Wednesday, September 18, 2024

எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

 எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா:

எங்கள் அம்மாவின் அக்கா 'சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா' எல்லாராலும் 'பாமா' என்று அன்பாய் அழைக்கப்பட்டவர்.   ஒரே சகோதரியான என் அம்மா 'பவானி'க்கும்   நான்கு சகோதரர்களுக்கும் அக்காவாய் பிறந்து கல்வி, கலை, பாட்டு எல்லாவற்றிலும் கை தேர்ந்தவர். அன்புக்கும் அறிவுக்கும் திறமைக்கும் அவரை உதாரணமாகச் சொல்லுவார் என் அம்மா.
எல்லா மாமாக்களுக்கும் பாமா பெரியம்மா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.  முடிந்த போதெல்லாம் அவர்கள் பெரியம்மாவைப் பார்த்து நலம் விசாரித்து வருவது வழக்கம்.


எங்களின் உலகப் புகழ் பெற்ற ஆர்கிடெக்ட் மாமா இன்றுவரை தன் மேடை பேச்சுகளில்,  "என் முதல் குரு, என் அக்கா பாமா தான்" என்று கூறி, பாமா பெரியம்மாவின் புகைப்படத்தை காண்பித்த பிறகு  தான் தன் உரையைத் தொடங்குகிறார்.  இதனை நான் என் கண்களால் கண்டிருக்கிறேன். 
  . 

எங்கள் கடைசி மாமாவுக்கு, இரண்டாவது தாயாகவே இருந்திருக்கிறார் எங்கள் பாமா பெரியம்மா. என் தாய் பவானிக்கும் தாயாக, அன்பு சகோதரியாக, உற்ற தோழியாக, ஆசானாக என்று எல்லாமுமாக இருந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து ஸ்லோகங்கள் கற்றதும், பாடல்கள் பயின்றதும், சமஸ்க்ருதம் பயின்றதும் இன்றும் எங்கள் அம்மாவின் நினைவில். பூ வாங்கினால் பாவானிக்கு தலை முடி அதிகம் என்று நிறைய பூவை அம்மாவிற்கு வைத்து அழகு பார்ப்பாராம் பெரியம்மா. 


பெரியம்மா மிக நளினமாக நடனம் ஆடுவார். கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் திறமையும் கொண்டவர். புத்தகங்கள் அதிகம் படிப்பவர். ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை மிக்கவர். உலக அறிவு அவருக்கு மிக அதிகம். ஆங்கிலேய ராணி பற்றியும் தெரியும். அமெரிக்காவின் அரசியலும் தெரியும். வால்மீகி இராமாயணமும் தெரியும். கம்பராமாயணமும் தெரியும்.

எங்கள் அம்மா, பெரியம்மா இருவருமே  திறமைசாலிகள்.  வாய்ப்பு அமைந்திருந்தால் அவர்கள் உலகம் போற்றும் தலைவர்களாக ஏதாவது ஒரு துறையில் பிரகாசித்திருப்பார்கள் என்பது எங்கள் குடும்பத்தாரின் ஒருங்கிணைந்த கருத்து.  எதை செய்தாலும் அதில் நேர்த்தி,  கலை நயம் இருக்கும். பிறருக்கு உதவுவதிலும் தன்னலமில்லாமல் குடும்பத்திற்காக உழைத்து சுற்றத்தினை அரவணைத்துச் செல்வதிலும் இவர்கள் இருவருக்கும் நிகர் எவருமே இல்லை.

எங்கள் பெரியம்மாவுக்கும் அம்மாவுக்கும் கிட்டத்தட்ட 5 வயது வித்தியாசமிருந்தாலும் இருவரும்  இரட்டைப் பிறவிகள் மாதிரி தான் இருப்பார்கள்.  80 வயதிற்கு மேலும் சுறுசுறுப்பாய் திகழ்ந்து இளமையை தக்க வைத்து இளைஞர்களுக்கு கடும் போட்டி கொடுப்பதில் இவர்களுக்கு இணை யாரும் இல்லை. 

எல்லாருக்கும் பிரியமான எங்கள் பெரியம்மா 29/08/2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கிருஷ்ண பக்ஷ ஏகாதசி அன்று  சிவலோக பிராப்தி அடைந்ததார் என்பதை அறிந்ததும் அவரது பிரிவை எங்கள் யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

எங்கள் அம்மாவுக்கும் பெரிய மாமாவுக்கும்  இந்த துயரச் செய்தியை மறுநாள் காலை சொல்வது தான் சரி என்று நாங்கள் எல்லாரும் ஒரு மனதாக முடிவு செய்தோம்.  மறுநாள் தோலைபேசியில் ,சொன்னதும் அம்மா அழுததும் நாள் முழுவதும் அழுதபடியே இருந்ததாகச் சொன்னதைக் கேட்கவும் மிகவும் வேதனையாக இருந்தது எங்களுக்கு.

என் அக்கா லக்ஷ்மி, நான் மாதங்கி, என் தங்கை தரங்கிணியோடு எங்கள் அப்பா ராஜாராம் அவர்களுக்கும் எங்கள் அம்மா பவானியின் உணர்வுகளும் வேதனையும் புரியாமலில்லை. 

ஆறு மாதம் முன்பு என் அக்காவின் பெண் திருமணத்தில் எங்கள் அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்த அனைவருமே, அதிலும் தெரியாதவர்கள் இரட்டையர்கள் என்றே நினைத்தார்களாம். இருவரும் பேசி வைத்துக் கொள்ளாமலேயே ஒரே நிறத்தில் புடவை கட்டி வந்ததும், அதை விட, இருவரும் இடுப்பில் கைக்குட்டையை சொருகிய விதமும் அதையும் விட கைகுட்டையின் நிறமும் டிசைனும் ஒன்றாகவே இருந்ததும் அனைவரையும் கவர்ந்தது. 





