மங்களூரில் மூன்று நாட்கள்
மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் என் மகள் அனன்யாவிற்கு 'கஸ்தூரிபா மெடிகல் காலேஜ்' ல் நடந்த கான்ஃப்ரன்ஸில் போஸ்டர் ப்ரெசென்ட் செய்ய தேர்வாகி இருந்தது. அவளுக்கு இன்டெர்னல் பரிட்சை முடிந்து உடனே புறப்பட வேண்டி இருந்ததால் நானும் அவளுடன் செல்வது என்று முடிவு செய்தோம். கான்ஃப்ரன்ஸில் எனக்கு அனுமதி இல்லை என்பதால் 'ஊரை சுற்றிப்பார்க்கப் போறேன். மே மாத வெய்யிலிலும் என்ஜாய் செய்யப் போறேன்' என்று முடிவு செய்தேன்.
தனியாக சுற்றுவதை விட தோழிகளுடன் சென்றால் எப்படி இருக்கும்? மகளிர் மட்டும் ஒரு உல்லாசப் பயணம். இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பதால், என் கணவர் டிக்கெட் புக் செய்வதற்கு முன் என் நெருங்கிய தோழிகளிடம் என் திட்டத்தைப் பற்றி சொல்லி நீங்களும் வந்தால் ஜாலியாக மூன்று நாட்கள் மகளிர் மட்டும் ஓர் உல்லாசப் பயணம் சென்று வரலாம் என்று ஆசை காட்டினேன் நான். என் தோழி 'விஜயஸ்ரீ' வர ஆசைப்பட்ட்டாலும் குடும்பக் கடமைகளை நினைவு கூர்ந்து வரத் தயங்கினாள். ஆனால் அவளது கணவரும் தாயும் மகனும் ஜாலியாக சுற்றிவிட்டு வா என்று ஒட்டு மொத்த ஓட்டையும் அவளுக்கு அளித்து அவளை ஊக்குவிக்க அவளும் வர சம்மதித்தாள். முதல் கட்ட வெற்றி.
'கஸ்தூரிபா மெடிகல் காலேஜ்' கர்நாடகா மாநிலத்தில் 'மணிப்பால்' என்னும் இடத்தில் உள்ளது எங்களுக்குத் தெரியும். மணிப்பாலுக்கு நேரடியாக செல்ல பஸ் தான் உகந்தது என்பதனால் KSRTC பஸ் ஸில் போக வர டிக்கெட் மற்றும் கல்லூரி அருகில் தங்குவதற்கு ஹோட்டலில் ஏசி ரூம் எல்லாம் 10 நாட்களுக்கு முன்பே புக் செய்தாகி விட்டது.
அனன்யா ஹாஸ்ட்டலில் இருப்பதால் சனி ஞாயிறு களில் மட்டும் முடிந்த போது வீட்டுக்கு வருவாள். பரிட்சை சமயங்களில் வர முடிவதில்லை. அவள் 28 ஆம் தேதி வீட்டுக்கு வந்திருந்த போது வென்யூ ஹோட்டலிலிருந்து எத்தனை தூரம் என்று கூகுள் மேப் வைத்து செக் செய்தோம்.
