாத்தி சப்ஜி சாப்பிட்டோம்.
ஹோட்டலுக்கு வந்து உடை மாற்றிக் கொண்டு
காரில் ‘ஜாகர்ஸ் பார்க்’ (Joggers park) என்னும் 'பார்க்' கிற்கு சென்றோம். இந்தப் பார்க் மிகவும் அழகான உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
அங்கிருந்து ஊரின் அழகை ரசிக்க முடிகிறது, கடல், நார்த் பே தீவு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’
தீவு இவற்றை ‘ஜாகர்ஸ் பார்க்’ கிலிருந்து பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
இந்தப் பார்க்கின் தனி சிறப்பு என்னவென்றால்
அந்திருந்து வீர் சவர்ககர் இன்டர் நேஷனல் விமான நிலையத்தின் ‘ரன் வே’ இந்த பார்க் கிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இங்கிருந்து விமானம் பறக்கத்
துவங்குவதையும், தரை இறங்குவதையும் கண்டு களிக்க முடிகிறது. நாங்கள் அந்தக் காட்சியைக்
கண்ணிலும் காமிராவிலும் படம் பிடித்து மகிழ்ந்தோம்.
ஸோனல் ஆந்ரோபொலாஜிகல் மியூசியம்
ஒரு மணி நேரம் மியூசியத்தைச் சுற்றி
ரசித்து விட்டு 11 மணிக்கு மீண்டும் அனு அக்கா வீட்டிற்கு சென்றோம். மிகவும் ஆசையாக எங்களுக்காக காத்திருந்தார் அனு அக்கா.
பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களது வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு வெளிநாட்டில்
இருக்கும் அவர்களது குழந்தைகளுடன் பேசி என்று மிகவும் உற்சாகமாக பொழுது கழிந்தது. புறப்படும்
நேரமும் வந்தது. அக்கா எங்களை சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும் என்று ஆசை ஆசையாக
எங்களுக்குப் பரிமாற பசி இல்லை என்றாலும் ருசித்துச் சாப்பிட்டோம். அனு அக்கா, என் அம்மா பெரியம்மா, அக்கா, தங்கை, எனக்கு
என்று எல்லாருக்கும் புடவை வைத்துக் கொடுத்து அனன்யாவுக்கு ட்ரெஸ் மெடீரியலும் கொடுத்து
திக்கு முக்காட வைத்து விட்டார். அவரின் அன்பினால் மறுக்கவே முடியவில்லை. அங்கிருந்து
கிளம்பி ஹோட்டல் வந்து லக்கேஜஸ் எடுத்துக் கொண்டு அனு அக்கா கொடுத்த எல்லாவற்றையும்
எப்படியோ வெற்றிகரமாக பெட்டியில் வைத்து விட்டோம். போர்ட் ப்ளேர் விமான நிலையம் நோக்கி எங்கள் கார்
கிளம்பி விட்டது. அற்புதமான நினைவுகளுடன் அந்தமானுக்கு
பை பை சொல்லிவிட்டோம். கண்டிப்பாக மீண்டும் வருவோம்.
என்
பார்வையில் அந்தமான்:
மிகவும் தூய்மையான இடம்.
பொல்யூஷன் (Pollution) அதிகம் இல்லை.
பிச்சை எடுப்பவர்களே கண்ணில் படவில்லை. பிச்சைக் காரர்களே அங்கு இல்லை என்று பிறகு அறிநதோம். ஏழ்மையில் இருப்பவர்கள் இருந்தாலும் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இல்லை.
கணவனை இழந்த பல பெண்கள் கஷ்டப்பட்டாலும் அந்தமானை விட்டு வருவதில்லை.
அன்பான நேர்மையான மக்கள். ஆட்டோ டிரைவரிலிருந்து
யாரும் டிமேண்ட் செய்வதில்லை. எல்லா சர்விஸ்களும்
சரியான நேரத்தைக் கடை பிடிக்கின்றன.
ஹிங்தி பிரதானமாகப் பேசப்படுகிறது.
நிறைய தமிழ்காரர்கள் இருக்கிறார்கள். தெலுகு, பெங்காலி எல்லாரும் இருக்கிறார்கள். எல்லாருமே
ஹிந்தி பேசுகிறார்கள்.
இங்கு பலர் ஐயப்ப மலைக்கு மாலை போட்டுக்கொள்கிறார்கள்.
தென் இந்தியர்கள் மட்டுமில்லாமல் அந்தமான்
தீவுகளில் வசிக்கும் 'பெங்காலி'க்காரர்களும் மலைக்கு மாலை போட்டுக் கொள்கிறார்கள். பிள்ளையார்
முருகன் கோவில்கள் ரொம்ப பிரசித்தம்.
கோவில்களில் முறைப்படி எல்லா பூஜைகளும் நடக்கின்றன. பிரசங்கங்களும், பல நிகழ்ச்சிகளும் நடந்தபடி இருக்கின்றன. இங்கு சாதி, மத, மொழி பேதங்களில்லை என்பது சிறப்பு.