இந்தக் காலம் போல் தினமும் உரையாடவோ, பார்க்கவோ, ஃபோன் இன்டர்நெட் வசதி இல்லாத காலத்திலும் அதிகம் பயணம் செய்து நேரில் சந்திக்க முடியாத காலத்திலும் சகோதரிகள் இருவரும் அன்னியோன்யமாகப் பழகியதும் டெலிபதி போல் ஒருவர் மாதிரியே  மனம், குணம்,  நற் சிந்தனை, இறை பக்தி என்று, மற்றவரும் இருப்பதைப் பார்க்கவும் கேட்கவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாட்டு நடப்பை அறிந்து கொள்ள செய்தித் தாள் வாசிப்பதும் செய்திகள் கேட்பதும் தவிர வேறு எதையுமே இவர்கள் விரும்பிப் பார்ப்பதில்லை.  அனாவசியமாக எதைப் பற்றியும் பேசாமல், இருவரும் மனம் ஒன்றி ஸ்லோகம், திருக்குறள், இராமாயணம் போன்றவற்றை நோட்டில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் இருவர்  கை எழுத்தும் ஒரே மாதிரி இருப்பதும் அடுத்த ஆச்சர்யம்.  


உயிருக்குயிரான அந்த அக்கா கீழே விழுந்து கொஞ்சம் முடியாமல் இருக்கிறார் என்பதை  அறிந்ததிலிருந்தே  அம்மா அவரைப் பார்க்க விரும்பினார்.

எங்கள் அக்கா லக்ஷ்மி,  பெரியம்மாவைப் பார்க்க சென்றார். பெரியம்மா அக்காவிடம் நன்கு பேசி நலம் விசாரித்ததோடு,  எங்கள் அம்மாவைப்  தாம் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார். அவர்  தான் கனவில் கண்டதை உண்மை என்று நினைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். 


அந்த சமயத்தில் அம்மாவிற்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாலும் எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருந்த பெரியம்மாவை இப்பொழுதுஅவர் படுத்த படி இருப்பதைப் பார்த்தால் அம்மாவின் மனமும் உடலும் இன்னும் பாதிக்கும் என்று நாங்கள் நினைத்தோம்/ வரலக்ஷ்மி  நோன்பு, ஆவிணி அவிட்டம் என்று தொடர்ந்து பண்டிகைகள் வந்ததால் அதெல்லாம் முடிந்த மறு வாரம் கூட்டிச் செல்லலாம் என்றிருந்த வேளையில் மிகவும் சிரமப் படாமல் தன் கடமைகளை அற்புதமாய் நிறைவேற்றி விட்ட திருப்தியில் எங்கள் அன்பிற்குரிய பெரியம்மா இயற்கை எய்தினார். 

பெரியம்மாவின் பையன் எங்கள் எல்லாருக்கும் அண்ணாவான வாசு அண்ணாவும் அவரது மனைவியும் எங்கள் மன்னியுமான இராஜேஸ்வரியும், அருகிலேயே வசிக்கும் எங்கள் சகோதரி ஸ்ரீலலிதாவும் அவரது கணவரும் எங்கள் அத்திம்பேருமான இராமமூர்த்தி அவர்களும் பெரியம்மாவை சிறப்பாக பார்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவரது இறுதிச் சடங்குகளையும் செய்ய வேண்டிய முறைகளையும் சிரத்தையாகச் செய்தனர்.  

எங்கள் சின்ன மாமாவும் மாமியும் உடனேயே சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். மற்ற எல்லாருமே  80 வயதுக்கு மேலானவர்கள் (octogenarians) என்பதனால்  நாங்கள் எல்லாரும் பேசி இப்பொழுது கூட்டிச் செல்வது உசிதமல்ல என்று முடிவு செய்திருந்தோம்.

எங்கள் 80 வயதைக் கடந்த என்றும் இளமையான எங்கள் அப்பாவும் அம்மாவும் மகாதானபுரம் என்னும் கிராமத்தில் தனியாக  இருப்பது மட்டுமில்லாமல்  விவசாய வேலைகள், ஊராருக்கு உதவுதல், ட்ரஸ்ட் வேலைகள், கணக்கு வழக்குகள் என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருப்பதையே விரும்புவதால் அவர்களால் எங்களுடன் வந்து எங்கள் ஊரில்  ஒரு வாரத்துக்கு மேல் தங்க முடிவதில்லை. அதனால் நாங்கள் மூன்று சகோதரிகளும் எங்கள் துணைகளின் முழு ஒத்துழைப்புடன் முறை வைத்துக் கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக கிராமத்தில் தங்கி எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவது வழக்கம்.  