என் கணவர் அந்த கான்ஃப்ரன்ஸ் வெப்சைட்டில் பார்த்தார். 'கஸ்தூரிபா மெடிகல் காலேஜ்' இண்டோர் ஸ்டேடியம், மரீனா என்ற இடத்தில் கான்ஃப்ரன்ஸ் நடப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தது. அதன் படி நான் பார்த்ததில் நாங்கள் புக் செய்திருந்த இடம் ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்ததாகக் காட்டியது கூகுள். ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு. நாங்கள் புக் செய்ததோ மணிப்பாலில். வெப்சைட் படி கான்ஃப்ரன்ஸ் நடப்பதோ மங்களூரில். உடனே ஆர்கனைஸருக்கு ஃபோன் செய்து கேட்டதில் அவரும் மங்களூரில் ஒரு 'கஸ்தூரிபா மெடிகல் காலேஜ்' காம்பஸ் இருப்பதாகவும். அங்கு தான கான்ஃப்ரன்ஸ் நடக்கிறது என்றும் உறுதிபடுத்தினார். அவரிடமே அருகில் தங்க இடம் பற்றி விசாரிக்க அவர் சில இடங்களின் பட்டியலை அனுப்பி உதவி செய்தார். உடனே அந்த இடங்களுக்கு ஃபோன் செய்து, வேறு பஸ் பார்த்து மீண்டும் புக் செய்வதற்கு முன் தோழி விஜயஸ்ரீயை தொடர்பு கொண்டு திட்டம் மாறியதைச் சொல்ல முயன்றேன். அவளைப் பிடிக்கவே முடியவில்லை. மெசேஜ் அனுப்பினேன். அவள் அளித்த பதில் எங்களை மிகவும் கவர்ந்தது. இடம் முக்கியமில்லை உன்னுடன் இருக்கவே வருகிறேன் என்று எழுதி இருந்தாள். உடனேயே கான்ஸல் செய்ய வேண்டிய டிக்கெட்டுகளை கான்சல் செய்து, மீண்டும் புக் செய்ய வேண்டியவற்றை முடித்து 'அப்பாடா' என்றாகி விட்டது. நல்ல வேளை அர்த்த ராத்திரியில் இடம் மாறி அலைந்து அவஸ்தை படாமல் ஒரு வழியாக எல்லாவற்றையும் மீண்டுமொரு முறை சரிபார்த்து அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்தோம்.
அடுத்து என்ன? ஷாப்பிங் அண்ட் பேக்கிங் தான். கான்ஃப்ரன்ஸில் பங்கேற்பாளர்களுக்கு இரண்டாம் நாள் 'Gala night' என்று ஸ்டார் வெளிச்சத்தில் இரவு விருந்து பரிமறப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு ஒரு வெஸ்ட்ட்ர்ன் ஃபார்மல் ட்ரெஸ் ஒன்று வாங்கினோம் அனன்யாவிற்கு.
மூன்று நாட்களுக்கு வேண்டிய உடைகள், ஃபொன், சார்ஜர், ட்ரெஸ்ஸிங் கிட், துண்டுகள், வெய்யிலை தடுக்க சன் ஸ்க்ரீன் லோஷன், தொப்பிகள், கூலிங் க்ளாஸ், குடை, தண்ணீர் பாட்டில்கள், ஜுஸ், ஸ்நேக்ஸ், இரவு உணவு சகிதம் எங்கள் பயணம் மே 2 ஆம் தேதி குதூகலமாக ஆரம்பித்தது. மாலை 3.45 க்கு யஷ்வந்தபூரிலிருந்து எங்களுக்கு பஸ். அனன்யா அவளது பரிட்சை முடிந்து 12.30 மணிக்கு கிளம்பி 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் கான்ஃப்ரன்ஸுக்குத் தேவையான மெடீரியல்ஸ் மற்றும் லேப் டாப் முதலியவற்றை கவனமாக எடுத்துக் கொண்டாள். விஜயஸ்ரீ 12 மணிக்கு வந்தாள். நாங்கள் மதிய உனவை முடித்துவிட்டு 3.10 க்கு லக்கேஜ் சகிதமாக என் கணவருடன் வெற்றிகரமாக யஷ்வந்தபூர் நோக்கி காரில் புறப்பட்டோம். முதல் நாள் பயணம் இனிதே தொடங்கியது.
மூன்று பேர் தங்கும் படி ட்வின் பெட் டுடன் காம்பேக்ட் டாக இருந்தது எங்கள் ஏசி ரூம். லக்கேஜ் வைத்துவிட்டு கொண்டு வந்திருந்த 'டாபிள்' (Dobble) என்னும் விளையாட்டை விளையாடி விட்டு மூவரும் நிம்மதியாக உறங்கினோம்.