நிறைய மரங்கள் இருக்கின்றன. தென்னை மரம் பிரதானமாக இருக்கிறது. இளநீர் 50 ரூ. அங்கங்கே நாங்கள் இளநீர் வாங்கி தாக சாந்தி செய்து கொண்டோம்.
இங்கு விவசாயமோ எந்த இண்டஸ்ட்ரியுமோ
இல்லை. ஆங்காங்கே வாழை மற்றும் சில செடி கொடிகள் காணப்பட்டாலும் இயற்கை சீற்றத்தின்
காரணமாக அவை வேறூன்றி தாங்கிப் பிழைப்பது மிகவும் அரிதாகிறது. எனவே அந்தமானில் விவசாயம்
செய்வது கடினம்.
கடல் சார்ந்து தான் மக்கள் வாழ்கிறார்கள்.
எல்லா பொருட்களும் இந்தியாவின் பிரதான இடங்களிலிருந்து கப்பலில் இங்கு கொண்டு வரப்
படுகின்றன. அதனால் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக சாப்பாட்டுப்
பொருட்கள் விலை அதிகம்.
டூரிஸம் மிகவும் நன்கு செயல்படுவதால்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அங்கிருந்தவர்களுடன் பேசியதிலிருந்து
தெரிந்தவை:
கார் டிரைவர்களிடம் உரையாடியதில் அந்தமானில்
ஸ்பீட் லிமிட்டை யாரும் தாண்டுவதில்லை. இரவில் பயமின்றி உலா வரலாம். யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
நார்த் பே தீவில் துணிக்கடை வைத்திருக்கும்
தெலுகு பெண்மணியிடம் உரையாடியதில் அவர்கள் சொன்னது, அவரவர் உழைக்கிறோம். ஏமாற்றிப்
பிழைப்பதில்லை. என் இரண்டு பெண்ணுக்கும் இங்கேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன்.
அப்பப்போ ஊருக்குப் போய் உறவிக்காரங்களைப் பார்ப்போம். ஆனா இங்க தவிர எங்கயுமே எங்களுக்கு
சரியா வராது என்றார்.
அந்தத் தீவில் யாரும் இரவில் தங்க முடியாது.
இந்தத் துணிகள் சாமான்களை ஒவ்வொரு முறையும் மாலையில் படகில் கொண்டு செல்வீர்களா? மீண்டும்
காலையில் கொண்டு வருவீர்களா? என்று கேட்டோம்.
இல்லைமா. இங்க இருக்கற பெட்டீல வெச்சு
பூட்டிடுவோம். யாரும் எடுக்க மாட்டாங்க. நம்பி இங்க வாழலாம் என்றார்.
படகில் லைஃப் கார்ட் எங்களுடன் பேசியபடி
வந்தார். ஏகாந்தமான வேலை என்னோடது. கடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கேயிருந்து நீந்தியே
என்னால் கரைக்கு போக முடியும். இந்தத் தீவிலிருந்த்து
கடைசி ஆள் போகும் வரை இருந்து எல்லாரையும் பாதுகாப்பா கரை சேர்த்து விட்டுத்தான்
நான் வீட்டுக்குப் போக வேண்டும். 2010 ல் படகு
ஒன்று கவிழ்ந்து உயிர் சேதம் ஏற்பட்டத்திலிருந்து
பயணிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு பொறுப்பு அதிகம் என்றார்.
வருடத்திற்கு இரண்டு மாதங்கள் ஊருக்கு
செல்வோம். இங்கிருந்து போகும் போது விமானத்தில் பயணிப்போம். திரும்பி வரும் போது கப்பலில்
வருவோம் ஏனென்றால் வருடத்திற்குத் தேவையான மசால் பொருட்கள், தானியங்கள், சில உணவுப்
பொருட்களை எடுத்து வந்து விடுவோம். எந்தப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலும்
நாங்கள் கொண்டு வரும் மசால் பொருட்களை என் அம்மா யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
ஏனென்றால் அவை மிகவும் விலை அதிகம் இங்கு என்றார்.
அந்தமானில் ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில்
மழை அதிகம். அந்த மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம். அப்போது
அங்கு செல்வது பாதுகாப்பு. தெரிந்தவரை மற்ற
நாடுகளிலிருந்து அந்தமானுக்கு நேரடியாக விமான சர்விஸ் எதுவும் இல்லை. இந்தியா வந்து
தான் அந்தமானுக்கு செல்ல வேண்டும்.




.jpeg)
.jpeg)












.png)


.jpg)
.jpg)
No comments:
Post a Comment