அது போல் விநாயகர் சதுர்த்தி அன்று நானும் என் கணவரும் கிராமத்திற்கு வந்திருந்தோம். அப்போது என் அம்மா என்னிடம் வாசு குழந்தையாக இருந்த போது நான் வளர்த்துள்ளேன். லக்ஷ்மிக்கும் ஸ்ரீலலிதாவுக்கும் நாள் கணக்கில் தான் வித்தியாசம். லக்ஷ்மியை பாமாவும் ஸ்ரீலலிதாவை நானும் மாறி மாறி தூக்கி வைத்துக் கொண்டு வளர்த்துள்ளோம். எல்லாரும் லஷ்மியை பாமாவின் குழந்தை என்றும் ஸ்ரீலலிதாவை என் குழந்தை என்றும்  சொல்வார்கள். பாமா போய்விட்டாள். அவளை இனி ஃபோட்டோவில் தான் பார்க்க முடியும். ஆனால் குழந்தைகள் வாசு மற்றும் ஸ்ரீலலிதாவிற்கு ஆதரவாக நான் போய் அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல விரும்புகிறேன். நீ என்னை கும்பகோணத்திற்கு கூட்டிக் கொண்டு செல்கிறாயா? என்று கேட்டார். அது மட்டுமில்லாமல் அண்ணாவுக்கும் மன்னிக்கும் புடவை வேஷ்டி எல்லாம் எடுத்து வைத்திருந்தார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அம்மாவுக்குத் தரிக்கவில்லை. என் அப்பாவுக்கும் அம்மாவின் துயரம் நன்கு புரிந்தது. அதனால் அவரும் மறுக்கவில்லை. என் கணவரும் அம்மா, அப்பா என்ன சொல்கிறார்களோ அதன் படி செய்  என்று கூறினார்.  எனவே நான் கிராமத்திலேயே தங்கிவிட என் கணவர் மட்டும் பெங்களூர் திரும்பினார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி கும்பகோணத்தில் எங்கள் பெரியம்மாவின் சுப ஸ்வீகாரம் என்னும் கிரேகியம் நடைபெறுவதாக எங்களுக்கு செய்தி வந்தது.  அதற்கு அம்மா அப்பா இருவரையும் கூட்டிச் செல்ல சகோதரிகள் மூவரும் திட்டமிட்டோம்.  இதை எப்படி நடைமுறைப் படுத்தப் போகிறோம். இது மிகவும் எமோஷனல் பயணம். என் சகோதரிகளுடன் இதைப் பற்றி நான் பகிர்ந்து கொள்ள இதை சரியாக செய்ய வேண்டுமே என்ற எண்ணம் எங்கள் எல்லார் மனதிலும் இருந்தது உண்மை.  இந்தத் திட்டத்தில் எங்களின் உடன் பிறவா சகோதரரும் எங்கள் அம்மா அப்பாவிற்கு உற்றதுணையும், எங்கள் கார் ஓட்டுனரும் எங்கள் பெற்றோர்களால் சிறு வயது முதற்கொண்டே வளர்க்கப் பட்டவருமான பெரியசாமியின் பங்கும் மிக மிக அதிகம்.  


எங்கள் அம்மாவும் அப்பாவும் மிகவும் பொறுமைசாலிகள். நிறைய பயணங்களை மேற்கொண்டவர்கள். முக்கியமாக அப்பா  பொது வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதால் வெளியூர் பயணங்கள் மீட்டிங் என்று எப்பொழுதும் பிஸியாக இருப்பவர், என்றாலும் அவசியம் இல்லை என்றால் கண்டிப்பாக வெளியில் எங்கும் தங்குவதை தவிர்த்துவிடுபவர். அம்மா வீட்டு வேலைகள், கணக்கு எழுதுதல், கம்ப்யூட்டரிலும் அக்கௌண்ட்ஸ் எழுதுவது மற்றும் தமிழில் கட்டுரைகள் அச்சடிப்பது போன்ற வேலைகளை வீட்டிலிருந்தபடி செய்பவர். மிகவும் முக்கியமான விழா, வைபவம் அல்லது சடங்கு என்றால் மட்டுமே கலந்து கொள்வார்.     வெகுதூரப் பயணங்கள் கும்பல் நிறைந்த இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை கண்டிப்பாக தவிர்த்து விடுபவர்.. அவரே விருப்பப்பட்டு கேட்கும் போது எங்களால் மறுக்க முடியவில்லை. இருவருமே தன்னால் முடிந்தால் மட்டுமே அதை செய்பவர்கள். அவர்கள் கொடுக்கும் தைரியம் தான் எங்கள் பலம் என்றாலும் இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு.  இதனை செவ்வனே செய்து முடிக்கவேண்டியது எங்கள் கடமை என்று உணர்ந்தேன் நான். 

நான் 6 ஆம் தேதியே எங்கள் ஊருக்கு வந்து விட்டதால். ஒவ்வொரு நாளும் அம்மாவிடம்  கேட்பேன், "அம்மா, ரெடி தானே? 10 ஆம் தேதி  கும்பகோணம் ப்ரொக்ராம் உண்டா? என்று அதற்கு அம்மா, "இன்று உடம்பு சரியாக இருக்கிறது. போகலாம் என்று தான் நினைக்கிறேன். நாளை சொல்கிறேன்", என்பார். அப்பாவோ, பாம் ஆயில் வெட்டுவதற்கு ஆள் வருகிறார்கள், நான் பெரியசாமி இரண்டு பேருமே இல்லை என்றால் வேலை சரியாக நடக்காது. அதற்கான சரியான ஏற்பாட்டை செய்யாமல் என்னால் தீர்மானமாக சொல்ல முடியாது என்கிறார்.  ஒருவழியாக் 8 ஆம் தேதி இருவரும் முடியும். கும்பகோணம் செல்லலாம் என்று பச்சைக் கொடி காட்டினர், மகாதானபுரத்திலிருந்து கும்பகோணம் 150 கி.மீ தொலைவில் உள்ளது. 

கும்பகோணம் தான் அக்கா லக்ஷ்மிக்கும் சொந்த ஊர்.   அங்கு புதிதாக வீடு கட்டி உள்ளனர் அக்காவும் அத்திம்பேரும்.  தற்சமயம் வேலை நிமித்தமாக அவர்கள்  நாகப்பட்டினத்தில் தங்கி இருக்கிறார்கள்.  தங்கை தரங்கிணி இருப்பது திருச்சியில். 