மறுநாள் காலை மூவரும் குளித்து ரெடி யாகி 7.30 மணிக்கு காம்ப்ளிமென்ட்ரி யாகக் கொடுக்கும் காலை உணவை, பூரி, சன்னா, வெஜிடபிள் காரா பாத், கட்லெட், போண்டா, சட்னி, சாம்பார், ப்ரெட், பட்டர், ஜாம், ஜூஸ், காஃபி, டீ யை சுவைத்துவிட்டு அனன்யாவை கான்ஃப்ரன்ஸ் நடக்கும் இடத்தில் விட்டுவிட்டு பஸ் நிலையத்திற்கு சென்றோம். அங்கிருந்து உடுப்பி செல்லும் பஸ் எது என்று விசாரித்து நானும் விஜயஸ்ரீ யும் எங்களது உல்லாசப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
1.15 மணி நேரப்பயணத்திற்குப் பிறகு உடுப்பி கோவில் அருகில் பஸ்ஸிலிருந்து இறங்கினோம். வந்த சில நேரத்திலேயே எங்களுக்கு மங்களூர் மக்கள் பழகும் விதம் மிகவும் பிடித்துப் போனது. ஆட்டோ ஓட்டுனரிலிருந்த்து ஹோட்டல் ஸ்டாஃப், பஸ் கண்டக்டர், ட்ரைவர், வழிப்போக்கர்கள் எல்லாருமே மிக அன்பாகப் பேசி வழி சொல்லி, விவரம் சொல்லிப் பழகியது அன்னோன்னியமாக இருந்தது எங்களுக்கு.
உடுப்பி கோவில்:
உடுப்பி கோயில் போக வேண்டும் என்பது எங்கள் இருவரின் ஆசை. கோவிலை அடைந்தததும் விவரிக்க முடியாத பரவசம். மணி 9.45. கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை.
மிகக் சிலர் மட்டுமே இருந்தார்கள். நாங்கள் ஒவ்வொரு இடத்தையும் ரசித்து படம் பிடித்து கிருஷ்ணாஷ்டகம் சொன்னபடி வரிசையில் நின்ற போது இன்னும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். கூட்டம் கூடப் போகிறதே என்று வேகமாக நகர்ந்தோம். பணம் கட்டிச் செல்லும் சிறப்பு வரிசையில் செல்லாமல் நின்று நிதானமாக பொது வரிசையில் சென்றோம்.
கோவில் உள்ளேயும் கண்ணனை துவாரம் வழியாகத் தான் தரிசனம் செய்ய வேண்டும். அவனை தரிசிக்க, ரசிக்க நமக்கு சில நிமிடங்களே கொடுக்கிறார்கள். அவன் அழகை கண்களில் பருகிக் கொண்டு நகர மனம் இல்லாமல் நகர்ந்தாலும் கண் அவனை விட்டு அகலவில்லை.
நானும் விஜயஸ்ரீயும் அங்கிருந்து சற்று நகர்ந்து ஒரு இடத்தில் நின்று கொண்டோம். அங்கிருந்து கண்ணனை நன்கு தரிசிக்க முடிந்தது. எங்களுக்கு முன்பே அங்கு சிலர் நின்று பார்ப்பதைப் பார்த்து விட்டுத்தான் அந்த இடத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். கண் கொள்ளா காட்சி. பக்தர்களான எங்களுக்கும் அவன் வேண்டுமளவுக்கு திவ்ய தரிசனம் அளித்தான். வெகு நேரம் மெய் மறந்து அங்கேயே நின்றிருந்தோம்.
அங்கே ஒரு புறம் மந்திரங்கள் ஒலிக்க பூஜை நடந்து கொண்டிருந்தது. அருகில் கிருஷ்ணனுக்கு எதிரேயே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து மெய் மறந்து 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' சொல்லத் தொடங்கினேன். என் உடல் பொருள் ஆவி எல்லாம் அவன் காலடியில் என் மனதிற்குள் அவனும் நானும் மட்டுமே. என்னைச் சுற்றி இருந்த எதுவுமே எனக்குத் தெரியவில்லை. என் தோழியும் மெய் மறந்து போனதாகக் கூறினாள். மீண்டும் மீண்டும் அந்தக் கண்ணனை தரிசித்து மன நிறைவோடு அங்கிருந்து வெளியில் வந்தோம்.
உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு மடங்கள் உள்ளன. அங்கே உட்கார்ந்து ' மைக்' கில் பல குழுவினர் தொடர்ந்து ஸ்லோகங்களும், தெய்வீகப் பாடல்களும், வேத மந்திரங்களும் பாடியதை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.
உடுப்பி கோவிலைச் சுற்றி பல கடைகள். பஞ்ச உலோகத்தாலான சிலைகள், காப்பர், மாக்கல், தாமிரம், வெண்கலத்தினாலான கடவுள் உருவங்கள் பல வடிவங்களில் 'சைஸ்'களில் வைத்திருக்கிறார்கள். மிகவும் அழகான கலெக்ஷன்கள் இருக்கின்றன. உடுப்பி கிருஷ்ணர் மட்டுமில்லாமல் கிடைத்தற்கரிய பல புராதன சிலைகள் வைத்திருக்கிறார்கள். அவை எல்லாமே கலை நயத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தன. நியாயமான விலையிலும், அவரவர் தேவைக்கும் பட்ஜெட் டுக்கும் தகுந்தார் போல் பல சாய்ஸ் களும் இருந்தது சிறப்பு. கடைக்காரர்களும் சிப்பந்திகளும் பொறுமையாய் நம்மிடம் பேசி விவரங்கள் சொன்னார்கள்.
நாங்கள் ஒரு சில பொருட்களைப் பார்த்து வைத்துவிட்டு, உடுப்பி கிருஷ்ணர் கோவிலைச் சுற்றி இருக்கும் மற்ற கொவில்களைப் பார்க்க விரும்பினோம். அருகில் இருந்த ஒருவர் நான் காட்டுகிறேன் என்று தானாக முன் வந்து எங்களை சந்திரமௌலீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். தாமாக உதவுவதிலும் பணிவாக பதில் சொல்வதிலும் மரியாதையாக எல்லோரையும் நடத்துவதிலும் அந்த ஊர் மக்கள் எங்களை மிகவும் கவர்ந்தார்கள்.
சந்திரமௌலீஸ்வரர் கோவில்:
8 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டுள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் கறுப்பு கிரானைட்டினால் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளன. சாபத்திற்கு உட்பட்ட சந்திரன், அந்த சாபத்திலிருந்து விடுபட சிவபெருமானிடம் தவமிருந்து பரிகாரம் பெற்ற இடமாம் இது. சாபத்தினால் தேய்பிறையாகி ஒளி இழந்த சந்திரன் மீண்டும் வளற்பிறை ஆகி ஒளிரும்படி சிவன் வரமளித்ததால் சந்திரமௌலீஸ்வரராக இங்கே காட்சி அளிப்பதாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.
மதிய உணவுக்கு உடுப்பி கோவிலில் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு சென்றோம். பாயசத்துடன் சுவையான கிருஷ்ணர் பிரசாதம் கிடைத்தது. எல்லா நாட்களும் இங்கு அன்னதானம் நடை பெறுகிறது. அந்த சேவைக்கு எங்களால் ஆன காணிக்கையை கௌண்டரில் கட்டி ரசீது பெற்ற போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்பட்டது உண்மை.
நடு நடுவே ஜூஸ், நிறைய தண்ணீர் என்று குடித்தும், தொப்பி, குடை வைத்தும் வெய்யிலின் தாக்கத்தை குறைத்து அடாது வெய்யில் கொளுத்தினாலும் விடாது நாங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் இரசித்தோம். மணி 3.30 ஆகி விட்டது.
அனன்யாவுக்கு மதிய உணவு கான்ஃப்ரன்ஸிலேயே இருந்தது. அவளுக்கு அருகிலேயே எங்கள் ஹோட்டல் இருந்ததால், நேரம் கிடைத்த போதெல்லாம் ரூமுக்கு போய் ரெஃப்ரெஷ் செய்து கொண்டு கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு போய் வர முடிந்து அவளால்.