இவ்வளவு தூரம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு  போவதால் அங்கங்கு ரெஸ்ட் கொடுத்து கூட்டிச் செல்லுமாறு ப்ரொக்ராம் போட்டோம்.  அக்கா லக்ஷ்மி 9 ஆம் தேதி வரை பெங்களூரில் தன் மகளுடைய வீட்டில் இருந்தார். அவர் 9 ஆம் தேதி மாலை ட்ரெயினில் பெங்களூரிலிருந்து கிளம்பி 10 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கும்பகோணம் அடையுமாறு டிக்கெட் புக் செய்து கொண்டார். நானும் பெரியசாமியும் 9 ஆம் தேதி மாலை அம்மா அப்பாவுடன் காரில் கிளம்பி 50 கிமீ தொலைவிலுள்ள திருச்சியில் இருக்கும் தங்கை தரங்கிணி வீட்டிற்கு சென்றோம். அங்கு இரவு உணவு முடித்துவிட்டு அங்கேயே தங்கி விட்டோம்.  ஒரு படி நகர்ந்தாயிற்று.

10 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு குளித்துவிட்டு அம்மா, அப்பா, நான், தரங்கிணி, பெரியசாமியுடன்  திருச்சியிலிருந்து கிளம்பிவிட்டோம். தஞ்சாவூரில் A2B ல் நிறுத்தி,  சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம்.  அதுவரை நாங்கள் கும்பகோணம் வருவதாக வாசு அண்ணாவிடம் சொல்லவில்லை. அப்பொழுது லக்ஷ்மியிடமிருந்து ஃபோன் வந்தது.  அவள் கும்பகோணம் வந்து விட்டதாகவும் 8.30 மணிக்கு வாத்தியார் வருவதாக சொன்னதால் அவள் முன்பே பெரியம்மா அகத்திற்கு சென்றுவிடுவதாகவும் கூறினாள். அவளே நாங்கள் எல்லாரும் வருகிறோம் என்பதையும் வாசு மற்றும் ஸ்ரீலலிதாவிடம் கூறிவிட்டதாகவும் சொன்னாள். 

சரியாக 9 மணக்கு நாங்கள் பெரியம்மா அகத்தினை அடைந்தோம். அம்மாவிற்கு ரொம்பவும் எமோஷனல் ஆகி விட்டது என்றாலும் கட்டுப் படுத்திக் கொண்டு காரிலிருந்து இறங்கினார். மாமா, மாமி, லக்ஷ்மி எல்லாரும் வாசலுக்கு வந்து எங்களை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றனர். 



எங்களை முக்கியமாக எங்கள் அம்மாவை பார்த்ததில் எல்லாருக்கும் மிக மிக சந்தோஷம். அவர்கள் யாருமே, இந்த வயதில், இத்தனை தூரம், பயணம் செய்து எங்கள் அம்மா, அப்பா இருவரும்  வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. வாசு அண்ணா அம்மாவை கட்டிக்கொண்டு அழ, நீ தான் எல்லாம் சிரத்தயா பண்றயே வாசு, உங்களுக்கு ஒரு சப்போர்ட்டுக்குத்தான் நான் வரணும்னு நினைச்சேன் என்றார் அம்மா.  


ஸ்ரீலலிதாவும் அவளது பெண் வர்ஷிணியும் அங்கே வந்தார்கள். எங்கள் அம்மாவை பார்த்த வர்ஷிணி 'பாட்டி' என்று கட்டிக்கொண்டு, நான் எங்க பாட்டிய பார்க்க மாட்டோமான்னு ஏங்கினேன். பாட்டி, இதே இடத்துல இப்படியே தான் உட்கார்ந்திருப்பா. உங்களைப் பார்த்ததும் பாட்டியைப் பார்த்த மாதிரியே இருக்கு என்று கூறி கண் கலங்கியதைப் பார்த்ததும் , இதற்குத் தானே ஆசைப்பட்டாய் என்று எங்கள் மனம் முழுவதும் குதூகலித்தது. ஸ்ரீலலிதாவும் சித்தி நீங்க அம்மா மாதிரியே பேசறேள். உங்க செயல் எல்லாம் அம்மா மாதிரியே இருக்கு என்றார். 

  

பெரியவர்களாக அம்மாவும் அப்பாவும் அங்கு சென்றது எல்லார் முகத்திலும் ஒரு புன்னகையையும் ஒரு மன நிறைவையை கொடுத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

முதியவர்கள் நம் வாழ்வில் எத்தனை ஆக்கபூர்வமான  தாக்கத்தை, நேர்மறை உணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள். அம்மாவும் அப்பாவும் தன் சிரமம் பார்க்காமல் இத்தனை வயதிலும் இத்தனை தூரம் வண்டியில் அமர்ந்து பிரயாணம் செய்து,  வழியில் ரெஸ்ட் ரூம் போக ஏறி இறங்கி, கொஞ்சமும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் வந்தனர். தன்னைப் பற்றிக் சிந்திக்காமல் அவர்கள் இருவரும் வந்திருந்து நடத்திக் கொடுத்ததை வாத்தியார் கூடப் பாராட்டினார். சித்தி சித்தப்பா வந்திருக்கிறது ரொம்ப புண்ணியம் அவாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ என்று அவர் சொல்ல அண்ணா, மன்னி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய போது நாங்கள் மூன்று சகோதரிகளும் ஒருவரை ஒருவர் நிறைவுடன் பார்த்துக் கொண்டோம். 


இதை எந்த விக்னமும் இல்லாமல் நடத்திக் கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டோம். என் அம்மாவின் ஆசை அறிந்து அவரைக் கண்டிப்பாக கூட்டிவர வேண்டும் என்று நினைத்த எங்கள் அப்பாவின் அன்பைப் பார்த்து வியந்தோம். நாங்கள் அம்மாவை பிடித்துக் கொண்டு வந்தாலும் நாங்கள் சரியாக கூட்டி வருகிறோமா என்று எங்கள் அப்பா எப்பொழுதும் செக் செய்து கொண்டே இருப்பதை எப்பொழுதும் போல் வியந்து பார்த்தபடி நாங்கள் வந்தோம்.