அனன்யா வர சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் ஆகும் என்பதனால் நாங்கள் கோவிலிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புகழ் பெற்ற 'மால்பே' பீச் செல்ல முடிவெடுத்தோம். இப்ப ரொம்ப வெய்யிலா இருக்குமே 5 மணிக்கு மேல போங்க என்றார் ஒரு கடைக்காரர். ஆனால் நாங்கள் இரவு 7 மணிக்குள் மங்களூருக்கு திரும்ப வேண்டும் என்பதால் அப்பொழுதே ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு பீச் நோக்கி புறப்பட்டு விட்டோம்.
மால்பே' கடற்கரை:
கடற்கரைக்குள் நுழையுமுன் ஒரு அழகான தொப்பி ஒன்று வாங்கினாள் என் தோழி. புகழ் பெற்ற மால்பே கடற்கரை மிகவும் அழகு. இது ஒரு துறைமுகமாகும். இந்தக் கடற்கரையின் வெள்ளை மணல் மிகவும் பிரசித்தம். வெய்யிலில் அது தக தக வென மின்ன கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. கடற்கரையில் ஆடும் பனைமரங்கள் கண்ணுக்கு விருந்து. தண்ணீர் வெந்நீராய் கொதித்தாலும் நாங்கள் விடவில்லையே. நன்கு ஆட்டம் போட்டு விட்டு, பை நிறைய வெண் மணலையும் மனம் முழுவதும் சந்தோஷத்தையும் கண் முழுவதும் கடல் அழகையும் ரொப்பிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். போட்ட ஆட்டத்தில் என் செருப்பு ஆட்டம் காண ஆரம்பித்தது.
தோழிகளின் உடுப்பி பயணம் அற்புதமாக முடிந்த திருப்தியில் பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம். ரூமில் ஒர் 'ப்ளேக் டீ' போட்டு குடித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு அனன்யாவின் வரவுக்காக காத்திருந்தோம்.
அனன்யாவின் முதல் நாள் கான்ஃப்ரன்ஸ் அனுபவமும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாகக் கூறினாள்.
நாங்கள் வாங்கி வந்திருந்த உடை அவளுக்கு மிகவும் பிடித்துப் போக அதை அணிந்து ஒர் ஃபேஷன் பெரேட் நடத்திக் காட்டினாள். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் காலை உணவு மட்டுமே கிடைக்கும் என்பதனால் வெளியில் சென்று இரவு உணவு சாப்பிட முடிவு செய்தோம்.
அனன்யாவுக்கு மறுநாள் போஸ்டர் பிரசென்டேஷன் இருந்ததனால் அவள் அதற்கு தயார் செய்ய வேண்டும் என்பதனால் எங்களை சாப்பிட்டு விட்டு அவளுக்கும் பேக் செய்து வரும்படியும் கூறினாள். \நாங்கள் இட்லி தோசை என்று சாப்பிட நினைத்தோம். ஆனால் இரவு நேரத்தில் அருகில் எங்கும் கிடைக்கவில்லை. அங்கு இருந்த 'ஷிவ் பாக்' என்ற ஹோட்டலுக்குச் சென்றோம். ஏசி ரூமில் நாங்கள் இருவர் மட்டுமே. ஒரு ஸ்டார்டர் அந்த ஹோட்டல் ஸ்பெஷல் என்றார்கள். பன்னீர் ஸ்டஃப்டு பால்ஸ் போல இருந்தது. மிகவும் அருமையாக இருந்தது. நூடுல்ஸ் ஒரு ப்ளேட் வாங்கி இருவரும் சாப்பிட்டோம். அந்த ஊர் ஃபேமஸ் ஐஸ்க்ரீமான 'கட்பட்' ஒன்றும் ஆர்டர் செய்து பகிர்ந்து சாப்பிட்டோம். அனன்யா மிகவும் லைட்டான இரவு உணவு தான் வேண்டும் என்று சொல்லி இருந்தாள். அங்கு இல்லாததனால் அருகில் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். கடைகள் மூடும் சமயமாகி விட்டது. எனவே மீண்டும் அதே ஹோட்டலுக்குச் சென்று அதே நூடுல்ஸ் பேக் செய்து கொண்டு ஒரு ஐஸ்க்ரீமும் வாங்கிக் கொண்டு ரூம் நோக்கி விரைந்தோம் (இல்லை என்றால் உருகி விடுமே).