மாமா, மாமி வந்திருந்தது எல்லாருக்கும் மிகப் பெரிய தெம்பு.  மாமாவும் எல்லா நிகழ்வுகளையும் அழகாகப் படம் பிடித்தார்.

அம்மா ஆரத்தி எடுக்க வருகிறேன் என்று கூறி மாமியுடன் சேர்ந்து அழகாக தன் அக்காவிற்காகப் பாடி ஆரத்தி எடுத்தது மறக்க முடியாத நெகிழ்வான நிகழ்வு. சகோதரிகள் நாங்கள் அம்மாவின்  பாடி கார்டாக (Body guard)  அம்மாவின் அருகில் அட்டென்ஷனில் நிற்க, ஆரத்திப் பொட்டுக்கு வாசு அண்ணா மெய்மறந்து கண்மூடி அம்மாவின் கையால் இட்டுக் கொண்டது கண்முன்னே நிற்கிறது.





உண்மையிலேயே எங்கள் பெரியம்மா ஒரு சகாப்தம். எல்லாருக்கும் பிடித்த, எல்லாருடனும் அன்பும் நட்பும் பாராட்டிய பெரியம்மா தெய்வமாய் எங்கள் எல்லாரையும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை எங்கள் எல்லாருக்கும் ஏற்பட்டது. நாங்கள் எல்லாரும் பெரியம்மாவின் பெருமைகளையும் அவரது அறிவாற்றலையும் மெச்சிப் பேசி சிரித்து மகிழ்ந்த தருணத்தை மனதிலும் கேமராவிலும் சிறை பிடித்துக் கொண்டோம்.


சுப ஸ்வீகாரம் முடிந்து  உணவு அருந்திவிட்டு பிரியா விடை பெற்றோம் நாங்கள்.




பெரியம்மா எனும் சகாப்தம் என்றென்றும் தொடரும் என்ற எண்ணம் எங்கள் எல்லாருடைய மனதிலும் நிறைந்தது. 

அன்புடன்
மாதங்கி ஜெயராமன்.
10.9.2024

Monday, September 2, 2024

குலதெய்வ வழிபாடு - குலதெய்வம்: ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ மலையாமருங்கர், அம்பாள்: ஸ்ரீ மங்களாம்பிகா.

குலதெய்வ வழிபாடு - குலதெய்வம்: ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ மலையாமருங்கர் மற்றும் ஸ்வாமி: ஸ்ரீ வம்சோதாரகர், அம்பாள்: ஸ்ரீ மங்களாம்பிகா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூர் வட்டதில் புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எங்கள் குலதெய்வம்,   யானை மீது பூர்ண, புஷ்கலா சமேதமாக அமர்ந்திருக்கும் ஐயப்ப வடிவமான  மலையாமருங்கர் அய்யனார். சிவபெருமான் வம்சோதாரகர் மற்றும் அன்னை மங்களாம்பிகா.

5.6.2024 ஆம் தேதி குலதெய்வம் கோவிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்.  4 ஆம் தேதியே கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சாமன்களை  லிஸ்ட் போட்டு எடுத்து வைத்துக்கொண்டோம். எங்கள் குடும்ப வழக்கப்படி குல தெய்வ கோவிலில் மாவிளக்கு போட வேண்டுமென்றால்  கல்யாணம்,   முடி இறக்குதல், பூணல் கல்யாணம் போன்ற விசேஷங்களை முன்னிட்டு அல்லது பித்ரு காரியங்களை முடித்த பின் எல்லா குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து செல்ல வேண்டும். 

எங்கள் மாமனாரின் கூடப் பிறந்த சகோதரர்கள் 2 பேர்,  அந்த மூன்று சகோதரர்களின் வாரிசுகள், அவர்களின்  வழி வாரிசுகள் எல்லாரும் சேர்ந்து செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.  இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் செல்வது அரிதான விஷயமாக இருந்தாலும் முடிந்தவர்கள் எல்லாரும் குலதெய்வ வழிபாட்டில் பங்கு கொள்வது கடவுளின் அனுக்ரஹம்.

எங்கள் குலதெய்வக் கோவிலில் மாவிளக்கு போடுவதற்குத் தேவையான  சாமான்களின் பட்டியல் இதோ.

கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய சாமான்கள்: 

எண்

சாமான்கள்

தேவையான அளவு

1

மஞ்சள்

பாக்கெட்

2

சந்தனம்

பாக்கெட்

3

குங்குமம்

1 டப்பா

4

வீபூதி

டப்பா

5

திரவியப்பொடி

பாக்கெட்

6

சூடம்

பாக்கெட்

7

ஊதுபத்தி

பாக்கெட்

8

தேங்காய்

12

9

வாழைப்பழம்

12

10

வெற்றிலை

அரை கௌளி

11

பாக்கு

200 கிராம்

12

நெய் பாட்டில் சிறியது

3

13

நெய் பாட்டில் மீடியம் சைஸ்

2

14

நல்லெண்ணெய்

கால் லிட்டர் பாக்கெட் - 4

15

நெல்

½ சாக்கு

16

வேஷ்டி பெரியது (மலையாமருங்கர் – 1, வம்சோதாரகர் – 1)

2

17

பிள்ளையார் வஸ்திரம் துண்டு

1

18

புடவை மங்களாம்பிகாவிற்கு

1

19

சப்த கன்னிகளுக்கு பாவாடை

7

20

பூர்ணா மற்றும் புஷ்கலாவுக்கு பாவாடை

2

21

வெச்சுக் கொடுக்க ப்ளவுஸ் பிட்கள்

10

22

பெரிய மாலை

4

23

சிறிய மாலை

9

24

தொடுத்த பூ

முழம்

25

உதிரிப் பூ

அர்ச்சனைக்கு

26

தீப்பெட்டி

2

27

கத்திக்கோல்

1

28

கத்தி

1

29

அரிவாள்

1

30

திரி நூல்

பாக்கெட்

31

பஞ்சுத் திரி

பாக்கெட்

32

பால்

லி

33

தயிர்

2லி

34

தேன்

பாக்கெட்

35

சில்லரை

நெல் போடும் போது கையில் காயின் வைத்துக்கொண்டு கை நிறைய நெல் எடுத்து ஸ்வாமிக்கு முன் போட வேண்டும்