காலை 6 மணிக்கு எழுந்த நான் குளித்து ரூமில் மூவருக்கும் டீ போட்டேன். குடித்து, குளித்து, ஒவ்வொருவராக ரெடியாகி சிற்றுண்டி சாப்பிடக் கிளம்பினோம். தோசையும், சமோசாவும் அன்றைய ஸ்பெஷலாக இருந்தது.
ஆட்டோவில் மூவரும் கிளம்பினோம். அனன்யாவை வென்யூவில் விட்டு விட்டு நாங்கள் இருவரும் 'மங்களூரு ஸ்மார்ட் சிடி'யை சுற்றி எங்கள் இரண்டாவது நாள் உல்லாசப் பயணத்தைத் தொடங்கினோம்.
மங்களூரில் இருக்கும் கோவில்களை சுற்றிப் பார்ப்பது எங்களது அஜெண்டாவாக இருந்தது. அந்த ஆட்டோ டிரைவர் 500 ₹ க்கு காத்திருந்து எங்களை மூன்று கோவில்களுக்கும் அழைத்துச் செல்வதாக கூறியது எங்களுக்கு சௌகர்யமாகப் போய் விட்டது.
முதலில் நாங்கள் சென்றது மங்களா தேவி கோவில். இந்தக் கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ் பெற்ற ஸ்தலம். மங்களூரின் பிரதான இடத்தில், கேரளா பாணியில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் மங்களா தேவி அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறாள். இந்த தேவியை தரிசித்தால் மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். இந்த தேவியின் மகிமையினால் அந்த ஊர் மங்களூர் என்று பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.
கட்ரோலி கோகர்ணநாதேஷ்வரா கோவில்:
அங்கிருந்து அதே ஆட்டோவில் கிளம்பி கட்ரோலி கோகர்ணநாதேஷ்வரா கோவிலை அடைந்தோம். இந்தக் கோவில் 1912 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பின் 1991 ஆம் ஆண்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஒரு குலம், ஒரு மதம், ஒரு கடவுள் என்ற போதனையின் அடிப்படையில் கட்டப்பட்டுளள இந்தக் கோவிலில் சிவன் பிரதானமாக இருக்கிறார். வாயிலிலயே இரு பெரிய யானை சிலைகள் நம்மை மாலையோடு வரவேற்கின்றன. உள்ளே அமர்ந்திருக்கும் ஒரு பெரிய நந்தி நம் கண்களைக் கவருகிறது.
திருமணம் மற்றும் இதர விசேஷங்கள் நடத்த கோவிலுக்குள் இடம் இருக்கிறது. அங்கு ஹனுமான் சந்நதியில் 'ஹனுமான் சாலிஸா' சொல்லிவிட்டு நின்று நிதானமாக ரசித்து, நமஸ்கரித்து படம் பிடித்து வருவதற்குள் ஆட்டோக்காரரிடமிருந்து ஃபோன் வந்து விட்டது. 'தும்ப டைம் ஆயுத்து மேடம்' என்றவரிடம் இதோ வந்துவிட்டோம் என்று கூறி ஓடி மீண்டும் ஆட்டோவில் பயணித்து கத்ரி மஞ்சுநாதா கோவில் சென்றடைந்தோம்.