36

மாவிளக்கு போட தாம்பாளம்

1

37

தீபாராதனை கரண்டி

1

38

சொம்பு

1

39

நிவேத்யம் வைக்க பித்தளை தட்டு

1

40

மாவிளக்கு உருண்டை வைக்க டப்பா

1

41

ஊதுபத்தி ஸ்டாண்ட்

1

42

பஞ்சாத்ரம் உத்ரணி

1

43

பஞ்சாமிருத அபிஷேகத்திற்கு தேவையான சாமான்கள்

வாழைப்பழம், திராட்சை, கற்கண்டு, நட்ஸ், நாட்டுச்சர்க்கரை,பேரிச்சம் பழம், தேன்,

44

மாவிளக்கு சாமான்கள்

மற்றும்


அரிசி மாவு (அரிசியை ஊறவைத்து, வடித்து உலர்த்தி,  காய்ந்ததும் அரைத்து சலித்தது) 2 பங்கு

நாட்டுச் சர்க்கரை 1 பங்கு, நெய், ஏலக்காய் பொடி.

மாவிளக்கு போட்டு நைவேத்தியம் ஆனதும் தேங்காய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.



இந்த சாமான்களுடன் மாற்று உடையாக மகளிருக்கு 9 கஜம் புடவை, ஆடவருக்கு பஞ்சகசம் வேஷ்டி, துண்டு, கைத் துடைத்துக் கொள்ள துணி என்று எடுத்து வைத்துக்கொண்டோம். 

திட்டப்படி 5.6.2024 அன்று   ஒரு வேன் புக் செய்து கொண்டு . அனந்தன் அண்ணா, கிரிஜா மன்னி,  'மாதங்கி'யான நான், என் கணவர் ஜெயராமன், கணவரின் தம்பி சீதாராமன், அவரது மனைவி கௌரி,  இன்னொரு தம்பி ரகு,  அவரது மனைவி சாரதா எல்லாருமாக காலை 4 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.  திருச்சியிலிருந்து என் கணவரின் பெரியப்பா பையன் ராமு அண்ணா அவரது மனைவி ஈஸ்வரி மன்னி இருவரும் எங்களுடன் இணைந்து கொண்டனர். எங்களது குடும்பத்தின் பெரிய அண்ணாவான ராதாகிருஷ்ணன் அண்ணாவும் கல்யாணி மன்னியும் நேரடியாக கோவிலுக்கு வந்துவிட்டார்கள்.  மொத்தம் 12 பேர் தம்பதி சமேதராக பெருங்களூர் சென்றடைந்தோம்.

கோவில் ட்ரஸ்ட் நடத்தும் விடுதி:

பெருங்களூர் கோவிலுக்கு வருபவர்கள் தங்குவதற்காகவே பிரத்யேகமாக  பெருங்களூர் உருமநாதர் ட்ரஸ்ட் நடத்தும் விடுதி ஒன்று இருக்கிறது. மிகவும் நேர்த்தியான  இடம் இது.  இங்கு தங்க விஸ்தாரமான அறைகளும், குளித்துக் கிளம்ப பாத்ரூம்  வசதிகளும் இருக்கின்றன.  முன்கூட்டியே பதிவு செய்தால், அங்கேயே உணவு சமைத்து  பரிமாறுகிறார்கள். காஃபி, டீ கூடக் கிடைக்கிறது . மிகவும் அருமையான ஏற்பாடு இது.  தரமான உணவு, தூய்மையான இடம், நியாயமான கட்டணம். அதன் இன்சார்ஜ் திருமையம் சுரேஷ் என்பவர், அவரது செல் நம்பர் +919884815204.

நேராக நாங்கள் சென்றது அந்த விடுதிக்குத் தான்.  அங்கு காஃபி குடிப்பவர்கள் குடித்து அங்கேயே குளிப்பவர்கள்  குளித்து ரெடியாக அங்கிருந்து சிவன் கோவில் குளத்தை நோக்கி வேனில் புறப்பட்டோம் நாங்கள்.

வன்னி மரத்தடி விநாயகர்:

சிவன் கோவில்  குளத்திலிருந்து தொடங்குகிறது நமது குலதெய்வ வழிப்பாடு. வன்னி மரத்தடிப் பிள்ளையாருக்கு அருகிலிருக்கும்  அந்தக் குளத்தில் நீராடிய பின் ஈரத்துணியுடன் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். 



நாங்கள் கொண்டு சென்றிருந்த வஸ்திரத்தை பிள்ளையாருக்கு  சாற்றி, பூமாலை அணிவித்து,  தீப, தூபம் ஏற்றி விநாயகனைத் தொழுது, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நிவேதனம் செய்தோம். வினை தீர்க்கும் விநாயகனுக்கு சதுர் தேங்காய் போட்டு நல்ல படியாக குல தெய்வ வழிபாடுகள் விக்னமின்றி நிறைவேற வேண்டிக்கொண்டோம்.

ஸ்ரீ வம்சோதாரக நாதர்:

கொண்டு சென்றிருந்த நெல் மூட்டையுடன் வம்சோதாரகரை தரிசிக்க சிவன் கோவிலுக்குள் சென்றோம்.  