கத்ரி மஞ்சுநாதா கோவில்:
சிவபெருமானுக்காகவே 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இந்த கத்ரி மஞ்சுநாதா கோவில். 14ஆம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டது. இங்கு மன்சுநாதர் பத்மாசன வடிவில் காட்சி அளிக்கிறார். மூன்று முகங்களுடனும் ஆறு கைகளுடனும் ஆன பிரம்மா ரூபமும் இந்தக் கோவிலில் காணக்கிடைக்கிறது. இந்த சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் ஈயம் கலந்த பஞ்சலோகத்தினாலான மிகப் பழமையான சிலை என்பது இதன் சிறப்பு. இவரை அவரவர் நம்பிக்கைக்கேற்ப மஞ்சுநாத ஸ்வாமி, த்ரிலோகேஷ்வர், அவலோகிதேஷ்வர் என்று பல நாமங்களில் வழிபடுகிறார்கள்.
உணவு முடித்து வெளியில் வந்ததுமே மணி 3 ஆகிவிட்டது. அங்கிருந்து வெளியில் வந்து கூலாக சோடா, ஜூஸ் என்று குடித்துவிட்டு அடுத்து 'புலிகுலா நிசர்கதாமா' செல்ல முடிவெடுத்தோம். ஆனால் அங்கு போனால் 6 மணிக்குள் திரும்ப முடியாது. அனன்யாவிற்கு அன்று இரவு கான்ஃபரன்ஸில் 'காலா நைட்' ('GALA NIGHT') அதாவது ஸ்டார் நைட் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்ததால் அவள் 5.30 மணிக்கே அங்கு செல்ல விரும்பினாள். எனவே அவளை ஆட்டோ ஏற்றி ரூமில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு 'ஸ்டார் நைட்' க்கு செல்லும்படி அனுப்பிவிட்டோம்.
நானும் விஜயஸ்ரீயும் மங்களூர் ஸ்பெஷல் கோக்கம் மற்றும் பிம்பிளி செடி கிடைத்தால் வாங்கலாம் என்று அருகில் இருந்த ஜனதா நர்ஸரிக்குகச் சென்றோம். நாங்கள் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் விஜயஸ்ரீ பல நாட்களாக வாங்க நினைத்த 'ஸ்டேக்ஹார்ன்' (Staghorn) ஃபெர்ன் என்னும் மான் கொம்பு வடிவில் இருக்கும் செடி அவள் நினைத்த விதத்தில் கிடைத்தது. அதை பாதுகாத்து பெங்களூர் வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து புலிகுலா செல்ல வழி கேட்டோம். அவர்கள் பஸ் ஸில் செல்லுமாறு கூறி அருகில் இருக்கும் பஸ் நிலையத்திற்கு வழி காட்டினார்கள்.
'புலிகுலா நிசர்கதாமா' என்ற இடம் மங்களூரில் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும். இதனை சுற்றிப் பார்க்க 'ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?' என்றால் கண்டிப்பாகப் போதாது. நாங்கள் அங்கு சென்ற போதே 4.30 ம்ணி ஆகிவிட்டது. அங்கிருந்து நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு பேட்டரியால் இயங்கும் Buggies எனப்படும் வாகனத்தில் உள்ளே சென்றோம். இந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'புலிகுலா' என்றால் புலிகளின் குளமாம். இங்கு இருக்கும் ஏரியில் புலிகள் நீர் அருந்த வருமாம். இந்த இடம் இப்பொழுது மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இங்கு தாவரவியல் பூங்கா, மிருககாட்சி சாலை, அக்வேரியம், அறிவியல் மையம், 3D கோளரங்கம், தோட்டம், கிராமிய அமைப்பு, ஏரி என்று பார்க்கப் பல இடங்கள் இருக்கின்றன.
நாங்கள் ஏரியில் செஃல்ப் போட்டிங்க் செய்ய கட்டணம் கட்டி பெடல் செய்து கொண்டு சென்றோம். முதலில் பயமாக இருந்தாலும் பின் இலகுவாக இருவரும் இரசித்து படம் எடுத்தபடி உல்லாசமாய் படகு சவாரி செய்தது அற்புத அனுபவம்.