எங்கள் வழக்கப்படி கம்பீரமாக வீற்றிருக்கும் வம்சோதாரகர் சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் மேடையில் நெல் போட்டு பிராத்தனையைத் தோடங்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் சில்லறை வைத்துக் கொண்டு மூட்டையிலிருந்து கை நிறைய நெல் எடுத்து மேடையில் இட வேண்டும். இது போல் மூன்று முறை செய்ய வேண்டும். சிறியவர்களிடமிருந்து ஆரம்பித்து முதலில் சாரதாவில் ஆரம்பித்து பெரியவர் வரை பெரிய அண்ணா ராதாகிருஷ்ணன்  வரை ஒவ்வொரு தம்பதியாய் அனைவரும் வம்சோதாரகர் சன்னதியில் இம்மாதிரி மூன்று முறை கை நிறைய நெல் இட்டு பிரார்த்தனை செய்து கொண்டோம்.

ஸ்ரீ மங்களாம்பிகா:

அடுத்து அம்பாள் மங்களாம்பிகா சன்னதி. கருணையே உருவமாய் எங்கள் மங்களாம்பிகை காட்சி அளித்தார். அங்கும் வம்சோதாரகர் சன்னதியில் செய்தது போலவே அம்மனுக்கு முன் ஒவ்வொருவராக நெல் இட்டு வேண்டிக்கொண்டோம். 

அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகத்திற்கு கொண்டு சென்ற சாமான்களை பூசாரியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேனில் மலையாமருங்கர் கோவிலை நோக்கிச் சென்றோம். 

ஸ்ரீ பூர்ண. புஷ்கலா சமேத ஸ்ரீ மலையாமருங்கர்:



மலையாமருங்கர் யானை மீது பூர்ண புஷ்கலா  சமேதராக மிக அழகாக அமர்ந்திருக்க அவருக்கு முன்னால் உள்ள மேடையில்  சிவன் கோவிலில் செய்தது போலவே  சாரதாவில் ஆரம்பித்து  பெரிய அண்ணா வரை ஒவ்வொரு தம்பதியாய் அனைவரும்  மூன்று முறை சில்லறையுடன் கை நிறைய நெல் இட்டு பிரார்த்தனை செய்து கொண்டோம்.

அங்கும் அபிஷேக சாமான்கள், மலையாமருங்கருக்கு வேஷ்டி, பூர்ணா, புஷ்கலா மற்றும் ஸ்ப்தகன்னிகளுக்கு பாவாடை எல்லாவற்றையும் பூசாரியிடம் கொடுத்தோம். 

கோவிலிலிருந்து 2 குடங்கள் வாங்கிக்கொண்டு கோவில் குளத்தை நோக்கிச் சென்றோம். இந்தக் குளக்கரையில் தான் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செய்யும் வழக்கம். 

ஆடவர்கள் குளத்தில் இறங்கி குடத்தில் நீர் கொண்டு வந்து தர முதலில் குடும்பத்தில் சிறிய தம்பதியை அங்கிருக்கும் மேடையில் உட்கார வைத்து வீட்டுக்கு மூத்தவர் கையில் வீபூதி எடுத்துக் கொண்டு முகத்தில் மூன்று முறை  தண்ணீர் அடித்து பின் தலையில் குடம் நீரை ஊற்றினார். இவ்வாறு ஒவ்வொரு தம்பதியாக இந்த முறையில் ஸ்நானம் செய்ததும், பெரிய தம்பதிக்கு அவருக்கு அடுத்த தம்பி இதே போல முகத்தில் நீர் தெளித்து தலைக்கு நீர் ஊற்றினார்.  குளத்தடி விநாயகரை நமஸ்கரித்துவிட்டு கிளம்பினோம்.



ஸ்ரீ உருமநாதர் ஆலயம்:

குளத்தின் அருகிலேயே இருந்தது உருமநாதர் ஆலையம்.


உருமநாதர் ஆலையத்திற்குள் செல்ல முன்பெல்லாம் பெண்களுக்கு அனுமதி இல்லாமலிருந்தது. இப்போழுது உள்ளே ஓர் எல்லை வரை அனுமதிக்கிறார்கள்.  அங்கிருந்து உருமநாதரை நன்றாக தரிசிக்க முடிகிறது.


தீபாராதனை முடிந்து வேண்டிக்கொண்டு, ஸ்ரீ மலையாமருங்கர் அய்யனார் கோவிலுக்குச் சென்றோம். 

 மீண்டும் ஸ்ரீ மலையாமருங்கர்:

ஈரத்துடன் ஸ்ரீ மலையாமருங்கர் கோவிலுக்குள் நுழைந்ததும், நுழைவாயிலில் மீண்டும் ஒரு முறை ஒவ்வொருவர் முகத்திலும் மூன்று முறை வீபூதியுடன் நீர் அடித்தார் பெரிய அண்ணா.  தீயசக்திகள் அண்டாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்வது ஐதீகம். 

கோவில் உள்ளே மலையாமருங்கருக்கு அபிஷேகம் செய்வதைப் பார்க்கச் சென்றோம்.  இதுவரை  இத்தனை அருகாமையில் ஸ்வாமியைப் பார்த்ததே இல்லை. அருமையான தரிசனம்.  



அபிஷேகம் முடிந்து தீபாரதனை முடிந்ததும் குடும்பமாக நாங்கள் எல்லாரும் ஐயப்ப பாடல்களையும் குருவாயூரப்பன் ஸ்தோத்திரம் எல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்து வழிபட்டது மனதிற்கு இதமாக இருந்தது.  சப்த கன்னிகளும் புத்தாடையில் மிளிர இந்த முறை தான் அவர்களை மிக அருகில் கண் குளிரப் பார்க்கமுடிந்தது.  மலையாமருங்கரை நமஸ்கரித்து அங்கிருந்து வேனில் புறப்பட்டு மீண்டும் சிவன் கோவிலுக்கு வந்தோம். 