சவாரி முடிந்ததும் ஐஸ் காண்டி சாப்பிட்டபடி அங்கிருந்த பார்க் கில் சுற்றி விட்டு வரும் போதே 6 மணி ஆகி விட்டது. கடைசி buggy வாகனம் 6 மணிக்கு என்பதால் நாங்கள் வாகனம் வரும் இடத்திற்கு சென்றோம். பலர் அங்கு காத்திருந்தார்கள். அங்கிருந்து பஸ் பிடித்து கண்கணாடி வந்து அங்கிருந்து ஆட்டோவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வந்து சேர்ந்த போது 8 மணி ஆகி விட்டது.
அனன்யா ஸ்டார் நைட் டின்னர் முடிந்து வந்திருக்கவில்லை. நாங்கள் இருவரும் இந்த முறை மங்களூர் ஸ்பெஷல் உணவு தான் சாப்பிடுவது என்று தேடி ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். அது ஒரு மிகச் சிறிய இடம் தான். நீர் தோசை, மாங்களூர் போண்டா என்று கிடைத்தனால் அங்கு நழைந்தோம். மகிழ்ந்தோம். லோகல் உணவை சுவைக்க முடிந்தது. சுவைத்து 'லசி' வாங்கி குடித்துவிட்டு ரூமுக்கு வந்தோம்.
சிறிது நேரம் கழித்து வந்தாள் அனன்யா. அவளுக்கு பல கல்லூரி மாணவ மாணவிகளையும், டாக்டர்களையும் பார்த்து அவர்களுடன் இரவு உணவு உண்ணும் ஓர் அரிய வாய்ப்பு. சிறந்த அனுபவம். அவரவர் அன்று செய்ததை பரிமாறிக் கொண்டு அப்படியே உறங்கிவிட்டோம். இரண்டாவது நாள் இனிதே முடிந்தது.
எனவே காலையில் எழுந்து குளித்து சிற்றுண்டி சாப்பிடச் சென்றோம். இன்று இட்லி வடையுடன் மாங்களூர் 'பன்' இருந்தது சிறப்பு.
'மிலாக்ரஸ்' தேவாலயம்:
நாங்கள் அருகில் இருக்கும் 'மிலாக்ரஸ்' சர்ச் பார்க்க ஆட்டோவில் கிளம்பினோம். மிலாக்ரஸ் தேவாலயம் 1680 ல் கட்டப்பட்ட மிகப் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். அதற்குப் பின் பல முறை இந்த சர்ச் புணரமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிக அழகாக இருக்கும் இந்த சர்ச் பார்வையாளர்களை கவரும் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. உள்ளே சென்று சுற்றிபார்த்து விட்டு அங்கேயே அமர்ந்து சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
லேசாக பசிக்க ஆரம்பித்தது. கடைத்தெருவிலேயே சில ஹோட்டல்கள் இருப்பதாக கூகுள் மேப் காட்டியது. அப்பொழுது, இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மங்களூர் ஸ்பெஷல் 'பப்பாஸ்' ஐஸ்க்ரீம் (Pabbas ice-cream) சாப்பிடாமல் போனால் மங்களூர் வந்ததற்கே அர்த்தமில்லை என்று எங்கள் தோழர்கள் கூறினார்கள் என்று அனன்யா சொன்னாள். நாங்கள் விடுவோமா? எங்களது வெற்றிகரமான மங்களூர் பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டாமா? அடி ஜூட், கிளம்பி விட்டோம் 'பப்பாஸ்' ஐஸ்க்ரீம் இடத்தை நோக்கி.
'பப்பாஸ்' (Pabbas):
ஹோட்டலுக்குப் போய் ஃபைனல் பேக்கிங் முடித்தோம். மெசேஜில் கண்டக்டர் நம்பர் வந்ததும் எந்த இடத்தில் ஏற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஹோட்டல் சிப்பந்தியும் அந்த கண்டக்டருடன் பேசி உதவி செய்தது சௌகரியமாக இருந்தது. மிக அருகில் தான் அந்த இடம் என்பதால் அங்கேயே ரிசப்ஷனில் காத்திருந்தோம். நேரமானதும் ஆட்டோ புக் செய்து கிளம்பிவிட்டோம். இனி பஸ் பிடித்து ஊர் திரும்ப வேண்டியது தான்.