மாவிளக்கு:

வம்சோதாரகருக்கும்  அம்பாளுக்கும் பூசாரி அபிஷேகம் செய்து  புத்தாடை உடுத்தி பூஜை செய்ய, நாங்கள்  பஞ்சகச்சம், 9 கஜம் புடவையுடன்  தாயார் மங்களாம்பிகா சந்நிதியில் மாவிளக்கு போட ஏற்பாடுகள் செய்து கொண்டோம்.




தாம்பாளத்தில் அரிசி மாவு, நாட்டுச் சர்க்கரை கலந்த மாவினை இட்டு, சந்தனம் குங்குமம் இட்டு,  இரண்டு குழிகள் செய்து, நெய் ஊற்றி, நெய்யில் ஊற வைத்த பஞ்சுத்திரி அதில் வைத்து, பூக்களால் அலங்கரித்தோம். பிறகு  பெரிய மன்னியிலிருந்து ஆரம்பித்து கையில் திரி எடுத்துக் கொண்டு  மங்களாம்பிகை சந்நதியில் உள்ள தீபத்திலிருந்து அந்தத் திரியை ஏற்றி அத்திரியை கவனமாகக் கொண்டு வந்து மாவிளக்கு ஏற்றினோம். இவ்வாறு பெண்கள் எல்லாரும் ஒவ்வொருவராக ஏற்ற தீப மங்கள ஜோதியாக ஒளிர்ந்தது  மாவிளக்கு. பார்ப்பதற்கே தெய்வீகமாக, திவ்யமாக இருந்தது.  தேங்காய் உடைத்து இரு பக்கமும் மூடிகளை வைத்து, தூபம் ஏற்றி வைத்து, அம்மன் பாடல்களை நாங்கள் பாட நின்று ஒளிர்ந்தது எங்கள் மாவிளக்கு. 




மாவிளக்கிற்கு நைவேத்தியம் செய்து, தீப ஆராதனை காட்டி வேண்டிக் கொண்டு, விளக்கு நன்கு எரியும் போதே, தேங்காய் மூடியில் இருக்கும் குடுமியை இரு கையிலும் பிடித்துக் கொண்டு எரியும் திரியை எடுத்து கவனமாக வெற்றிலை மீது வைத்தோம். கோவிலுக்கு நிறைய பேர் வர ஆரம்பித்திருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுத்தோம். மிகவும் சந்தோஷத்துடன் அவர்கள் வாங்கிச் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.

மாவிளக்கு மாவை நங்கு பிசைந்து உருட்டி எல்லாருக்கும் பிரசாதமாகக் கொடுத்தோம்.  எங்கள் பிரார்த்தனையும் குலதெய்வ வழிபாடும் இனிதே நிறைவேறியது.

அங்கிருந்து விடுதி ரூமிற்கு வந்ததும் எங்கள் குல தெயவ படங்களை வாங்கிக் கொண்டோம். அந்த விடுதியில் இருந்த பூஜா ரூமில் இருந்த பூரணா புஷ்கலாவுடன் காட்சி தந்த மலையாமருங்கர் விக்ரகத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டேன் நான்.




ரூமில் உடை மாற்றிக் கொண்டு அவர்கள் பரிமாறிய அருமையான உணவை உண்டோம்.  அங்கேயே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு 3.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டோம். வன்னி மரப் பிள்ளையாரில் தொடங்கி வம்சோதாரகர், மங்களாம்பிகை, உருமநாதர், புர்ண, புஷ்கலா சமேத மலையாமருங்கர் இவர்களின் பூரண ஆசியுடன் குலதெய்வ வழிபாடு  நிறைவாய் அமைந்தது. 

பெருங்களூர் சென்று வழிபாடு முடித்துவர ஆன செலவுகள்:

எண்

செயல்

செலவு

1

மகாதானபுரத்திலிருந்து பெருங்களூர் போய் வர வேனுக்கு

8000.00

2

சாப்பாடு  மற்றும் காஃபிக்கு (ஆளுக்கு ரூ 250 வீதம்)

3000.00

3

கோவிலில் தட்சணை

3000.00

4

ஸ்வாமிக்கு புடவை வேஷ்டி பாவடை

2000.00

5

அபிஷேக சாமான்கள்

1500.00

 

மொத்தம்

17500.00



குலதெய்வ வழிபாடு என் பார்வையில்:

குலதெய்வ வழிபாடு என்னைப் பொருத்தவரை ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். வம்ச வம்சமாக நமது மூதாதையர்கள் வழிபட்ட இடத்தில் நாம் வழிபாடு செய்யும் போது அவர்களின் ஆசியும் கடவுளின் பரி பூர்ண அனுக்கிரஹமும் கிடைப்பதை உணரமுடிகிறது.

கோவில்களைப் புணர்ப்பித்து, கோவிலுக்கு செல்லும் பாதைகளை எளிதில் அணுகும வண்ணம் சீரமைத்திருப்பது சிறப்பு.   கோவில் ட்ரஸ்ட் பக்தர்களுக்காக விடுதி அமைத்து தங்க வசதி மற்றும் சுவையான உணவு  நியாயமான விலையில் கிடைக்குமாறு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மொத்தத்தில் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு கடவுள் அனுக்ரஹம்.
இப்பகுதி நிறைவு பெற்றது.

பயணங்கள் தொடரும்.

மாதங்கி ஜெயராமன்
பெங்களூரு.


எங்கள் பெரியம்மா என்னும் சகாப்தம்

  எங்கள் பெரியம்மா சுப்பலக்ஷ்மி என்கிற சத்யபாமா: எங்கள் அம்மாவின் அக்கா ' சுப்பலக்ஷ்மி' என்கிற 'சத்யபாமா ' எல்லாராலும் '...